கு. மகுடீஸ்வரன்
கு. மகுடீஸ்வரன் (பிறப்பு: டிசம்பர் 11, 1959) தமிழாசிரியர், ஆய்வாளர், பதிப்பாசிரியர், கவிஞர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தக்கை ராமாயணம், தலைய நல்லூர் குறவஞ்சி போன்ற பாடல்களை சுவடியிலிருந்து நூலாகப் பதிப்பித்தவர். சமணக் காப்பியத் தலைவர்கள் நூலுக்காக மூவேந்தர் விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
கு. மகுடீஸ்வரன் டிசம்பர் 11, 1959 அன்று பழனி மாவட்டத்தில் உள்ள வாகரை கிராமத்தில் பிறந்தார். தந்தை குமரவேல், தாய் குப்பாத்தாள், அக்கா முருகாத்தாள்.
வாகரை ஊராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். பி.யூ.சி. படிப்பை பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார். காமராஜர் பல்கலைக்கழகத்தில் “பாட்டியல் நூல்களில் சமூகம்” என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் “சமணக்காப்பியங்களில் தலைவர்கள்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
1995 ஆம் ஆண்டு எஸ். சாந்தி தேவியை திருமணம் செய்து கொண்டார். கு. மகுடீஸ்வரன், சாந்தி தேவி தம்பியதியருக்கு பாரதி, கதிர்நிலா என இரண்டு மகள்கள்.
1992 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு வருடம் தாராபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டு ஈரோடு வாசவை கல்லூரியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன்பின் கோபி கலைக்கல்லூரியில் பதினைந்து வருடம் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றினார். ஓய்விற்கு பின் பெருந்துறை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
பொது வாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
மதுரை காமராஜர் கல்லூரியில் எம்.ஏ பயின்ற போது “கனவைத் தொலைத்தவர்கள்” என்ற கவிதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டார்.
தமிழக பாடத்திட்டத்திற்காக தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதினார். கு. மகுடீஸ்வரன் தொல்காப்பியத்திற்கு எழுதிய இரண்டு உரை நூல்கள் (’சொல்’, ‘எழுத்து’) பெரியார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் உள்ளது. தமிழ் வெர்ச்சுவல் யுனிவர்சிட்டியில் (Tamil Virtual University) நாடகம், காப்பியம் தொடர்பான நூல்களை எழுதி பதிப்பித்துள்ளார்.
ஆய்வு வாழ்க்கை
கு. மகுடீஸ்வரனின் ஆய்வு பணி எம்.ஃபில் தமிழ் இலக்கியம் படிக்கும் போது தொடங்கியது. “பாட்டியல் நூல்களில் சமூகம்” என்ற தலைப்பில் எம்.ஃபில் ஆய்வு செய்தார். “சமணக் காப்பியத் தலைவர்கள்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
இதில் சமண காப்பியங்களான பெருங்கதை, சிந்தாமணி ஆகியவற்றின் கதைத் தலைவர்கள் படைப்பமைவு அமைந்த விதம் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதனடிப்படையில் கண்ட முடிவுகளை ”சமணக் காப்பியத் தலைவர்கள்” என்ற நூலாக 'தி பார்க்கர்' பதிப்பகம் மூலம் 2004-ல் வெளியிட்டார்.
2004 தொடங்கி 2010 வரை ஏழு ஆண்டுகள் கொங்கு நாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு கொங்கு மலர்கள், கொங்குச் செல்வங்கள், இலக்கியங்களில் கொங்கு, கொங்கு மணிகள் போன்ற பத்து நூல்களை எழுதினார்.
கு. மகுடீஸ்வரன் பேராசிரியராகப் பணியாற்றிய போது அவரிடம் ஆய்வு செய்த மாணவர்கள், புலவர் செ. இராசு, தெய்வசிகாமணிக் கவுண்டர் போன்ற கொங்கு நாட்டு ஆய்வாளர்களைப் பற்றி பத்திற்கும் மேல் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளனர்.
பதிப்பாளர் பணி
2010 ஆம் ஆண்டிற்கு பின் சுவடியிலிருந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டார். அருணாச்சலக் கவிராயர் இறந்த பின் அவரிடம் மிச்சமிருந்த தக்கை ராமாயணச் சுவடிகளை நூலாகப் பதிப்பித்தார். தெய்வசிகாமணி கவுண்டரிடமிருந்து கிடைத்த உ.வே.சா கையெழுத்து பிரதி உட்பட்ட பல சுவடிகளை நூலாகத் தொடர்ந்து பதிப்பித்து வருகிறார். தலைய நல்லூர் குறவஞ்சி, பெரியண்ணன் குறவஞ்சி போன்ற குறவஞ்சி பாடல்களை சுவடியிலிருந்து நூலாகப் பதிப்பித்துள்ளார். தற்போது பாம்பண்ண கவுண்டன் குறவஞ்சி, பாம்மண்ண வர்க்க மாலை, கொங்கன் படை போன்ற நூல்களையும், பழனி தொடர்பான நூல்களைப் (பழனி நொண்டி நாடகம்) பதிப்பிக்கும் முயற்சியில் உள்ளார்.
விருதுகள்
- 2004-ல் “சமணக்காப்பியத் தலைவர்கள் நூல்” மூவேந்தர் விருது பெற்றார்.
நூல் பட்டியல்
- கனவைத் தொலைத்தவர்கள் (கவிதைத்தொகுப்பு)
- சமணக் காப்பியத் தலைவர்கள்
- தமிழ் இலக்கிய வரலாறு
- கொங்குச் செல்வங்கள்
- இலக்கியங்களில் கொங்கு
- கொங்கு மலர்கள்
- கொங்கு மணிகள்
சுவடிப்பதிப்பு
- தக்கை ராமாயணம்
- தலைய நல்லூர் குறவஞ்சி
- பெரியண்ணன் குறவஞ்சி
இணைப்புகள்
- சித்தர் நூல் பதிப்புகள்: கு. மகுடீஸ்வரன்
- கு. மகுடீஸ்வரன்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- திருத்தக்கதேவர் சில சிந்தனைகள் - கு. மகுடீஸ்வரன்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.