under review

மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை

From Tamil Wiki
Revision as of 11:59, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை பதினொன்றாம் திருமுறையில் 21-வதாக இடம்பெறும் திருமுறை. கபிலதேவ நாயனாரால் இயற்றப்பட்டது. விநாயகக் கடவுளைக் குறித்துப் பாடப்பட்ட முதல் தமிழ்நூல் எனக் கருதப்படுகிறது.

ஆசிரியர்

மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலையை இயற்றிய கபிலதேவ நாயனார் பொ.யு. 8-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று கருதப்பட்டாலும் இவர் இயற்றிய யாப்பு வகைகள் பிற்காலத்தவையாதலால் பொ.யு. 9-ம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவராக இருக்கலாம் என. க வெள்ளைவாரணனார் கருதுகிறார். இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளியலில், கபிலநாயனார் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இளம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம். இவர் பற்றிய வேறு செய்திகள் அறியக் கிடைக்கவில்லை.

நூல் அமைப்பு

மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை இரட்டை மணிமாலை என்னும் சிற்றிலக்கியத்தின் இலக்கணத்திற்கேற்ப நேரிசை வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் ஆகிய இரு பாவகைகளில் மாறி மாறி அமைந்த 20 பாடல்களில் அந்தாதியாக அமைந்தது. இரு பாவகைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கோர்க்கப்பட்டு மணிமாலை போல் அமைகின்றன.

திருமுறைகளில் முருகனைப் பிள்ளையார் என்றும், விநாயகனை மூத்த பிள்ளையார், மூத்தநாயனார் என்றும் குறிப்பிடும் மரபும் உள்ளது. யானைமுகக் கடவுளாகிய விநாயகப் பெருமானின் அருளும், அவர்களுக்கு ஏற்படும் தடைகளை(விக்கினங்களை) அகற்றுவதும் கூறப்படுகின்றன. இந்நூலில் வரும் ‘திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்', ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்' என்ற இருபாடல்களும் இன்றுவரை மக்களால் பாடப்படுகின்றன. விநாயகர், ‘ஆழ்வான்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

விநாயகக் கடவுளைக் குறித்துப் பாடப்பட்ட முதல் தமிழ்நூல் இது ஆகும். ‘அப்பம் அவலோடு எள் உருண்டை கன்னல் வடிசுவையில் தாழ்வான்' (பாடல்-3), ‘வாழைக்கனி பலவின்கனி மாங்கனி தாம் சிறந்த கூழைச் சுருள் குழை அப்பம் எள்ளுருண்டை எல்லாம் துறுத்தும் பேழைப் பெருவயிறு' (பாடல்-4) என்று உணவுப் பொருளில் விருப்பம் உள்ளவராக விநாயகரைக் காட்டுகிறார். இக்கருத்து மக்களிடையே இன்றளவும் வழங்கி வருவது கருதத்தக்கது.

வெண்பா

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை. 1

கட்டளைக் கலித்துறை

கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே. 2

உசாத்துணை

பன்னிரு திருமுறை-இராச வசந்தகுமார், ஆர்கைவ் வலைத்தளம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:31:54 IST