தி. தேசிகாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 17:57, 22 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "தி. தேசிகாச்சாரியார் (பிறப்பு: 1868) திருச்சியின் முக்கிய ஆளுமை. அரசியல்வாதி, பழங்கால நாணயங்கள், கல்வெட்டுக்கள் ஆய்வாளர். புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தொகு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தி. தேசிகாச்சாரியார் (பிறப்பு: 1868) திருச்சியின் முக்கிய ஆளுமை. அரசியல்வாதி, பழங்கால நாணயங்கள், கல்வெட்டுக்கள் ஆய்வாளர். புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தொகுத்து வெளியிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

தி. தேசிகாச்சாரியார் 1868இல் செங்கற்பட்டு மாவட்டம் கோயிலாம்பாக்கத்தில் பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை

திருச்சி நகராட்சியின் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும் பணியாற்றினார். 1913இல் திருச்சி மாகாண காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை நடத்தினார். திருச்சி நகராட்சி மன்றத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார். 1909 முதல் 1911 வரை திருச்சி நகராட்சித் தலைவராகப் பதவிவகித்தபோது மலைக்கோட்டையில் குடிநீர்தொட்டியைக் கட்டினார். 1917இல் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது மாமுண்டி ஆறு, மருதையாறு மற்றும் பல ஓடைகளிலும் சிற்றாறுகளிலும் பாலங்கள் கட்டினார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பஞ்சாயத்து மன்றங்கள் செயல்பட சட்டங்கள் இயற்றினார். அனைத்திந்திய அளவில் பல சட்டமன்ற ஆய்வுக் குழுக்கள், நீதிவிசாரணைக் குழுக்கள், நிலங்கள் பற்றிய சட்ட நீதி விசாரனைக் குழுக்கள், நிலங்கள் பற்றிய நீதிவிசாரணைக் குழுக்கள், நிலங்கள் பற்றிய சட்டங்கள், ஆய்வுக்குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

கோவில் பணிகள்

சட்டமன்றத்தில் இருந்தபோது இந்து அறநிலையத்துறையின் கீழ் பல ஆலயங்களைக் கொண்டு வந்தார். கோவில் நிர்வாகச் சீர்திருத்தங்கள், சொத்துக்களின் வரவு செலவு பற்றிய நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான 57 கிராமங்களை அரசு எடுத்துக் கொண்டதை எதிர்த்துப் போராடினார். ஸ்ரீரங்கம் கோவில் நிதிப்பற்றாக்குறையைப் போக்க பரிசுச்சீட்டுத்திட்டத்தினைக் கொணர்ந்து அதன் வழி கோவிலுக்கு பல நிலங்கள் வாங்கினார். ஸ்ரீரங்கம் கோவில், உறையூர் நாச்சியாரம்மன் கோவிலுக்கு திருப்பணிகள் செய்தார்.

சமூகப் பணிகள்

தி. தேசிகாச்சாரியாரின் முயற்சியால் திருச்சிரப்பள்ளி மின் வழங்கு நிலையம் சேஷாயி சகோதரர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தேசியக்கல்லூரியின் வளர்ச்சியில் பங்காற்றினார்.

ஆய்வுப்பணி

தென்னிந்திய கல்வெட்டுத்துறை, நாணய ஆய்வுத்துறைப்பணியில் ஈடுபாடு கொண்டவர். ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். பழங்காலத்து நாணயங்கள் பற்றிய வரலாற்று ஆராய்ச்சி செய்தார். புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தொகுத்து வெளியிட்டார்.

விருது

  • ஆங்கில அரசு இவருக்கு திவான் பகதூர் பட்டம் அளித்தது.
  • ஆங்கில அரசு இவரது பொதுப்பணிகளை பாராட்டி ஒரு பாலத்திற்கு சர்.டி. தேசிகாச்சாரி பாலம் என்று பெயரிட்டது.

உசாத்துணை

  • நடந்தாய் வாழி திரிச்சிரப்பள்ளி: சு. முருகானந்தம்