சுகிர்தராணி
சுகிர்தராணி (பிறப்பு: 1973) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சுகிர்தராணி ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் 1973-ல் பிறந்தார். பொருளாதாரம், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகின்றார்.
இலக்கிய வாழ்க்கை
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். கைப்பிடித்து என் கவிதை கேள், இரவு மிருகம், அவளை மொழிபெயர்த்தல், தீண்டப்படாத முத்தம், காமத்திப்பூ, இப்படிக்கு ஏவாள் ஆகியவை இவரது படைப்புகள்.'அப்பாவின் ஞாபக மறதி’ கவிதை ‘கண்ணாடி மீன்’ என்னும் குறும்படமாக எடுக்கப்பட்டது. சுகிர்தராணியின் 'அவளை மொழிபெயர்த்தல்' கவிதைத் தொகுப்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டது. கல்லூரிகளில் இவரது கவிதைகள் பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சுகிர்தராணியின் சில கவிதைகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஜெர்மனி நாட்டின் பண்பாட்டுத்துறை சார்பாக அழைக்கப்பட்டு கவிதைகுறித்த கூட்டங்களிலும் கவிதை வாசிப்பிலும் கலந்து கொண்டார். 1996-2016 வரை சுகிர்தராணி எழுதிய கவிதைகளை காலச்சுவடு பதிப்பகம் முழுத்தொகுப்பாக ‘சுகிர்தராணி கவிதைள்’ என்ற பெயரில் வெளியிட்டது.
இலக்கிய இடம்
“பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன் இக்கவிதைகள். காதல்,காமம்,வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண் சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது” என கவிஞர் சுகுமாரன் மதிப்பிடுகிறார்.
விருதுகள்
- தேவமகள் கவித்தூவி விருது
- பெண்கள் முன்னனி சாதனையாளர் விருது
- புதுமைப்பித்தன் நினைவு விருது
- நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும் சுந்தர ராமசாமி விருது
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- கைப்பிடித்து என் கவிதை கேள் (பூங்குயில் பதிப்பகம்: 2002)
- இரவு மிருகம் (காலச்சுவடு பதிப்பகம்: 2004)
- அவளை மொழிபெயர்த்தல் (காலச்சுவடு பதிப்பகம்: 2006)
- தீண்டப்படாத முத்தம் (காலச்சுவடு பதிப்பகம்: 2010)
- காமத்திப்பூ (காலச்சுவடு பதிப்பகம்: 2012)
- இப்படிக்கு ஏவாள் (காலச்சுவடு பதிப்பகம்: 2016)
இணைப்புகள்
- பெண்ணின் வலியைப் பெண் எழுதுவதே சரி: சுகிர்தராணி பேட்டி
- கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்: keetru
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.