under review

பிள்ளைப் பெயர்ச்சி

From Tamil Wiki
Revision as of 23:13, 19 June 2025 by Jayashree (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிள்ளைப் பெயர்ச்சி கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. பிள்ளை எனப்படும் காரிப் பறவை சிலபோது போர்க்களத்தில் தீ நிமித்தம் காட்டும். அந்த தீநிமித்தங்களைக் கருதாமல்போரிட்டு வென்று ஆநிரையை மீட்பர் கரந்தையார். பிள்ளை விலக்கியும் (தடை செய்தும்) அதனை விலக்கியமையால் இத்துறை பிள்ளைப் பெயர்ச்சி எனப் பெயர் பெறுகின்றது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஆநிரையை மீட்கும் போரினைக் கரந்தை மறவன் ஒருவன் மேற்கொண்டான்; வெட்சி மறவர் புரியும் போரினைத் தாங்கினான். அப்போது, காரிப்புள் தீ நிமித்தம் காட்டியது. காட்டவும் அந்நிமித்தத்தைப் பொருட்டாகக் கொள்ளாமல் அதனைப் புறக்கணித்தான்; போரிட்டு நிரையை மீட்டான். மீட்ட அவனுக்குத் தார்மாலையணிந்த கரந்தை மன்னன் தண்ணளி செய்தான். தண்ணளி செய்ததை விளம்புவது பிள்ளைப் பெயர்ச்சி என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 போர் தாங்கிப் புள் விலங்கினோனைத்
தார் வேந்தன் தலை அளித்தன்று(கொளு 2.13)

வெண்பா

பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து (33)

பொருள்: மாறுபடும் பூசலிடத்தே புள்ளொலி தீ நிமித்தமாக ஒலித்து விலக்கவும், களத்தினின்றும் பெயராது, பகைவரை வருத்தும் துன்பத்தைச் செய்தவனாக, பகைவீரரை ஒருவீரன் வெட்டி வீழ்த்துதலைக் கண்டான் அவன் மன்னன். வளையாத கல்லினை - யொத்த தோளினனான அம்மன்னன், அங்ங்னம் போராடிய சினத்தையுடைய இளங் காளைக்கு அப்போதிலேயே, மருத நிலம் பலவும் அளித்து வரிசையளித்தும் பாராட்டினான். 'பிள்ளை பெயர்ப்பப் பெயராது ஆளெறிதலால் பிள்ளைப் பெயர்ச்சி ஆயிற்று.

எடுத்துக்காட்டு

புறநானூறு 259
  • பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்
  • திணை:கரந்தை; துறை: பிள்ளைப் பெயர்ச்சி (செருமலைதலும் ஆம்)

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல்; செல்லல்; சிறக்கநின் உள்ளம்;
முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே.

பொருள்: இடுப்பில் விளங்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! பகைவர்கள் கவர்ந்த ஆநிரை, எருதுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றன. தெய்வத்தின் ஆற்றல் உடலில் புகுந்த புலைத்தியைப் போல் ஆநிரை துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது, இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் ஒளிந்திருப்பதைக் காண்பாயாக. ஆகவே, இப்பொழுது அவற்றை மீட்கச் செல்லாதே. உன் முயற்சியில் நீ சிறப்பாக வெற்றி பெறுவாயாக.

உசாத்துணை

கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:17:13 IST