under review

கையறுநிலை(கரந்தைத் திணை)

From Tamil Wiki
Revision as of 13:15, 6 May 2025 by Logamadevi (talk | contribs)

கையறு நிலை கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. தங்களைப் பேணிய கரந்தையான் ஒருவன் ஆநிரை மீட்புப் போரில் இறந்ததனால் செய்வது இன்னதென்று அறியாத பாணர் வருந்தியதை உரைக்கின்ற துறையாதலின் கையறுநிலை எனப் பெற்றது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போர்க்களத்தில் ஆநிரை மீட்கப் போரிட்ட கரந்தை மறவன் இறந்துபட்டான். அவன், மறவன் மட்டுமன்று; பாணர், பொருநர் முதலிய இசைக் கலைஞர்களான சுற்றங்களைப் பாதுகாத்த புரவலனும் ஆவான். அவனுடைய இறப்புப் பாண்மக்களைச் செய்வதறியாத நிலைக்குக் கொண்டு சென்றது. சென்ற அந்நிலையை உரைப்பது கையறு நிலை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெருவரும் வாள்அமர் விளிந்தோன் கண்டு
கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று
(கொளு 2.11)

வெண்பா

நாப்புலவர் சொன்மாலை நன்னார் படை உழக்கித்
தாப்புலி ஒப்பத் தலைக் கொண்டான் - பூப்புனையும்
நற்குலத்துள் தோனறிய நல் இசை யாழ்த் தொல் புலவீர்
கல்கொலோ சேர்ந்தில எம்கண்(31)

பொருள்: பொற்றாமரைப் பூவினைச் சூடுகின்ற நல்ல பாணர்தம் குலத்திலே பிறந்த, நல்ல இசைத்திறனை உடைய, யாழாற் சிறந்த பழைமையான அறிவினை உடையவர்களே! இவனோ, பவைரது படையினைத்துகைத்து, வலிய புலியினைப் போன்று, இறுதியில் தானும் வீழ்ந்துபட்டனன். இதனைக் கண்டும் எம் கண்கள் சோர்ந்தில. எனின், அவை உணர்வற்ற கற்களாமோ? அவன் போராற்றிய மறத்தைக் கண்டுகளித்த கண்கள், அவன் வீழ்ந்ததும் தாமும் வீழ்ந்தில அதனால் இவை கற்களோ எனக் கூறி வருந்தினர் பாணர்.

உசாத்துணை

கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page