under review

தழிஞ்சி(வஞ்சித் திணை)

From Tamil Wiki
Revision as of 03:44, 5 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தழிஞ்சி வஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று.தழிஞ்சி என்றால் தழுவுதல்.வீரம் தவறாத மறப்பண்பைத் தழுவுதல் தழிஞ்சி.

தழிஞ்சி' என்பது பிறரது கருத்தினைத் தானும் தழுவிக் கொள்ளல். உயிர் பிழைக்க ஒடும் பகைவனின் கருத்தினைத் தழுவியவனாக, அவன் முதுகில் வாள் வீசாமல் அவனைப் பிழைத்துச் செல்ல விடுவதும் தழிஞ்சி.

விளக்கம்

தொல்காப்பியம்

தொல்காப்பியம் புறத்திணையியல் "அழிபடை தட்டோர் தழிஞ்சி" எனக்கூறி, அது, வேந்தர், தம் படைவீரருள் விழுப்புண்பட்டு மீண்டிருக்கும் மறவரைச்சென்று கண்டு, பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக்கோடல் தழிஞ்சி என வகுக்கிறது.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வஞ்சியாரின் போர்ச் செயலுக்கு ஆற்றாது பகை மறவர் முதுகிடும் போது, அவர்மேல் கூரிய வாளினை எறிதல் வீரம் அன்று என்ற மறப்பண்பை விரும்பி உரைப்பது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அழிகுநர் புறக்கொடை அயில வாள் ஓச்சாக்
கழிதறு கண்மைக் காதலித்து உரைத்தன்று
(கொளு 3.20)

வெண்பா

கான்படு தீயில் கலவார்தன் மேல் வரினும்
தான் படை தீண்டா தறுகண்ணான் - வான் படர்தல்
கண்ணிய பின் அன்றிக் கறுத்தார் மறம் தொலைதல்
எண்ணிய பின் போக்குமோ (55)

பொருள்: காட்டில் தோன்றும் நெருப்பு விரைந்து பரவுவது. இந்நெருப்பைப் போல் பகைவர் தன்மேல் பாய்ந்து வந்த போது மட்டுமே அவர்களைத் தாக்கிய வஞ்சி மறவன், வெகுண்டு போரிட்ட பகைமறவர் ஆற்றாது முதுகிட்டு ஓடுவதை எண்ணிய பின்னரும் அவர்மேல் தனது எஃகத்தைப் (வாளினைப்) போக்குவானோ? போக்கான்.

உசாத்துணை

வஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2025, 11:17:19 IST