சங்கர ராம்
- றாம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: றாம் (பெயர் பட்டியல்)
- சங்கரர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சங்கரர் (பெயர் பட்டியல்)
சங்கர ராம் (டி.எல். நடேசன்) (மார்ச் 08, 1895 - 1970) தமிழ் நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். பிரிட்டிஷ் ஆட்சியில் அரசு அலுவலக எழுத்தராகப் பணியாற்றினார். வட்டார வழக்கு எழுத்தின் முன்னோடியாகவும், முதல் கொங்கு வட்டார வழக்கு நாவலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
டி.எல். நடேசன் என்னும் இயற்பெயர் கொண்ட சங்கர ராம், மார்ச் 08, 1895 அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்கரை என்னும் கிராமத்தில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
சங்கர ராம், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த அரசு அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். உயரதிகாரியின் அதிகாரத்தினால் பணி நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானார். சில ஆண்டுகளுக்குப் பின் பணியிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளராகச் செயல்பட்டார். சங்கரராமின் தனி வாழ்க்கை குறித்து அறிய இயலவில்லை.
இலக்கிய வாழ்க்கை
சங்கர ராம், 1920 முதல் ஆங்கிலத்தில் சிறுகதைகளை எழுதினார். சங்கர ராமின், ‘தி சில்ட்ரன் ஆஃப் த காவேரி (THE CHILDREN OF THE KAVER) என்ற சிறுகதை பரவலான வாசக வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஆங்கிலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். 1938-ல், ‘தி லவ் ஆஃப் டஸ்ட்’ (THE LOVE OF DUST) என்ற நாவலை எழுதினார். கா.சி. வேங்கடரமணியைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகப் புகழ்பெற்றார்.
சங்கர ராம், 1940 முதல் தமிழில் எழுதினார். பாரதமணி, கலைமகள், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகளை எழுதினார். ‘எழுத்து’ போன்ற இதழ்களில் சங்கர ராமின் கட்டுரைகள் வெளியாகின. தான் ஆங்கிலத்தில் எழுதிய ‘தி லவ் ஆஃப் டஸ்ட்’ நாவலைத் தானே தமிழில் மொழிபெயர்த்து ‘மண்ணாசை’ என்ற பெயரில் வெளியிட்டார். தொடர்ந்து தமிழில் சிறுகதை, புதினங்களை எழுதினார். சிறார்களுக்காகவும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சங்கர ராமின் சில சிறுகதைகள், க.நா.சு.வின் முயற்சியால் ஜோசப் கால்மர் (Joseph Kalmer) மூலம் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
பதிப்பு
சங்கர ராம், சென்னை அபிராமபுரத்தில், ‘ஏ.என்.பூர்ணா அண்ட் கம்பெனி' என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் சில நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். தானே கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குச் சென்று தனது நூல்களை விற்பனை செய்தார்.
சங்கர ராம், பதிப்பகத்தை நடத்துவதற்காகச் சென்னை தாம்பரத்தில் சொந்தமாக மாட்டுப் பண்ணை ஒன்றை அமைத்தார். ஆனால், ஒரு தீ விபத்தில் அப்பண்ணை சேதமடைந்ததால் பதிப்பகத் தொழிலிலிருந்து வெளியேறினார்.
மறைவு
சங்கர ராமின் மறைவு குறித்து முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. சென்னை அபிராமபுரத்தில் தனியாக வாழ்ந்த இவர் 1970-ல் காலமானதாக அறியப்படுகிறது.
மதிப்பீடு
சங்கர ராம் காந்தியச் சிந்தனைத் தாக்கம் கொண்ட எழுத்தாளர். அச்சிந்தனைகள் அவரது படைப்பில் வெளிப்பட்டன. காந்தியின் கிராம மேம்பாட்டுச் சிந்தனையை மையமாகக் கொண்ட பல சிறுகதைகளை எழுதினார். லட்சியவாத நோக்கில் பல படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களுள் ஒருவராகவும், வட்டார வழக்குப் புதினத்தின் முன்னோடி எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
”நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக்கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கர ராம்.” எனக் க.நா. சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
நூல்கள்
புதினம்
- மண்ணாசை (1941)
- பார்வதி (1943)
- காரியதரிசி (1949)
- அருள் பண்ணை (1956)
- நீலா (1957)
- இன்ப உலகம் (1959)
- பெண் இனம் (1979)
குறும் புதினம்
- பானாபரமசிவம் (1960)
- நாட்டாண்மைக்காரன் (1960)
- வீரசிற்பி (1960)
- தீயும் வெடியும்
சிறுகதைத் தொகுப்புகள்
- பாசம் (1944)
- பரிசலோட்டி (1946)
- பஞ்சத்துக்கு ஆண்டி (1952)
- நாளும் கிழமையும் (1960)
- மணமகளின் அன்பு (1965)
- புதையல்
- காணிக்கை (1978)
கட்டுரைத் தொகுப்பு
- உருவமா? உள்ளடக்கமா? (1960)
ஆங்கில நூல்கள்
- The children of the Kaveri, 1926 (Short Stories)
- Creatures All, 1932 (Short Stories)
- The Love of Dust, 1938, (Novel)
- The Awakening, 1954
உசாத்துணை
- இலக்கியச் சாதனையாளர்கள், க.நா. சுப்ரமண்யம், சந்தியா பதிப்பக வெளியீடு.
- படித்திருக்கிறீர்களா?, க.நா. சுப்ரமண்யம், அமேசான் தளம்
- நாவலாசிரியர் சங்கரராம், கால சுப்பிரமணியம், நவீன விருட்சம் தளம்
- சென்னை நூலகம் தளக் குறிப்பு
- மண்ணாசை எனும் மண்ணின் குரல், எஸ். ராமகிருஷ்ணன் தளம்
- தென்றல் இதழ்க் குறிப்பு
- மண்ணாசை நாவல், சென்னை நூலகம் தளம்
- The Love Of Dust, ஆர்கைவ் தளம்
- The children of the Kaveri, தமிழ் இணைய மின்னூலகம்
- ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், சென்னை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 09:56:40 IST