குதிரை மறம்
குதிரை மறம் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. குதிரையின் மறப்பண்பையும், வீரத்தையும் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அம்பினை எய்யும் தொழிலால் சிறப்புப் பெற்ற நெடிய கோட்டையில், நொச்சியாரது தாவும் இயல்புடைய குதிரையின் மறத்தை விரிவாகச் சொல்வது குதிரை மறம் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஏமாண்ட நெடும்புரிசை
வாமானது வகைஉரைத்தன்று(5.5)
வெண்பா
தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறல் மறவர்
ஓங்கல் மதிலுள் ஒருதனிமா - ஞாங்கர்
மயிரணியப் பாங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய ஓடிவரும் (90)
பொருள்: மலைபோல் உயர்ந்த மதில்மேல் ஒப்பனை செய்யப் பெற்ற குதிரை ஒன்று, உழிஞையாரின் உயிரை உண்ண மேகம்போல் ஓடி வருகின்றது. அதனைத் தடுக்காதீர்.
எடுத்துக்காட்டு
புறநானூறு 299
- திணை:நொச்சி துறை: குதிரை மறம்
- பாடியவர்:பொன்முடியார்
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே.
பொருள்: பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய குதிரைகள், உழுந்தின் சிறுதுகள்களைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையனவாக இருந்தன. அவை, கடல்நீரைப் பிளந்துகொண்டு விரைந்து செல்லும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு சென்று போர் செய்தன. நெய்யுடன் கூடிய உணவை உண்டு, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில், கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப்போல சோர்ந்து ஒதுங்கி ஒளிந்து நின்றன.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.