டி.இலட்சுமண பிள்ளை

From Tamil Wiki
தி. இலட்சுமண பிள்ளை
இலட்சுமண பிள்ளை
இலட்சுமண பிள்ளை, சுருதி இதழ்
இலட்சுமணபிள்ளை
இலட்சுமணபிள்ளை
இலட்சுமணபிள்ளை அண்ணாமலைச் செட்டியாருடன்

டி.இலட்சுமண பிள்ளை (T Lakshmana Pillai) (3 மே 1864 – 23 ஜூலை 1950) (தி. இலட்சுமண பிள்ளை, டி.லட்சுமண பிள்ளை). தமிழிசை அறிஞர். இசைப்பாடலாசிரியர், பாடகர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். நீலகண்ட சிவனின் மாணவர்.திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக்கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அமெரிக்க சிந்தனையாளர் ரால்ஃப் வால்டோ எமர்சன் மேல் கொண்ட பற்றினா. அமரசேனாப்ப்ரியா என்னும் ராகத்தை அவர் பெயரில் உருவாக்கினார்

பிறப்பு, கல்வி

இலட்சுமண பிள்ளையின் முன்னோர் தமிழகத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த சைவ வேளாளர்கள். பொயு 1770 ல், கார்த்திகைத் திருநாள் ராமவர்மா ஆட்சிக்காலத்தில் இலட்சுமண பிள்ளையின் தாத்தா முத்துக்குமராசாமிப் பிள்ளை திருவனந்தபுரத்திற்கு குடியேறினார். அதன்பின் அவர் அன்று புதிதாக உருவாகி வந்த ஆலப்புழைக்கு சென்று வணிகம் சென்றார். முத்துக்குமாரசாமி பிள்ளையின் மகன் திரவியம் பிள்ளை திருவிதாங்கூர் அரசின் வலியமேலெழுத்து என்னும் கணக்காயர் பதவி வகித்தார். அவர் மனைவி மாவேலிக்கரையைச் சேர்ந்தவர்.

இலட்சுமண பிள்ளை 3 மே 1864 ல் திரவியம் பிள்ளைக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். அவருடைய அண்ணன் முத்துக்குமாரசாமிப் பிள்ளை கவிஞரும் தமிழறிஞருமாக அறியப்பட்டவர். இளவரசர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தமிழ் கற்பித்தவர்.

லட்சுமண பிள்ளை திருவனந்தபுரத்தில் பள்ளிக்கல்வி பெற்றார்.1884ல் மகாராஜா கல்லூரியில் தத்துவத்தில் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். சட்டம் பயில திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்தாலும் அரசுப்பணி கிடைத்தமையால் சட்டக்கல்லூரிப் படிப்பை கைவிட்டார். திருவிதாங்கூர் அரசின் சார்பில் 1885ல் சென்னையில் கணக்காயர் பயிற்சி பெற்றார்.

இசைக்கல்வி

இசையின் தொடக்கக் கல்வியை விழியிழந்த பாடகரான பரவூர் பாப்பு பிள்ளையிடமிருந்து கற்றார். பின்னர் அவர் தம்பி வேலுப்பிள்ளை பாகவதரிடம் வாய்ப்பாட்டு பயின்றார். வீணை அய்யா பாகவதரிடம் வீணையிசை பயின்றார். ஆவனஞ்சேரி பிச்சு பாகவதரிடம் விரிவாக இசைபயின்றார். பிச்சு பாகவதர் தியாகையரின் மாணவரும், அரண்மனைப் பாடகர் பதவியில் இருந்தவருமான ரகுபதி பாகவதரிடமும் , ராகவ பாகவதரிடமும் இசைபயின்றவர்.

தியாகையரின் மாணவரிடம் இசை பயின்றாலும் இலட்சுமணபிள்ளை தன்னை தியாகையர் மரபைச்சேர்ந்தவராகச் சொல்லிக்கொள்ளவில்லை. தியாகையரை அவர் ஒரு பக்திவழிபாட்டு மனநிலை இல்லாமல் ஓர் இசைமேதையாகவே அணுகுவதை அவருடைய தன்வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன

இலட்சுமணபிள்ளை தன் இல்லத்தருகே வாழ்ந்த அரண்மனை வித்வான் சாத்து பாகவதரின் வீணையிசையை ஒவ்வொரு நாளும் கேட்கும் வழக்கம் கொண்டிருந்தார். சாத்து பாகவதரின் இல்லத்துக்கு வருகைதரும் ரகுபதி பாகவதர், வசசேரி ராம பாகவதர், அப்பன்கோயில் சுப்பையா பாகவதர், மகாதேவ பாகவதர் ஆகியோரிடம் தொடர்ச்சியாக இசைக்கல்வி பெற்றதாக இலட்சுமண பிள்ளை குறிப்பிடுகிறார்.

1886 ல் தன் 21 ஆவது வயதில் இலட்சுமணபிள்ளை திருவிதாங்கூர் அரசின் சார்பில் ஆங்கிலமுறை கணக்கெழுத்து பயிலும்பொருட்டு சென்னை பிரிட்டிஷ் அரசின் தலைமைக் கணக்காயர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சென்னையில் இசையறிஞர்கள் வைத்தியநாத சாஸ்திரி, சேஷகிரி சாஸ்திரி ஆகியோரின் அறிமுகம் பெற்றார். சரப சாஸ்திரியின் புல்லாங்குழலிசை, சிவக்கொழுந்து தேசிகரின் நாதஸ்வர இசை ஆகியவற்றை கேட்டு தன் இசையறிவை விரிவாக்கிக் கொண்டதாக லட்சுமணபிள்ளை குறிப்பிடுகிறார்.

திருவனந்தபுரம் திரும்பிய இலட்சுமண பிள்ளை வீணை கல்யாணகிருஷ்ணையர், பரமேஸ்வர பாகவதரின் மைந்தர் மகாதேவ ஐயரின் வாய்ப்பாட்டு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அவர்களிடமிருந்தும் இசை கற்றார்.

இலட்சுமண பிள்ளையை நீலகண்ட சிவம் மாணவராகச் சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் இலட்சுமண பிள்ளையின் தன்வரலாற்றுக் குறிப்புகளில் அதற்கான நேரடி ஆதாரம் இல்லை.

தனிவாழ்க்கை

இலட்சுமண பிள்ளையின் தந்தை

திருவிதாங்கூர் அரசுப்பணியில் தன் 1884ல் தன் 2ஒ வயதில் கணக்காயராக நுழைந்த இலட்சுமண பிள்ளை 1920ல் கருவூல மேலதிகாரியாக ஓய்வுபெற்றார் அவருக்கும் அன்றைய திருவிதாங்கூர் திவானுக்கும் பூசல்கள் இருந்தமையால் அவருக்குரிய பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. ஓய்வுபெற்றபின் இலட்சுமணபிள்ளை திருவனந்தபுரம் இசைக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.திருவிதாங்கூரின் ஸ்ரீமூலம் சபையின் கௌரவ உறுப்பினராக பணியாற்றினார் லட்சுமண பிள்ளையின் மூத்த மகள் லட்சுமி அம்மாள் சென்னை பல்கலையில் பட்டம்பெற்று திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் இசையாசிரியையாக பணியாற்றினார்.லட்சுமண பிள்ளையின் மகன் வீரகுமார் அகாலமரணம் அடைந்தமையால் அவர் தன் பாடும்வல்லமையை இழந்தார். அதன்பின் வீணையில் இசைப்பதை மட்டும் செய்துவந்தார்.

தத்துவநிலைபாடுகள்

தத்துவக் கல்வியின் போது லட்சுமண பிள்ளையை பெரிதும் கவர்ந்தவர் அமெரிக்க தத்துவப்பேச்சாளர் ரால்ஃப் வால்டோ எமர்சன். அவர்மேல் கொண்ட பற்றால் பின்னாளில் அமரசேனாப் பிரியா என்னும் ராகத்தை உருவாக்கினார். திருவனந்தபுரத்தில் புன்னன் சாலையில் அமைந்த தன் இல்லத்துக்கு எமர்சன் வில்லா என்று பெயரிட்டார்.

இசைவாழ்க்கை

இலட்சுமண பிள்ளை அவருடைய 14 ஆவது வயதில் வாதநோயால் அவதிப்பட்டபோது பந்துவராளி ராகத்தில் திருச்செந்தூர் வேலவனே சிறியோனைக் காத்தருள்வாய் என்ற கீர்த்தனையை இயற்றினார். 27 வயது முதல் தான் இயற்றிய கீர்த்தனைகளே குறிப்பிடத்தக்கவை என இலட்சுமண பிள்ளை கருதினார்.

இசைப்பாடல்கள்

இலட்சுமண பிள்ளை 80 ராகங்களில் இசைப்பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் 20 ராகங்கள் மேளகர்த்தா ராகங்கள். மிக அதிகமாக தோடி ராகத்தில் பத்து பாடல்களை இயற்றியிருக்கிறார். கானடாவில் 8, பூர்விகல்யாணியில் 7. அவரே இரண்டு ராகங்களை உருவாக்கினார். ஸவிதமார்கினி, அமசேனாப்பிரியா

இசைநாடகங்கள்

மறைவு

இலட்சுமண பிள்ளை 23 ஜூலை 1950 ல் மறைந்தார்.

கௌரவங்கள், விருதுகள்

திருநெல்வேலியில் 1934ல் நடைபெற்ற முதல் தமிழிசை மாநாட்டில் லட்சுமண பிள்ளை இசைத்தமிழ்ச் செல்வர் என்று சிறப்பிக்கப்பட்டார். நெல்லையில் நடைபெற்ற இரண்டாம் தமிழிசை மாநாட்டில் அவருடைய உருவப்படம் திறக்கப்பட்டது.

நூல்கள்

Travancore music, musicians & composers

உசாத்துணை