தாமரைச்செல்வி

From Tamil Wiki
Revision as of 11:13, 29 August 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "'''தாமரைச்செல்வி''' தாமரைச்செல்வி என்ற புனைபெயரில் எழுதுகின்ற ரதிதேவி (1953 ஓகஸ்ட் 4) ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறுகதை, குறுநாவல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தாமரைச்செல்வி

தாமரைச்செல்வி என்ற புனைபெயரில் எழுதுகின்ற ரதிதேவி (1953 ஓகஸ்ட் 4) ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறுகதை, குறுநாவல், நாவல் எனத் தொடர்ச்சியாக எழுதிவருபவர் மாத்திரமல்லாமல், தாமரைச்செல்வி சிறந்த ஓவியரும்கூட. புலம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

பிறப்பு - கல்வி

இலங்கையின் வடக்கில் - வன்னியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் - பரந்தன் பிரதேசத்தில் அமைந்துள்ள - குமரபுரம் என்ற கிராமத்தில், சுப்ரமணியம் - இராசம்மா தம்பதிகளுக்கு 1953 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி பிறந்தவர் ரதிதேவி. இவர் தனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் மேற்படிப்பை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் நிறைவு செய்தார்.

ரதிதேவியின் கணவர் பெயர் கந்தசாமி. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அரசி, இளவரசி. ரதிதேவியும் கணவரும் தற்போது ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்துவருகிறார்கள்.

இலக்கிய வாழ்க்கை

ரதிதேவி அவர்கள் “தாமரைச்செல்வி” என்ற புனைபெயருடன் தனது 20 வயதில் எழுத்துலகில் பிரவேசித்தார். 1973 இல் வானொலிக்கு எழுதத் தொடங்கிய இவரின் முதல் சிறுகதை 1974 இல் “ஒரு கோபுரம் சரிகிறது” என்ற தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.

அதைத் தொடர்ந்து, இலங்கையில் தினகரன், சிந்தாமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், சிரித்திரன், சுடர், வெளிச்சம், நாற்று, மாணிக்கம், கலாவல்லி, களம், தாரகை, ஆதாரம், கிருத யுகம், விளக்கு, அமிர்த கங்கை, பெண்ணின் குரல், தாயகம், வளையோசை, மாருதம், ஜீவநதி, யாழ்மதி, நுட்பம் ஆகிய ஈழத்துச் சஞ்சிகைகளிலும் தமிழகத்தில் ஆனந்த விகடன், குங்குமம், மங்கை, இதயம் பேசுகிறது ஆகிய சஞ்சிகைகளிலும் பரீஸ் ஈழநாடு, பரீஸ் ஈழமுரசு, எரிமலை, களத்தில், ஆஸ்திரேலிய மெல்பேர்ன் எதிரொலி, கனடா தாய்வீடு முதலான பத்திரிகைகளிலும் நடு(பிரான்ஸ்), வணக்கம் லண்டன், அக்கினிக் குஞ்சு (ஆஸ்திரேலியா) ஆகிய இணைய சஞ்சிகைகளிலுமாக இவரது இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.

இலக்கிய இடம்

போர் சூழ்ந்த நிலமொன்றின் நடுவிலிருந்துகொண்டு, சனங்களின் பாடுகளை யதார்த்தச் சித்தரிப்போடு எழுதத்தொடங்கிய தாமரைச்செல்வி, தான் சார்ந்த மண்ணினதும் மக்களதும் நெருக்கமான படைப்பாளியாக இலக்கியத்தில் அறிமுகமானார். அவரது எழுத்துக்கள் அறியப்படாத நிலத்தின் அறியப்பட்ட வெளிச்சமாக வெளிவரத்தொடங்கின.

ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும் ‘விவேகி’ சஞ்சிகையின் இணையாசிரியிருமான செம்பியன் செல்வன் - “தாமரைச்செல்வியின் கதைகளில் நெல்லின் வாசனையை, வயல் நிலத்தின் மணத்தை, விவசாயக் குடும்பங்களின் விருப்பங்களை, அவர்களின் தேவைகளை, அவர்களுடைய பிரச்சினைகளை, அந்தக் குடும்பங்களின் சந்தோசங்கள் - துக்கங்களை எல்லாம் காணமுடியும்" - என்கிறார்.

“தாமரைச்செல்வியின் கதைகளைப் படிக்கும்போது அதைப்போன்று ஏராளம் கதைகளை நாம் எழுதிவிடலாம் போலத்தோன்றும். ஆனால், நாம் அப்படி எழுதமுனைந்தால் அது அத்தனை எளிய விசயமில்லை என்று புரியும். இதுதான் தாமரைச்செல்வியின் கதைகளின் தரத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகின்ற விசயம். மிக எளிய மொழியில் - மிகச் சாதாரணமான முறையில் - அவர் தனது கதைகளைச் சொல்லி விடுவார். யதார்த்தவாத எழுத்துமுறையிலேயே நின்றியங்கியவர் தாமரைச்செல்வி. அந்த எழுத்து முறையில் நின்றுதான் அவர் இப்போதும் எழுதுகின்றார்" - என்கிறார் கவிஞர் கருணாகரன்.

சிறுகதை

ஒரு மழைக்கால இரவு - 1998

அழுவதற்கு நேரம் இல்லை - 2002

வன்னியாச்சி - 2005

குறு நாவல்

வேள்வித் தீ - 1994

நாவல்

சுமைகள் - 1977

விண்ணில் அல்ல விடி வெள்ளி - 1992

தாகம் - 1993

வீதியெல்லாம் தோரணங்கள் - 2003

பச்சை வயல் கனவு - 2004

உயிர் வாசம் - 2019

பரிசு - விருது

  • பச்சை வயற் கனவுகள் (நாவல்) - இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருது
  • ஒரு மழைக்கால இரவு (சிறுகதைத் தொகுப்பு) - வடக்கு - கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
  • விண்ணில் அல்ல விடி வெள்ளி (நாவல்) - யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
  • வீதியெல்லாம் தோரணங்கள்” (நாவல்) - வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
  • தாகம் (நாவல்) - கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின்  பரிசு
  • வேள்வித் தீ (குறுநாவல்) - முரசொலி பத்திரிகையின் முதல் பரிசு
  • வீதியெல்லாம் தோரணங்கள் (நாவல்) - வீரகேசரி - யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டியில் இரண்டாம் பரிசு
  • உயிர் வாசம் (நாவல்) தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நாவல் விருது

கௌரவம்

  • அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது (2000)
  • வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது (2001)
  • கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும் (2002)
  • கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது (2003)
  • தமிழ் நாடு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது(2010)
  • கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது(2011)
  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது (2012)
  • யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு (2015)

பாடத்திட்டத்தில்

  • இலங்கை கல்வி அமைச்சின் தமிழ் மொழிக்கான பதினோராம் ஆண்டு பாடத்திட்டத்திலுள்ள தாமரைச்செல்வியின் “இன்னொரு பக்கம்” என்ற சிறுகதை இணைக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழ்நாடு கல்வி அமைச்சின் பதினோராம் ஆண்டு பாடத்திட்டத்தில் தாமரைச்செல்வியின் “பசி” என்ற சிறுகதை இணைக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக ஆய்வு

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், பேராதனைப் பல்கலைக் கழகம், இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்ற எட்டு மாணவர்கள் தமது பட்டப்படிப்பின் இறுதியாண்டில் தமது பாடத்தில், தாமரைச்செல்வியின் ஆக்கங்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

ஆங்கில மொழியில்

தாமரைச்செல்வியின் ஐந்து சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. “இடைவெளி” “வாழ்க்கை” ஆகிய சிறுகதைகள் பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களால் முறையே “The Gap” “The Life”ஆகிய பெயர்களிலும், “பாதை” என்ற சிறுகதை “The Rugged Path” என்ற பெயரில் ஏ.ஜே. கனகரட்ணா அவர்களாலும் “முகமற்றவர்கள்” என்ற சிறுகதை  பெ.இராஜசிங்கம் அவர்களால் “Faceless People” என்ற பெயரிலும் “எங்கேயும் எப்போதும்” என்ற சிறுகதை “The Inevitable” என்ற பெயரில் K.S. சிவகுமாரன் அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

சிங்கள மொழியில்

தாமரைச்செல்வியின் “ஒரு மழைக்கால இரவு” என்ற சிறுகதை திருமதி.ஜெயசித்ரா அவர்களாலும், “வன்னியாச்சி” என்ற சிறுகதை திருமதி பெ.அனுராதா ஜெயசிங்க அவர்களாலும், “வாழ்க்கை” என்ற சிறுகதை பேராசிரியர் பியசீலி விஜயமான அவர்களாலும் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

யேர்மன் மொழியில்

தாமரைச்செல்வியின் “ஓட்டம்’” என்ற சிறுகதை எல்வின் மாசிலாமணி அவர்களால் யேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குறும்படங்கள்

தாமரைச்செல்வியின் “பசி” என்ற சிறுகதை தமிழ்நாடு இமயவர்மன் என்பவரால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டு, இலண்டனில் நடைபெற்ற 'விம்பம்" குறும்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர் விருது பெற்றது.

1996 (இடைவெளி) என்ற சிறுகதை இயக்குனர் மகேந்திரனாலும் “பாதணி” என்ற சிறுகதை திரு.ஜான்.மகேந்திரனாலும் “சாம்பல் மேடு” என்ற சிறுகதை திரு. திலகனாலும் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

“பாதை” “வாழ்க்கை” ஆகிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.