first review completed

மகரிஷி

From Tamil Wiki
Revision as of 21:58, 21 August 2022 by Jeyamohan (talk | contribs)
எழுத்தாளர் மகரிஷி (இளம் வயதுப் படம்)

மகரிஷி. (டி.கே. பாலசுப்ரமணியம்; மே 1, 1932 - செப்டம்பர், 28, 2019) பொது வாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவர். குடும்பச் சூழலில் பெண்களின் வாழ்க்கையை மையமாக்கிய புகழ்பெற்ற நாவல்களை எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

மகரிஷி, தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், மே 1, 1932 அன்று டி.என்.கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு பிறந்தார். புகுமுக வகுப்புவரை (பி.யூ.சி) பயின்றார்.

தனி வாழ்க்கை

புகுமுக வகுப்பு படிக்கும்போதே சேலம் மின்சாரவாரியத்தில் பணி கிடைத்தது. ஆவணக்காப்பு அலுவலக உதவியாளர் ஆகப் பணிபுரிந்தார். சேலத்தில் நூலகம் ஒன்றில் பணிபுரிந்த பத்மாவதியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களது மகனின் பெயர் ராமகிருஷ்ணன். மகள் காயத்ரி.

மகரிஷி
ஸ்படிகம் நாவல் - மகரிஷி

இலக்கிய வாழ்க்கை

மின்சாரவாரியத்தில் பணியாற்றிக்கொண்டே ‘மகரிஷி’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். முதல் படைப்பான “பனிமலை” என்னும் நாவல், 1962-ல் வெளியானது. மதுரையைச் சேர்ந்த மீனாட்சி புத்தகநிலையம் இதனை வெளியிட்டது. தொடர்ந்து கல்கி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள் எழுதினார்.

பஞ்சபூதத் தத்துவங்களின் பின்னணியைத் தலைப்பாகக் கொண்டு “மண்ணின் மாண்பு” (நிலம்), “மகாநதி” (நீர்), “அக்னி வளையம்” (நெருப்பு), “எதிர்காற்று” (காற்று), “மேக நிழல்” (ஆகாயம்) போன்ற படைப்புகளைத் தந்திருக்கிறார் மகரிஷி.நூற்றிற்கும் மேற்பட்ட நாவல்கள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

காந்தியக் கொள்கையை முன்வைக்கும் மகரிஷியின் நாவல் ‘ஸ்படிகம்.' இது கல்கியில் காந்தியின் நூற்றாண்டையொட்டி அக்டோபர் 5, 1969 இதழில் வெளியானது. இதனை ஆன்டி சுந்தரேசன் “Pure As a Crystal" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரே, தெலுங்கிலும் அந்தக் குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார்.

இலக்கியச் செயல்பாடுகள்

அகில இந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

திரைப்படம்

மகரிஷியின் கதையை ஒட்டி வெளிவந்த திரைப்படங்கள்

  • என்ன தான் முடிவு? (பனிமலை) 1965 - இயக்கம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
  • பத்ரகாளி 1976- இயக்கம் ஏ.சி.திருலோக்சந்தர்
  • புவனா ஒரு கேள்விக்குறி 1977 - இயக்கம் எஸ்.பி.முத்துராமன்
  • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 1977 - இயக்கம் தேவராஜ் மோகன்
  • வட்டத்துக்குள் சதுரம் 1978 - இயக்கம் எஸ்.பி.முத்துராமன்
  • நதியைத் தேடிவந்த கடல் 1980 - இயக்கம் பி.லெனின்

வானொலி, தொலைக்காட்சி

மகரிஷியின் நாவலான ‘பூர்ணிமா’ தொலைக்காட்சித் தொடராக வெளியாகியது . ’அண்ணா’, ‘பட்டுக்குடை’, ‘செல்லியம்மன் திருவிழா’, ‘சத்தியசோதனை’ போன்றவை இவரது பிற தொலைக்காட்சித் தொடர்கள்.

‘சூரியப் பாதை’, ’வீரசுந்ததிரம்’ போன்றவை மகரிஷியின் குறிப்பிடத்தகுந்த வானொலித் தொடர்கள்.

மறைவு

உடல்நலக்குறைவால், செப்டம்பர், 28, 2019 அன்று சேலத்தில் காலமானார், மகரிஷி.

விருதுகள்

  • கவியோகி சுத்தானந்த பாரதியார், மகரிஷிக்கு, “நாவல் மகரிஷி” என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
  • Salem Metro Jaycees என்ற அமைப்பு, மகரிஷிக்கு Man of Excellence of Salem என்ற விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது.
  • எழுத்துச் சித்தர் விருது
  • நாவல் திலகம்
  • நாவல் மணி

இலக்கிய இடம்

பொதுவாசிப்பிற்குரிய பல படைப்புகளைத் தந்தவர் மகரிஷி. மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது நாவல்கள் பலவற்றில் முன்வைத்தவர். மகரிஷி பற்றி, திருப்பூர் கிருஷ்ணன், “மகரிஷி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்னுமளவு அவரது எழுத்துக்களை அனைத்துப் பத்திரிகைகளும் விரும்பி வெளியிட்டன. அவர் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியான ஆன்மிகவாதியாகத் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிவந்தார் [1] ” என்று குறிப்பிடுகிறார்.

மகரிஷியின் இலக்கிய இடம் பற்றி ஜெயமோகன், “பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். 'நதியைத் தேடிவந்த கடல்', 'வட்டத்திற்குள் ஒரு சதுரம்' என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவை.மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை. [2]” என்று மதிப்பிடுகிறார்.

மகரிஷி நாவல்கள்-1
மகரிஷி நாவல்கள்-2

நூல்கள்

நாவல்கள்
  • பனிமலை
  • பூர்ணிமா
  • பச்சை வயல்
  • ஜோதி வந்து பிறந்தாள்
  • நதியைத் தேடிவந்த கடல்
  • வட்டத்துக்குள் சதுரம்
  • யாகம்
  • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
  • நிலவைத் தேடி
  • மகாநதி
  • உயிர்த்துடிப்பு
  • மேகநிழல்
  • எதிர்காற்று
  • பனிச்சுவர்
  • ஈரப்புடவை
  • புழுதிப் புயல்
  • கடல் நுரை
  • இலையுதிர்காலம்
  • விழாக் கோலம்
  • ஒரு புதிய பூ
  • காந்தமுனை
  • அக்கினி வளையம்
  • சக்கரம் இனி சுழலும்
  • அண்ணா
  • ஒன்றுக்குள் ஓராயிரம்
  • துயரங்கள் உறங்குவதில்லை
  • ஒரு முன்பனிக்காலம்
  • பனிப்போர்
  • நிழலைத் தேடியவர்கள்
  • அதுவரையில் காஞ்சனா
  • வண்டிச்சக்கரம்
  • பாடிப் பறந்தவள்
  • தேர்க்கால்
  • விட்டில் அணைத்த விளக்கு
  • புதிய அர்த்தங்கள்
  • வேதமடி நீ எனக்கு
குறுநாவல்கள்
  • சுயரூபம்
  • வெண்சங்கு
  • வாழ்ந்து காட்டுவோம்
  • இப்படியே ஒரு வாழ்க்கை
  • அந்தப்பூனை
  • ஸ்படிகம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • பார்வையிலே சேவகனாய்
  • தேர்ந்நெடுத்த முத்துக்கள் (அம்ருதா தொகுத்த மகரிஷியின் 10 சிறுகதைகள் தொகுப்பு)
கட்டுரைகள்

ஒரத்தநாட்டிற்குச் சமர்ப்பணம்

உசாத்துணை

இணைப்புக் குறிப்புகள்

  1. அமைதியான ஆன்மிகவாதியாக தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கியவர்! - Dhinasari Tamil
  2. அஞ்சலி மகரிஷி-ஜெயமோகன்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.