பின்நிலை முயறல்(பெருந்திணை)
பின்நிலை முயறல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண் தலைவனிடம் காதலை இரந்து அவன் பின் நிற்றலைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவனைக் கண்டதால் இழந்த தன் அழகை மீண்டும் பெறவேண்டுமென்று தலைவி, அவன் காதலை இரந்து நிற்றல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
முன்இழந்த நலம் நசைஇப்
பின்நிலை மலைந்தன்று(கொளு 16.2)
வெண்பா
மல்கொண்ட திண்தோள் மறவேல் நெடுந்தகை
தன்கொண்டு மாமை தகை இழந்த - என்காணப்
பெய் களி யானைப் பிணர் எருத்தில் கணடு யான்
கை தொழுதேன் தான் கண்டிலன் (307)
பொருள்: மற்போர் செய்து திண்மையடைந்த தோள்களை உடைய வேல்வீரனான மேம்பட்ட இத்தலைவனைக் கண்டு நான் பசலையுற்று என் அழகிய நிறத்தை இழந்தேன்; யானையின்மீது அமர்ந்திருந்த அவனிடம் என்னைக் காணுமாறு கையைக் குவித்து வேண்டி நின்றேன்; அவனோ என்னைப் பார்க்கவே இல்லை.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2025, 21:06:12 IST