ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
ஆபத்சகாயேஸ்வரர் கோயில்: அன்னியூரிலுள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலம். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இடம்
அன்னியூர் மயிலாடுதுறையிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கல்லணை-மயிலாடுதுறை-பூம்புகார் வழித்தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாப்படுகைக்கு பயணம் செய்யும் வழித்தடத்தில் உள்ளது.
வரலாறு
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தலத்தின் வரலாற்றுப் பெயர்கள் விகுசாரண்யம், பாஸ்கர க்ஷேத்திரம், அன்னியூர். தற்போது இந்த கிராமம் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. சங்கத்தொகை நூலான அகநானூற்றின்படி அன்னி என்ற உள்ளூர் மன்னர் இங்கு வாழ்ந்ததாக குறிப்புள்ளதால் இந்த இடம் அன்னியூர் என அழைக்கப்பட்டிருக்கலாம்.
தொன்மம்
- தக்ஷன் நடத்திய யாகத்தில் பங்கேற்றதற்காக அக்னி பகவான் வீரபத்ரரால் தண்டிக்கப்பட்டார். இந்த பாவத்திலிருந்து விடுபட அக்னி சென்ற பல சிவன் கோவில்களில் அன்னியூரும் ஒன்று. அக்னி இங்கு குளம் அமைத்து சிவனை வழிபட்டார். இந்தக் குளம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் இந்தக் கோவிலின் ஸ்தல விருட்சமான எலுமிச்சை மரத்தின்கீழ் அக்னிக்கு தரிசனம் தந்ததாக நம்பப்படுகிறது. எனவே இங்கு இறைவன் விருக்சாரண்யேஸ்வரர் என்றும் அக்னீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார்.
- ஹரிச்சந்திரன் தன் துன்பங்களிலிருந்து விடுபட சென்ற பல சிவன் கோவில்களில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் சிவன் அவரை ஆசிர்வதித்து துன்பங்களிலிருந்து விடுவித்ததால் ஆபத்சகாயேஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார்.
- மன்மதன் அருகில் உள்ள குருக்கையில் சிவனால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. மன்மதனின் மனைவி ரதி சிவபெருமானிடம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு அவர் மீண்டும் தனது உடல் நிலைக்குத் திரும்பினார். எனவே இங்குள்ள சிவபெருமான் ரதீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
- ரதியின் சாபத்தில் இருந்து விடுபட சூரியன் இந்தக் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
- வருணன், பாண்டவர்கள் இந்த இடத்திற்கு வந்து இறைவனை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது. பாண்டவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் பாண்டவேஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார்.
- தொழுநோயால் பாதிக்கப்பட்ட பானு என்ற பிராமணர் நோய் தீர்க்கும் பொருட்டு சென்ற பல சிவன் கோயில்களில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலும் ஒன்று. அவர் இத்தலத்தின் அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தனது நோயிலிருந்து குணமடைந்தார்.
கோவில் பற்றி
- மூலவர்: ஆபத்சகாயேஸ்வரர், விருக்சாரண்யேஸ்வரர்
- அம்பாள்: பிரகன்நாயகி, பெரியநாயகி
- தீர்த்தம்; வருண தீர்த்தம்/அக்னி தீர்த்தம்
- ஸ்தல விருட்சம்: எலுமிச்சை மரம்
- பதிகம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
- இருநூற்று எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
- இருபத்தியிரண்டாவது சிவஸ்தலம்
- இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
- கிழக்கு நோக்கிய இந்த கோவிலின் பிரதான கோபுரம் கட்டப்படவில்லை
கோவில் அமைப்பு
சிவன், பார்வதி தேவி சன்னதிகளைத் தவிர, சித்தி விநாயகர், முருகன், புனுகீஸ்வரர், மகாலட்சுமி, விசாலாக்ஷி, சந்திரசேகரர், நடராஜர், சனீஸ்வரர், நாகர், சூரியன், பைரவர், நவக்கிரகம் ஆகிய சன்னதிகளும் மண்டபமும் மாடவீதிகளிலும் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சிலைகளைக் காணலாம். இக்கோயிலில் இரண்டு தட்சிணாமூர்த்தி சிலைகள் அருகருகே உள்ளன. மாடவீதியில் ஆதிமூல லிங்கம் என்ற சிவலிங்கம் உள்ளது. இது அக்னிக்கு தரிசனம் தந்த இறைவனைக் குறிக்கிறது. இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் எலுமிச்சை மரம். எனவே இத்தலம் 'விகுசாரண்யம்' என்றும், இறைவன் விகுசாரண்யேஸ்வரர் என்றும் அழைப்பர். இக்கோயிலின் புனித நீர் அக்னி தீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது. இதனை காமசரஸ், சூரிய புஷ்கரணி, வருண தீர்த்தம் என்றும் அழைப்பர். இந்த கோவிலுக்கு ஒற்றை நடைபாதை உள்ளது. இங்கு கொடிக் கம்பம் இல்லை.
சிற்பங்கள்
முருகன் சிலை காதணிகளுடன் உள்ளது தனித்துவமானது. இரண்டாவது நுழைவாயிலின் உச்சியில் அக்னி, சூரியன், வருணன் ஆகியோரை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் எலுமிச்சை மரம். எனவே இத்தலம் 'விகுசாரண்யம்' என்றும், இறைவன் 'ஸ்ரீ விகுசாரண்யேஸ்வரர்' என அழைக்கப்பட்டார். புனித நீர் அக்னி தீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது, மேலும் இது காமசரஸ், சூரிய புஷ்கரணி மற்றும் வருண தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்புகள்
- சூரியன் ஒவ்வொரு ஆண்டும் பங்குனியில் ஐந்து நாட்களுக்கு லிங்கத்தின் மீது தனது கதிர்களை செலுத்துவதன் மூலம் இந்த கோவிலின் சிவபெருமானை வழிபடுவதாக நம்பப்படுகிறது. எனவே இந்த இடம் 'பாஸ்கர ஸ்தலம்' என அழைக்கப்படுகிறது.
- வாழ்வில் எத்தகைய சிரமம் ஏற்பட்டாலும் இங்குள்ள இறைவனை வழிபட்டால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை.
திறந்திருக்கும் நேரம்
- காலை 7.30-11
- மாலை 4.30-7
விழாக்கள்
- வைகாசியில் வைகாசி விசாகம்
- ஆடியில் ஆடி பூரம்
- ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
- ஐப்பசியில் அன்னாபிஷேகம்
- கார்த்திகையில் திரு கார்த்திகை
- தையில் மகர சங்கராந்தி
- மாசியில் மகா சிவராத்திரி
- பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது
- மன்மதனின் மனைவியான ரதி இங்கு சிவனை வழிபடும் நிகழ்வு தமிழ் மாதமான கார்த்திகையில் அனுசரிக்கப்படுகிறது. அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறும்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Jul-2023, 16:23:30 IST