second review completed

எஸ். வையாபுரிப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 19:18, 3 February 2022 by Logamadevi (talk | contribs)


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

எஸ். வையாபுரிப் பிள்ளை

எஸ். வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) தமிழறிஞர்,தமிழ் காலக்கணிப்பு, தமிழ்நூல் பதிப்பு, தமிழிலக்கிய வரலாற்றாய்வு ஆகிய தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பல முகம் கொண்டவர். தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர். மலையாளப் பேரகராதியிலும் பங்களிப்பாற்றியவர். அவருடைய தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த நூல்கள் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு (National Library of India in Kolkata) அன்பளிப்பாக வழங்கப்பட்டன .

பிறப்பு,கல்வி

கவிமணியுடன்

வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் அக்டோபர் 12, 1891-ல் சைவ வேளாளர் குடியில். சரவணப்பெருமாள் பிள்ளைக்கும் பாப்பம்மாள் என்கிற பிரம்மநாயகிக்கும் பிறந்தார். இவரது வீட்டுப்பெயர்கள் சம்பந்தன், பாலறாவாயன், பாலையா போன்றவை.

வையாபுரிப்பிள்ளையின் தாய்வழிப்பாட்டனார் திரு. வையாபுரிப்பிள்ளை நெல்லையின் புகழ்பெற்ற பொறியாளர். அவர் பெயர்தான் வையாபுரிப்பிள்ளைக்கு போடப்பட்டது. வையாபுரிப்பிள்ளையின் குடும்பம் பரம்பரையாகவே தமிழ்ப்புலமை மிக்கது. அவருடைய தாத்தா சங்கரலிங்கம் பிள்ளை தாமிரபரணிப் புராணம் அல்லது பொருநைமாதாப் புராணம் என்ற கவிதை நூலை இயற்றியுள்ளார். பல தோத்திர நூல்களையும் எழுதியுள்ளார் (இந்நூல்கள் தற்போது கிடைக்கவில்லை). திருநெல்வேலி வீரராகவபுரத்தில் கிராம முன்சீப்பாக வெகுகாலம் விளங்கியவர்.பக்திச் சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். வையாபுரிப்பிள்ளையின் தந்தை சரவணப்பெருமாள் பிள்ளை தமிழறிஞர், சைவ ஆய்வாளர்.    

வையாபுரிப்பிள்ளையின் அக்கா தாயம்மாள் சுவர்ணவேலுப்பிள்ளை. இளையவர் சங்கரலிங்கம் பிள்ளை- திருநெல்வேலியில் கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். இன்னொரு தம்பி நடராச பிள்ளை நாகர்கோவில் எஸ்.எல்.பி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

வையாபுரிப்பிள்ளையின் ஆரம்பக்கல்வி திண்ணைப்பள்ளிக் கூடத்திலும் பின்னர் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலியிலும் நடைபெற்றது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறந்த மாணவருக்கான சேதுபதி தங்க மெடல் பெற்றார்.

எஸ். வையாபுரிப்பிள்ளை கல்விநிலையங்களிலும் வெளியிலுமாக தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர்களிடம் கல்வி பயின்றவர்.

வையாபுரிப்பிள்ளையின் ஆசிரியர்கள்
  • சென்னை கிறித்துவக்கல்லூரியில் ஆசிரியர் மறைமலையடிகளார்
  • பாம்பன் தவத்திரு குமரகுருதாச சுவாமிகள்
  • யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர்
  • இந்துக்கல்லுரியில் ஆசிரியர் சிவராம பிள்ளை, ஆசிரியர் எம்.எஸ்.சுப்பிரமணியக் கவிராயர்
  • தொடக்கப் பள்ளிக்கல்வியில் ஆசிரியர் கணபதிப்பிள்ளை

இச்செய்திகள் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் மகள் வயிற்றுப் பெயர்த்தியான பேரா ராதா செல்லப்பன் அவர்களால் அளிக்கப்பட்டவை *

தனிவாழ்க்கை

வையபுரியாரின் ஆராய்ச்சி- அ.கா.பெருமாள்.

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் மனைவி சிவகாமியம்மாள். இவர் தந்தை வேலாயுதம் பிள்ளை ’இராஜசுந்தரம்’ என்ற நாவலை எழுதியவர். வையாபுரிப்பிள்ளைக்கு மூன்று மகள்கள் இரண்டு மகன்கள்.

மகன்கள், மகள்கள்
  • சரோஜினி ’வையாபுரிப்பிள்ளை வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற நூலையும் (1957) தையல் கலை தொடர்பான இரு நூல்களையும் எழுதியுள்ளார்.
  • தங்கம்மாள் ‘என் தந்தையார் பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை’ என்ற நூலை (1991) எழுதியுள்ளார். மலையாளத்தில் கொட்டாரத்தில் சங்குண்ணி நாயர் எழுதிய ஐதிக மாலை (ஏறத்தாழ 1000 பக்கங்கள்) என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். தங்கம்மாளின் மகள் பேராசிரியர் இராதா செல்லப்பன் புகழ்பெற்ற தமிழறிஞர்.
  • மனோன்மணி அம்மாள்.
  • பத்மாவதி.
  • சரவணப்பெருமாள் என்கிற ராஜா- அண்ணாமலைப் பல்கலைக்கழக எந்திரப்பொறியியல் துறைப் பேராசிரியராக இருந்தார்.
  • வேலாயுதன் என்கிற துரை- மருத்துவர்.
  • தினகரன்

திருவனந்தபுரத்தில் வையாபுரிப்பிள்ளைக்கு கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் தொடர்பு ஏற்பட்டது. வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக, "இரசிகமணி" டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்தனர்.

அலுவல்பணிகள்
  • 1914 முதல் 1922 வரை திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் 8 ஆண்டுகள் வழக்கறிஞர்
  • 1923-1925 வரை நெல்லையில் வழக்கறிஞர்
  • 1926-1936 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகராதிப் பதிப்பாசிரியர்
  • 1936-1946 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர்
  • 1951-1954 வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.வையாபுரிப் பிள்ளை

ஆசிரிய வாழ்க்கை

எஸ்.வையாபுரிப்பிள்ளை சென்னை பல்கலைகழகத்திலும் திருவிதாங்கூர் பல்கலைகழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மிகச்சிறந்த மாணவர்கள் அவருக்கு அமைந்தனர். அவர்கள் வையாபுரிப்பிள்ளை சிந்தனை மரபு என்று சொல்லத்தக்க ஓர் ஆசிரிய- மாணவ வரிசையை உருவாக்கினார்கள். மொழி இன பற்றுகளும் பெருமிதங்களும் அற்ற புறவயமான முறைமைகளை முன்வைக்கும் ஆய்வுமுறை, பிறமொழிகளின் வரலாறுகளுடன் இணைத்து இலக்கிய வரலாற்றை ஆராய்தல், பிற அறிவுத்துறைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுதல் என்னும் மூன்று அடிப்படைகள் கொண்டது இந்த சிந்தனை மரபின் பார்வை.

முதன்மை மாணவர்கள்
  • பேரா. வ.அய்.சுப்பிரமணியம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மொழியியல் அறிஞர்
  • ஏ.எஸ். நாராயணசாமி பி.ஓ.எல் Treatment of Nature in Sangam Polity
  • திருமதி. ஜீவா செல்லப்பா பி.ஏ The Manners and Customs of Ancient Tamils
  • செல்வி.கே. ஞானாம்பாள் எம். ஏ. எம்.லிட் Domestic life in Ancient Tamizhakam
  • ஜி. சுப்பிரமணிய பிள்ளை எம்ஏ பி.எல் A Study of Allusions in Sangam Literature (இவர் அண்ணாமலைப் பல்கலை்கழகத் துமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர்)
  • மு.அருணாசலம் எம்.ஏ Development of Popular Poetry in Tamil
  • ஏ.வி. மயில்வாகனன் பி.ஏ (ஆனர்ஸ்) இலங்கை Development of Prose in Tamil
  • க.பொ.இரத்தினம் பி.ஓ,எல், பி.ஏ (இலங்கை) Development of Tamil Prosody
  • ஏ. கிருஷ்ணமூர்த்தி பி.ஓ.எல் A Study of Sangam vocabulary
  • மு.சண்முகம் பிள்ளை Tolkappiyars influence on Tamil Language and Literature
  • ஏ.ஆனந்தா பி.ஓ.எல் இலங்கை Life of the Ancient Tamils
  • எஸ். சேதுகாவலன் பி.ஓ.எல் இலங்கை Principles and History of Literary Criticism
வையாபுரிப்பிள்ளை மறைவுச்செய்தி, கல்கி

இலக்கியவாழ்க்கை

எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆய்வுநூல்

திருவனந்தபுரத்தில் வழக்கறிஞர் பணியில் இருந்த காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தார். இக்காலகட்டத்தில் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் தொடர்பு ஏற்பட்டது. சுவடிகள், கல்வெட்டுகளை ஆராய்வதற்கான அடிப்படைப் பயிற்சியைப் பெற்றார்.

பேரகராதி

1926-ல் வையாபுரிப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். தமிழில் உருவான முதல் பேரகராதி இது. இன்றும் தமிழின் முதன்மை அறிவுச்சாதனையாக விளங்குகிறது.

வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தபோது மலையாள மொழி பேரகராதி பதிப்பிக்கப்பட்டது.

கம்பன் கழகம்

நெல்லையில் வாழ்ந்தபோது ’இரசிகமணி’ டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். மீ.ப.சோமு, நீதிபதி மு.மு.இஸ்மாயில், பேரா.அ.சீனிவாச ராகவன், பக்ஷிராஜ ஐயங்கார் போன்றவர்கள் அதில் ஈடுபட்டனர். மர்ரே ராஜம் நிறுவனம் பதிப்பித்த கம்பராமாயண நூலை இவ்வமைப்பு பிழைதிருத்தி, பாடபேதம் நோக்கி வெளியிட்டது

பதிப்பு வாழ்க்கை

வையாபுரிப்பிள்ளை தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிற்றிலக்கியங்கள், நிகண்டுகள், நாட்டாரிலக்கியங்கள் ஆகியவை அவரால் பதிப்பிக்கப்பட்டன. வையாபுரிப் பிள்ளை பதிப்பித்த 45 நூல்களில் இலக்கியம் / இலக்கணம் 5, சிற்றிலக்கியங்கள் 13, நிகண்டுகள் 6, நாட்டுப்புற இலக்கியம் 1, பிற 20.

வையாபுரிப்பிள்ளை மிகமிக தீவிரமாக ஆய்வுமுறைமையை கடைப்பிடிப்பவர். அவர் தன் கண்ணால் மூலச்சுவடியை பார்க்காமல் நூலை பதிப்பித்ததில்லை. ஒன்றுக்குமேற்பட்ட சுவடிகள் இன்றியும் நூலை பதிப்பித்ததில்லை (சுவடிகள் இல்லை என்பதனால் சித்தர்பாடல்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை) கால ஆராய்ச்சியின் போது ஒரு நூலின் அகச்சான்று, புறச்சான்று இரண்டையும் முறைப்படிக் கொள்ளுதல், இலக்கணவழக்கு, சாஸ்திரக்குறிப்புகள், குறிப்பிட்ட நூலின் வரிகளை மேற்கோள் காட்டல் போன்ற முறைகளைப் பயன்படுத்தினார்.

வையாபுரிப்பிள்ளை தன் வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்களையும், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளையும், ஓலைச்சுவடிகளையும் வைத்திருந்தார். அவர் மறைவுக்குப்பின் அவை கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன

இலக்கிய நண்பர்கள்

எஸ். வையாபுரிப்பிள்ளை கல்விக்காலம் முதலே தமிழின் மறுமலர்ச்சிக்காலப் பேரறிஞர்களுடன் தொடர்பிலும் உரையாடலிலும் இருந்தார். அவருடைய ஆய்வுப்பணிகளில் அவர்களின் பங்களிப்பும் உண்டு. அவர்களில் முக்கியமானவர்கள்

  • ஆர்.கே.சண்முகம் செட்டியார், சுவாமிநாத பிள்ளை (சட்டக் கல்லூரி நண்பர்)
  • பெ.நா.அப்புசாமி (பள்ளிநண்பர்)
  • கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் உடன் பயின்றவர்)
  • பி.ஸ்ரீ.ஆச்சாரியா (திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் உடன் பயின்றவர்)
  • கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (அப்போது மகாராஜா பெண்கள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர்
  • கெ.என்.சிவராஜ பிள்ளை (வையாபுரிப்பிள்ளையின் நெருங்கிய உறவினர்.
  • கெ.என்.குமரேச பிள்ளை (கம்பராமாணச் சொற்பொழிவாளர், கெ.என்.சிவராஜ பிள்ளையிள் இளவல்)
  • இசையரசு தி. இலக்குமண பிள்ளை
  • ஹரிஹர சாஸ்திரி (திருவிதாங்கூர் அரசாங்கத் தொன்னூல் நிலையத்தில் பணியாற்றியவர்)
  • பண்டித முத்துசாமிப் பிள்ளை (தமிழன் பத்திரிகையின் ஆசிரியர்)
  • பி.எஸ்.நடராச பிள்ளை (மனோன்மணியம் சுந்தரனாரின் திருமகனார்)
  • திவான்பகதூர் கோவிந்தப்பிள்ளை (திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்த இருமொழி அறிஞர்).
  • எம்.சி நாராயண பிள்ளை-மலையாள அறிஞர்
  • ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் (நெல்லை நண்பர்)
  • டி.கே.சிதம்பரநாத முதலியார் (நெல்லைநண்பர்)
  • வித்துவான்.மு.சண்முகம் பிள்ளை (ஏறத்தாழ 15 ஆண்டுகள் பேராசிரியரோடு இணைந்து பணிகளில் உதவினார்)

விருதுகள்

  • தமிழ் அகராதி பணிக்காக பிரிட்டிஷ் அரசு வையாபுரி பிள்ளைக்கு ராவ்சாகிப் பட்டம் வழங்கியது.
  • 1953-ல் தமிழ் எழுத்தாளர் சங்கம் அன்றைய ஆளுநர் தலைமையில் வையாபுரிப்பிள்ளையைப் பாராட்டியது.

மறைவு

வையாபுரிப் பிள்ளை பிப்ரவரி 17,1956-ல் தனது 65வது வயதில் காலமானார்.

நினைவுநூல்கள், அமைப்புகள்

நினைவுநூல்கள்

எஸ்.வையாபுரிப்பிள்ளை நினைவுகளை பலர் எழுதியிருக்கிறார்கள்

  • சரோஜினி ’வையாபுரிப்பிள்ளை வாழ்க்கைக் குறிப்புகள்’ (1957)
  • தங்கம்மாள் ‘என் தந்தையார் பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை’ (1991)
  • இராமசுந்தரம் .பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகதெமி வெளியீடு)
அறக்கட்டளை

வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம் அறக்கட்டளை:எஸ்.வையாபுரிப்பிள்ளை மறைவிற்குப்பின் அவரது நூல்கள் பல ஆண்டுகளாகக் கிடைக்கப்பெறாத நிலையில் அவற்றைப் பொருளடிப்படையில் தொகுதிகளாக வெளியிடும் நோக்கில் வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம் அவரது மகள் சரோஜினி அம்மையாரின் முயற்சியால் நிறுவப்பெற்றது. பேராசிரியர் அவர்களின் நெருங்கிய நண்பர் கே.சுவாமிநாதன் இம்மன்றத்தில் தலைவராகச் செயல்பட்டார். 1989-இல் முதல் தொகுதியான இலக்கியச் சிந்தனைகள் என்ற நூல் வெளிவந்தது. தொடர்ந்து வெளிவந்த 6 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் 7 தொகுதிகள் வெளிவந்தன

ஆய்வுப் பங்களிப்பு

எஸ்.வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியங்களை காலவரிசைப்படுத்துவது, இலக்கியங்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவது ஆகியவற்றில் பெரும்பங்களிப்பாற்றியவர். இலக்கியங்களை ஒட்டுமொத்த இந்திய- தமிழ் வரலாற்றின் பின்னணியில், தொல்லியல் சான்றுகளுடன் இணைத்து ஆராயவேண்டும் என்னும் கருத்து கொண்டவர். இலக்கிய ஆய்வுகளை மொழிப்பெருமித நோக்குடன் அகவயமாக அணுகுவதை அவர் ஏற்கவில்லை. தமிழாய்வாளர்களுக்கு சமஸ்கிருதம், ஆங்கிலம், பாலி, பிராகிருதம் போன்ற பிற மொழி அறிதல்கள் இன்றியமையாதவை என்றும், ஆய்வு முடிவுகள் இந்தியாவின் பிறமொழிச்சூழல்களிலுள்ள ஆய்வுகளுடன் கொள்ளும் ஒத்திசைவும் முக்கியமானது என்றும் கருதினார்.

பேரா ராதா செல்லப்பன் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் முதன்மை ஆய்வுக்கொடைகள் என இவற்றைச் சொல்கிறார்

  • சங்க இலக்கியம் என்பது எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமே என்பதை முதன் முதலில் நிறுவி, 1940-இல் சமாஜப் பதிப்பாகச் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார். அதுகாறும் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் என்றறியப்பட்ட நிலையிலிருந்து சங்க இலக்கியம் என்ற பெயரை நிலைநிறுத்தியவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையே.
  • சங்கப் பாடல்கள் பாடப்பெற்ற காலமும் அவை தொகுக்கப்பெற்ற காலமும் ஒன்றல்ல என்று முதலில் தெரிவித்தவர் இவரே. இக்கருத்து இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்து. (தொ.பொ.மீ - - A History of Tamil Literature pp.34)
  • சங்க இலக்கியங்களுள் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவை பிற்பட்டவை என்ற இவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • முச்சங்கங்கள் பற்றிய வரலாறு ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று என்ற பேராசிரியர் கருத்தை அறிஞர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் (மு.வரதராசன். தமிழ் இலக்கிய வரலாறு பக்.29)
  • தொல்காப்பியர் சமணர் என்ற இவர் கருத்துக்கு மாறுபட்ட கருத்து இன்றுவரைத் தோன்றவில்லை.

விவாதங்கள்

  • வையாபுரிப்பிள்ளையின் இலக்கியக் கால ஆராய்ச்சியை தேவநேயப் பாவாணர் போன்ற திராவிட இயக்க பார்வை கொண்டவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் தமிழிலக்கியத்தின் காலத்தை வையாபுரிப் பிள்ளை கூறிய காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால், பொயு 500க்கும் பின்னால் கொண்டுசென்றனர். அதற்கு அகவயமான சொல்லாராய்ச்சிகளையே சான்றாகக் காட்டினர். வையாபுரிப்பிள்ளை அவர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்
  • வையாபுரிப்பிள்ளையின் பேரகராதியில் ஒரு சொல் முதன்முதலில் தமிழிலக்கியத்தில் எங்கு வருகிறது என்னும் அடிப்படையிலேயே வேர்ச்சொல் குறிப்பிடப்பட்டது. தேவநேயப்பாவாணர் போன்றவர்கள் எல்லா பழந்தமிழ்சொற்களும் தமிழ்ச்சொற்களே என்று சொற்புணர்ச்சி முறைகளின் படி வாதிட்டனர். இந்திய மொழிகள் அனைத்துக்கும் தமிழே முதல்மொழி என்பது அவர்களின் தரப்பாக இருந்தது.

நூல் பட்டியல்

எழுதிய நூல்கள்

நாவல்
  • 1958 - ராஜி
சிறுகதைகள்
  • 1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு
ஆராய்ச்சிநூல்கள்
  • 1930 - ஆராய்ச்சியுரைத் தொகுதி-1, ஆசிரியர் வெளியீடு
  • 1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras
  • 1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம்
  • 1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம்
  • 1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி
  • 1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு
  • 1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம்
  • 1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம்
  • 1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம்
  • 1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம்
  • 1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு
  • 1956 - History of Tamil Language & Literature, NCBH
  • 1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம்
  • 1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், மூன்றாம் பதிப்பு
  • 1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம்
பாடநூல் தொகுப்பு
  • இலக்கிய மஞ்சரி முதல் புத்தகம்-பொதுப் பகுதி (நான்காம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ்
  • இலக்கிய மஞ்சரி இரண்டாம் புத்தகம்-சிறப்புப் பகுதி (நான்காம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ்
  • இலக்கிய மஞ்சரி இரண்டாம் புத்தகம்-பொதுப் பகுதி (ஐந்தாம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ்
  • இலக்கிய மஞ்சரி இரண்டாம் புத்தகம்-சிறப்புப் பகுதி (ஐந்தாம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ்
மொழிபெயர்ப்புகள்
  • லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)
  • Shelley (houe's philosophy) (தமிழில்)
  • william Henry Davies (leisure) (தமிழில்)
  • walt whitman கவிதைகள் (தமிழில்)
ஆங்கில நூல்கள்
  • History of Tamil Literature
  • Research in Dravidian Languages

பதிப்பித்த நூல்கள்

அகராதியும் நிகண்டுகளும்
  • தமிழ்ப் பேரகராதி, 1936, சென்னைப் பல்கலைக்கழகம்  
  • அரும்பொருள் விளக்க நிகண்டு தமிழகராதியின் ஆதாரநூற்றொகுதி-2 அருமருந்தைய தேசிகர் 1931. மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, செந்தமிழ்ப் பிரசுரம்-54, மதுரை  
  • கயாதரம் 1939, சென்னைப் பல்கலைக்கழக சென்னை ஸர்வகலாசாலை வெளியீடு  
  • கைலாச நிகண்டு சூடாமணி-சக்தி இதழில் தொடராக வெளிவந்த்து, பிரமாதி ஆண்டு, ஐப்பசி முதல் வைகாசி வரையுள்ள (பங்குளி நீங்கலாக) மாத இதழ்கள், சக்தி காரியாலயம்  
  • நாமதீப நிகண்டு கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் தமிழகராதியின் ஆதாரநூற்றொகுதி-1 1930, பதிப்பாசிரியர் வெளியீடு
  • பொதிகை நிகண்டு, தமிழகராதியின் ஆதாரநூற்றொகுதி-3 கல்லிடைநகர் சாமிநாதக் கவிராயர், 1934. பதிப்பாசிரியர் வெளியீடு
இலக்கியம்
  • சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்) -2 தொகுதிகள் 1940 , சைவசித்தாந்த மகா சமாஜம்
  • சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)-2 தொகுதிகள் 1967, பாரி நிலையம்
  • திருமுருகாற்றுப்படை- புதிய உரை (மூலமும் உரையும்) (சேர்ந்து பதிப்பித்தது), 1933, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • திருமுருகாற்றுப் படை (உரையாசிரியருரையுடன்)- மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை 1943, செந்தமிழ்ப் பிரசுரம்-68
  • புறத்திரட்டு 1938, சென்னை சர்வகலாசாலை
  • திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது) 1933, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • ஸ்ரீ திவ்யப்பிரபந்தம் முதலாயிரம் 1955, மர்ரே.எஸ்.ராஜம்
  • பொருள்முருகாற்றுப்படை 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • அணிமுருகாற்றுப்படை 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • வருமுருகாற்றுப் படை 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • அருள்முருகாற்றுப்படை 1937 சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
இலக்கணம்
  • தொல்காப்பியம் (பொருளதிகாரம்-இளம்பூரணம்)-ஒன்பது இயல்களும் (வ.உ.சியுடன் சேர்ந்து பதிப்பித்தது) 1935, வாவிள்ள இராமஸ்வாமிசாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை
  • தொல்காப்பியம் (பொருளதிகாரம்-இளம்பூரணம்) –மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் (வ.உ.சியுடன் சேர்ந்து பதிப்பித்தது) 1935, 1936, வாவிள்ள இராமஸ்வாமிசாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை
  • தொல்காப்பியம் பொருளதிகார முதற்பாகம் (நச்சினார்க்கினியம்) 1934 எஸ்.கனகசபாபதி பிள்ளை வெளியீடு
  • நவநீதப்பாட்டியல் (உரையுடன்) நவநீதநடன் 1943, மயிலைத் தமிழ்ச்சங்கம்-1. சென்னை
  • களவியற்காரிகை 1931, பதிப்பாசிரியர் வெளியீடு
  • பதினெண்கீழ்க்கணக்கு
  • இன்னா நாற்பது கபிலர் 1944, சக்தி காரியாலயம், தமிழ்ப் பதிப்பக வெளியீடு-2
  • இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார், 1949, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம். சென்னை
  • திரிகடுகமும் சிறுபஞசமூலமும் 1943, சென்னை சர்வகலாசாலை, எண்-15 சென்னை
  • நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் 1944, சக்தி காரியாலயம் தமிழ்ப் பதிப்பக வெளியீடு-1, சென்னை
காப்பியம்
  • கம்பராமாயணம் (யுத்த காண்டம்-முதல் மூன்று படலம்)1932
  • கம்பராமாயணம் (பாலகாண்டம் முதல் ஏழு படலம்) 1933 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு
  • சீவக சிந்தாமணி 1941, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • நாடகம்
  • மனோன்மணீயம், 1922, இரண்டாம் பதிப்பு,பதிப்பாசிரியர் வெளியீடு
  • சாத்தூர் நொண்டி நாடகம் சக்தி 1939, சக்தி காரியாலயம்
  • ஸ்ரீபராங்குச நாடகம் (;ஆழ்வார் நாடகம்) 1936 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு
  • தூது
  • தெய்வச்சிலையார் விறலிவிடு தூது குமாரசுவாமி யவதானி (MPS துரைசாமி முதலியாரோடு சேர்ந்து பதிப்பித்தது 1936 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு-14
  • இராமலிங்கேசர் பணவிடுதூது. அஷ்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் 1934 நவசக்தி மாலை-4வெளியீடு
  • வைத்தியநாத பிள்ளை மீது நெல்விடுதூது; 1933 நவசக்தி வெளியீடு
  • வெள்ளைய ராசேந்திரன் துகில்விடு தூது 1927, எஸ. முத்தையாபிள்ளை வெளியீடு
மாலை
  • தினகர மாலை என்னும் தினகர வெண்பா -1932 பதிப்பாசிரியர் வெளியீடு
  • தென்திருப்பேரை சுவாமி மகரநெடுங்குழைக் காதர் திருப்பணிமாலை, 1933 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு
  • திருக்கோளுர் சுவாமி வைத்தமாநிதி திருப்பணிமாலை, 1933, ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு
உலா
  • இராஜராஜதேவருலா, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு 1924-25, செந்தமிழ்-23-ஆம் தொகுதி
  • திருக்குறுங்குடி அழகிய நம்பியுலா 1932 , திருக்குறுங்குடி ஜீயர் மடம்
  • முப்பந்தொட்டியுலா 1934 சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • கோவை
  • மதுரைக் கோவை நிம்பைச் சங்கர நாரணர், 1934, பதிப்பாசிரியர் வெளியீடு
  • நாட்டுப்புறக் கதைப்பாடல்
  • ராமப்பய்யன் அம்மானை, 1934 நவசக்தி மாலை 1951, சென்னை சர்வகலாசாலை
  • இரவிக்குட்டிப் பிள்ளை போர், 1951 சென்னை சர்வகலாசாலை
பிற
  • பூகோள விலாசம், மருதூர் ஆபத்தாரணர் 1933 நவசக்தி பதிப்பாசிரியர் வெளியீடு
  • சக்தி வகுப்பு 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • கள வகுப்பு 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • சொரூப வகுப்பு 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • கர வகுப்பு, 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • திருவெழுகூற்றிருக்கை 1937, சைவசித்தாந்த மகா சமாஜம்
  • நரிவிருத்தம், 1945

உசாத்துணை