under review

ச.து.சு. யோகியார்

From Tamil Wiki
Revision as of 16:29, 4 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)


✅Finalised Page

ச.து.சு. யோகியார்
ச.து.சு. யோகியார்

ச.து.சு. யோகியார் (சுப்பிரமணியன் / ச. து. சுப்பிரமணிய யோகி / சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி) (நவம்பர் 30, 1904 – ஜூலை 27, 1963) எழுத்தாளர், தமிழறிஞர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர். சித்தர் மறைஞானத்திலும் யோகத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

சுப்பிரமணியன் என்னும் இயற்பெயர் கொண்ட யோகியார் கேரளாவில் எல்லப்பள்ளியில் துரைசாமி -மீனாட்சியம்மாளுக்கு 1904ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை துரைசாமி ஐயர் ஹிந்தி, பாரசீகம், உருது மொழிகளில் புலமை கொண்டிருந்தார். குரானின் உட்பொருளை விளக்குவதில் வல்லவர். ஐதராபாதில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அவரது 38ஆவது வயதில் மறைந்தார்.

தந்தையின் மறைவுக்குப் பின் குடும்பம் சங்ககிரிக்கு குடிபெயர்ந்தது. சுப்பிரமணியன் அங்கிருந்த தொடக்கப் பள்ளியிலும் பின்னர் ஈரோடு மகாஜன பள்ளியிலும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஒன்பதாவது வயதில் பாலபாரதி எனப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ச.து.சு. யோகியார்
ச.து.சு. யோகியார்

யோகியார் இளமையிலேயே யோகத்திலும், பக்தியிலும், சித்தர்களிடமும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்நிலையில் அவருக்கு உறவிலேயே பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இல்லற வாழ்வில் நாட்டமின்றி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.  குணவேல் சுவாமிகள் என்பவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார். யோகப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் யோகி என்று அழைக்கப்பட்டார்.

திருமணத்தால் அவரது யோக வாழ்வுக்கு இடர் வராதென்று குரு அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டு 1925-ல் கமலம்மாவை மணந்தார்.  இவருக்கு சில குழந்தைகள் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டன. எஸ்.ஆர். அசோக்குமார்(சலன்) என்னும் மகன் இருக்கிறார், அவர் இதழியல் துறையாளர்.

அரசியல் வாழ்க்கை

ச.து.சு. யோகியார் ஆரம்ப காலத்தில் உதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அரசாங்க வேலையை உதறி, காங்கிரஸில் இணைந்தார். சென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். ஜனவரி 22, 1932 அன்று ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார், ராஜாஜி ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் யோகியார். அந்த அனுபவத்தை “எனது சிறைவாசம்” என்ற பெயரில் நூலாக எழுதினார்.

இதழியல்

ச.து.சு யோகியார் (சுதேசமித்திரன்)

திருமணத்துக்குப் பிறகு இதழியல் துறையில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்தார். பத்திரிக்கைகளில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி வந்தார்.

இந்து நாளிதழில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு விமர்சன உரையும் எழுதியுள்ளார். பின்வரும் இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் யோகியார் பணியாற்றினார்.

  • புதுமை
  • பித்தன்
  • குடிநூல்
  • குமாரவிகடன்
  • சுதந்திர சங்கு
  • ஆனந்தபோதினி

இலக்கிய வாழ்க்கை

’புதுமை’ இதழின் ஆசிரியராக இருந்தபோது ஒவ்வொரு இதழின் முதல் பக்கத்திலும் காளிதாசன் என்ற புனைப்பெயரில் கவிதை எழுதியுள்ளார். இதே இதழில் உமர்கய்யாமின் ருபாயத் கவிதையை மொழியாக்கம் செய்து வெளியிட்டார். சுதந்திரச் சங்கு இதழில் இவர் எழுதிய குளத்தங்கரைக் குயில்கள் சிறுகதை வெளியானது.பேயன், காளிதாசன், பித்தன் என்ற புனைப்பெயர்களில் எழுதியிருக்கிறார்.தீவிர காளி பக்தராக இருந்த யோகியார் காளி மீது பல பாடல்களை இயற்றியுள்ளார்

இவருக்கு யோகம் தவிர, தத்துவம், விஞ்ஞானம், தந்திரம், ஜோதிடம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்தது. நாடிஜோதிட நூலான ’தரிக்கால்’ என்ற அச்சில் இல்லாத கிரந்த நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார்.

ஒருமுறை ஈரோடு சென்றிருந்தபோது அவருக்கு சாத்தனார் எழுதிய கூத்தநூல் என்னும் நாட்டிய சாஸ்திரம் குறித்த சுவடி கிடைத்தது. அந்த சூத்திர வடிவிலான நூலைப் படித்து ஏறக்குறைய 1800 சூத்திரங்களுக்கு பதவுரையும் பொழிப்புரையும் எழுதினார். யோகியாரின் இறுதி நாட்களில் அந்த கையெழுத்துப் பிரதியை அச்சிட எண்ணி முதலில் தட்டச்சு செய்வதற்கு கொடுத்தார். தட்டச்சு செய்பவரின் மனைவி தவறுதலாக அந்தக் கையெழுத்துப் பிரதியை எரித்துவிட்டார்.

உடல் நலம் குன்றியிருந்த யோகியாரிடம் மிகுந்த தயக்கத்தோடும் வருத்தத்தோடும் மருத்துவர் வழியாக இத்தகவலை சொன்னார்கள். மனம் தளராமல் மீண்டும் 1800 சூத்திரங்களுக்கும் விளக்கவுரை எழுதி நிறைவு செய்தார். மத்திய சங்கீத நாடக அகாடமியும், மாநில சங்கீத நாடக சங்கமும் சேர்ந்து இதை பதிப்பித்தன.

ச.து.சு யோகியார்

இலக்கிய நண்பர்கள்

ச.து.சு யோகியார் நவீன இலக்கிய முன்னோடிகள் பலருக்கு அணுக்கமானவராக இருந்தார். அவர்களின் நினைவுக்குறிப்புகளில் அவர் பதிவாகியிருக்கிறார். க.நா.சுப்பிரமணியம் யோகியார் குறித்த நினைவுகளை சொல்லும்போது தான் சந்தித்துப் பழகிய மனிதர்களிலேயே மிகவும் சுவாரசியமானவர் என்றும் யோகியார் தன்னை திருமூலர் மரபில் வந்த 49-வது தலைமுறை சித்தர் என்று சொல்வதையும் குறிப்பிடுகிறார். பல நாட்கள் க.நா.சுவும் புதுமைப்பித்தனும் யோகியாரும் புதுமைப்பித்தன் வீட்டு மாடியில் இரவு பேசிக் கொண்டிருக்கும் போது புதுமைப்பித்தன் அடியெடுத்துக் கொடுக்க யோகியார் கவிதை பாடுவதையும் சொல்லியிருக்கிறார்.

திரைப்படத் துறை

ச.து.சு யோகியார் தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன் சில படங்களில் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்:

  • இரு சகோதரர்கள் (1936) – கதை, வசனம், பாடல்
  • பக்த அருணகிரி (1937) - கதை, வசனம், பாடல், இயக்கம்
  • அதிர்ஷ்டம் (1939) - கதை, வசனம், பாடல், இயக்கம்
  • கிருஷ்ணகுமார் (1941) – இயக்கம்
  • ஆனந்தன்(1942) - இயக்கம், தயாரிப்பு
  • லட்சுமி (1953) - வசனம், பாடல்
  • கிருஷ்ண பக்தி (1949) - வசனம்

இதுதவிர சில திரைப்படங்களில் பாடல்கள் மட்டும் எழுதியிருக்கிறார். வானொலிக்கு பல நாடகங்கள் எழுதினார்.

விருதுகள்

1963ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் வழங்கும் சிறந்த திரைப்பட வசன கர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் பெற்றார்

மறைவு

ஜூலை 27, 1963 அன்று காலை ஐந்து மணியளவில் மறைந்தார்.

வாழ்க்கைப் பதிவுகள், நினைவகங்கள்

  • 1932ல் சிறைவாச அனுபவங்களை ’எனது சிறைவாசம்’ என்னும் தன் வரலாற்று நூலாக எழுதினார்.
  • சாகித்திய அகாடமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் “ச.து.சு. யோகியார்” என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் அவரது மகன் எஸ்.ஆர். அசோக்குமார்(சலன்) எழுதி வெளியானது.  

படைப்புகள்

கவிதை நூல்கள்

  • தேசபக்த கீதம் (1924)
  • தமிழ்க்குமரி (1942)
  • கதையைக் கேளடா தமிழா (1952)

கவிதை நாடகங்கள்

  • காமினி (1946) – காவியக் கவிதை
  • பவானி (1956) – குறவஞ்சி
  • நவபாரதம் (1962) - குறவஞ்சி

சிறுகதைத் தொகுப்பு

  • குளத்தங்கரைக் குயில்கள் (1934) – இதழ்களில் வந்தவற்றின் தொகுப்பு
  • மரண தாண்டவம் (1948)

மொழிபெயர்ப்பு

ஆங்கிலம் - தமிழ்

  • ருபயாத் (1963) - கவிதை
  • மனிதனைப் பாடுவேன் (1958) – புதுக்கவிதை
  • அத்தர் – கவிதை
  • இதுதான் ருசியா – உரைநடை
  • கடலும் கிழவனும் (1957) - நாவல்
  • மான்குட்டி (1956) – நாவல்
  • சந்நியாசியும் சர்வாதிகாரியும் (1958) – கட்டுரை
  • வுட்ரோ வில்சன் வாழ்க்கை வரலாறு
  • வால் விட்மேன், ஹெமிங்வே ஆகியோரது ஆங்கிலக் கவிதைகளையும் தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்த்து அளித்துள்ளார்.

தமிழ் - ஆங்கிலம்

  • காரைசித்தர் எழுதிய "கனகவைப்பு" என்ற தமிழ் நூலையும், கம்பராமாயணத்தில், "சீதா கல்யாணம்" என்ற பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ளார்.

பிற நூல்கள்

  • எனது சிறைவாசம் (1932) – தன் வரலாறு
  • கவிபாரதி (1932) – திறனாய்வு
  • சங்கம் வளர்த்த தமிழ் (1956) - திறனாய்வு
  • கவி உலகில் கம்பர்(1979) – உரைநடை
  • கொங்கர் குறவஞ்சி - நாட்டிய நாடகம்
  • சாத்தனார் எழுதிய கூத்த நூலுக்கு (பரதநாட்டியம் பற்றியது) பொழிப்புரையும் பதவுரையும் (1968)

புதுதில்லியில் சுதந்திர தினக் கவிதையை அப்போதைய பிரதமராக இருந்த நேரு முன்னிலையில் பாடி, பாராட்டைப் பெற்றார். அவரது அக்கவிதை, தமிழிலும், ஆங்கிலத்திலும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

யோகியாரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.

உசாத்துணை