being created

பொன் சுந்தரராசு

From Tamil Wiki
Revision as of 06:30, 27 July 2022 by Madhusaml (talk | contribs)
பொன். சுந்தரராசு

பொன் சுந்தரராசு (பிறப்பு 1947), சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர், தமிழாசிரியர். கல்வித்துறையிலும் இலக்கியத்துறையிலும் சமூகத்துறையிலும் பல முக்கிய பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டவர்.  1967ஆம் தொடங்கி இன்னும் கல்வித்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு வந்திருக்கிறார். 1968ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

1947 ஆம் ஆண்டு  தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம், திருமங்கலக்கோட்டை, நடுத்தெரு என்ற கிராமத்தில் பிறந்தார். திரு அழகன் பொன்னுசாமி, மாசிலாமணி அம்மாள் தம்பதியினர்க்கு இவர் தலைமகன். இவருடன் பிறந்தோர் உத்திராசு,  செல்வராசு, காமராசு  என்னும் மூன்று  உடன்பிறப்புகள். ‘திருமங்கலக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் தமிழ்ப்பள்ளி’யில் தொடக்கநிலை  மூன்றாம் வகுப்பு வரை படித்தார். 1956ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்து,  திருவள்ளுவர் தமிழ்ப்  பாடசாலை (1957 -1958), செயிண்ட் ஜியார்ஜஸ்  அரசினர் தமிழ்ப்பள்ளி (1958 – 1960), உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியில் (1961) ஆகிய பள்ளிகளில் தொடக்கக்கல்வியும்; உமறுப்புலவர் தமிழ்ப் உயர்நிலைப் பள்ளியில் (1962- 1965) உயர்நிலைப் படிப்பையும் முடித்தார். 1967இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து 1970ஆம் ஆண்டில் பயிற்சிபெற்ற ஆசிரியாரானார். பகுதிநேரமாக புகுமுக நிலைத் தனியார் கேம்பிரிட்ஜ்  ‘ஏ’  நிலைத் தேர்வில் (1983 &1984) வெற்றி பெற்று இளநிலைப் பட்டக்கல்வியை (B.A) மதுரைக் காமராஜர் பல்கலைக்கழத்திலும்  (தொலைதூரக்  கல்வி, 1990),  முதுகலைப் பட்டக் கல்வியை (M.A) சென்னைப் பல்கலைக்கழத்திலும் (தொலைதூரக்  கல்வி, 2009) முடித்தார்.

தனி வாழ்க்கை

பொன் சுந்தர்ராசு 1974ஆம் ஆண்டில் சரோஜா என்பவரை மணம் புரிந்தார். அவர்களுக்கு அருளானந்தன் (அமரர்), கவிதா என்று இரு குழந்தைகள். அஷ்டலட்சுமி என்ற ஒரு வளர்ப்பு மகளும் உண்டு.  டாக்டர் டேவிட் ஜான்  ராபின்சன் என்பவரை மணந்த கவிதாவுக்கு ராதிகா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

தொழில்

தொடக்கப்பள்ளித் தமிழ்மொழி ஆசிரியராகவும் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர்,  உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர், பாடநூல் ஆசிரியர் ஆகிய பணிகளை மேற்கொண்ட அவர், தாய்மொழித்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். சிங்கப்பூரில் முதன்மையாசிரியர் எனும் நிலையை எட்டிய முதல் தமிழாசிரியர் இவர்.  இப்போது நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் தேசிய கல்விக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

பொன்.சுந்தரராசு படைப்புகள் நூல் வெளியீடு. வெளியிடுபவர் முன்னாள் அமைச்சர் அமரர் பாலாஜி சதாசிவன்

தொடக்கப் பள்ளியில் படிக்கும்போதே  ரேடியோ சிங்கப்பூர், தமிழ்ப்குதி தயாரித்த சிறுவர் நிகழ்ச்சில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். மேடை நாடங்களிலும் நடித்து வந்தார். வேலைக்காரன் வேலாயுதம், எமதர்மராஜன் தர்பார்  போன்ற நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.  தொடர்ந்து வானொலி நாடகங்களும் தொலைக்காட்சி நாடகங்களும் எழுதினார். இதுவரை ஏறக்குறைய 30 வானொலி நாடகங்கள், 40 தொலைக் காட்சிநாடகங்கள், சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும் சிறுவர் நாடகங்களையும் எழுதியுள்ளார். 1975ஆம் ஆண்டு முதல் 2003 வரை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்தி வாசிப்புப் பணியைத் தொடர்ந்தார்.  1970களின் நடுப்பகுதியின் திரு எஸ் எஸ் சந்திரன் என்பவரை ஆயிரியராகக்கொண்டு தொடங்கப்பட்ட ‘தேன்கூடு’ என்ற மாணவர் இதழின் துணையாசிரியர்களுள் ஒருவராக பணியாற்றினார்.

1973ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு ஆய்வரங்குகளிலும் மாநாடுகளிலும் பங்கேற்றுத் தமிழ்மொழி, தமிழிலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மாநாட்டு மலர்களில் இடம்பெற்றுள்ளன.

1973ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ‘என்னதான் செய்வது?’ சிறுகதை தமிழ்நேசனின் 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ‘முத்திரைப் பவுன் பரிசு’ பெற்றது. ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ (1981) மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மலாய்மொழி இலக்கியப் பாடத் துணைப்பாடநூலில் (2019)  முதல் இடம்பெற்றுள்ளது. இது 2023வரை நீடிக்கும்.

இவர் எழுதிய ‘வாடகைவீடு’ (1981) என்ற சிறுகதை தமிழ்நாட்டின் குங்குமம் வார இதழில், சிங்கப்பூரிலும் மலேசியாவிலுமிருந்து  சென்ற  கதைகளுள் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்று பிரசுரமானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ‘Voices of Singapore’ இதழில்  Faculty of Arts and Social Sciences, NUS, துறையினால் 1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சீன மொழியிலும் இந்தக் கதை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இலக்கியப் பணிகள்

முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர்.நாதனுடன்

இவர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆயுள் உறுப்பினர். 1973 – 1982 வரை அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பு வகித்திருக்கிறார். தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர்க் கல்வியமைச்சு போன்ற அமைப்புகளின் அழைப்பின்பேரில் படைப்பாக்கத் திறன், புத்தாக்கத்திறன் போன்ற எழுத்துத்திறன் பயிலரங்குகளை நடத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளுக்காக எழுத்துத் திறன் பயிலரங்குகளை நடத்தி இருக்கிறார்.

இலக்கிய இடம்

‘இலக்கியத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் திரு பொன் சுந்தரராசு சிங்கப்பூரின் சிறப்புக்குரிய படைப்பாளார்களில் கவனம் பெறுபவர்’ என்று 2009இல் தேசிய நூலக வாரியம் இவரைப் பாராட்டி உள்ளது (2009). ‘இவருள் எழுத்து வேட்கைத் தீ சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது’ - இராம கண்ணபிரான், மூத்த எழுத்தாளர், சிங்கப்பூர் (2021) கூறியுள்ளார்.

விருதுகள்

  • 2016 - ‘பாவேந்தர் விருது’ - சிங்கப்பூர் இலக்கியக் களம்
  • 2015- சிங்கப்பூர் முன்னோடிகள் விருது - Appreciation Award For Pioneers –   MCCY
  • 2013- ஊக்கமூட்டும் நல்லாசிரியர் விருது - சிங்கப்பூர்த்  தமிழாசிரியர் சங்கம்
  • 2013 -‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ - சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்
  • 2013- ஏ.என். மெய்தீன் விருது - சிங்கப்பூர் கடைய நல்லூர் முஸ்லீம் லீக்
  • 2013- தமிழவேள் விருது- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தமிழவேள் விருது
  • 2007- புலமைத் தென்றல் - உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை, தமிழ்நாடு
  • 2005- கலைச் செம்மல் விருது -இந்தியக் கலைஞர் சங்கம் வழங்கிய
  • 2005- திருக்குறள் விருது -சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பண்பாட்டுக்  கழகம்
  • 1993- சிங்கப்பூர் கல்வி அமைச்சின் நீண்ட காலச் சேவை விருது

நூற்பட்டியல்

கதைகள்

  • என்னதான் செய்வது - சிறுகதை, தமிழ்ப் புத்தகாலயம், (1981)
  • புதிய அலைகள் - சிறுகதை, தமிழ்ப்புத்தகாலயம், (1984)
  • உதயத்தை நோக்கி - நாடகங்கள், சிங்கப்பூரின்  25வது நிறைவு  கொண்டாட்டக்குழு (1990)
  • பொன் சுந்தரராசுவின் - சிறுகதைகள்,  (முன்னைய இரண்டு சிறுகதை தொகுப்புகளின்  மறுபதிப்பு) - தமிழ்க் கலை அச்சகம் (2007, 2011)
  • THE MASTER TEACHER My Life  And Times(ஆங்கிலம்), Singapore Vision Society, Singapore (2019)
  • நேர்கோடு  - சிறுகதைகள், மறுபதிப்பு, கிரிம்ஸன் ஏர்த், சிங்கப்பூர் (2019)
  • நியாயங்கள் தர்மங்களல்ல - சிறுகதைகள், மறுபதிப்பு, கிரிம்ஸன் ஏர்த், சிங் கப்பூர் (2019)
  • புதிய அலைகள் - சிறுகதைகள், மறுபதிப்பு, கிரிம்ஸன் ஏர்த், சிங்கப்பூர் (2020)
  • நெஞ்சில் நெருப்பு - சிறுகதைகள், மறுபதிப்பு, கிரிம்ஸன் ஏர்த், சிங்கப்பூர் (2020)
  • சுண்ணாம்பு அரிசி - புதினம், கிரிம்ஸன் ஏர்த், சிங்கப்பூர் (2021)

கட்டுரைகள்

  • இனிப்பும் கசப்பும்  (அச்சில்)
  • வானொலியில் நூல் அறிமுகங்கள், 16 கட்டுரைகள், 1991
  • தொகுப்பாசிரியர், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்   தொகுப்பு (1972 - 2009), NLB, (2011)
  • பொன்.சுந்தரராசு படைப்புகள் (வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், நூல் அறிமுகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், 2007)

உசாத்துணை

  • இருநூற்றுவர், சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றம், 2019
  • சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2019
  • முத்துச்சிதறல், உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர் சங்கம், 2019
  • சிங்கப்பூர் சொல்வெட்டு, கவிமாலை சிங்கப்பூர், 2018
  • சிங்கப்பூர் பொன்விழாச் சிறுகதைகள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2015
  • சிங்கப்பூர் பொன்விழாக் கட்டுரைகள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2015
  • படிப்போம்! உயர்வோம்!, பயிலரங்குக் கட்டுரைத் தொகுப்பு, உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி, 2014
  • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத் தொகுப்பு, தேசியநூலக வாரியம், 2011
  • Literary Singapore, National Arts Council, 2011
  • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு - ஓர் அறிமுகம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்,  2011
  • கனவுகளும் தெரிவுகளும், EPB, Pan Pacific, 2009
  • Text in Singapore, Singapore Writers Festival, 2005
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2001
  • சிங்கப்பூரில் நாடக்கக் கலை வளர்த்த நல்லோர், இந்தியர் கலைஞர் சங்கம், 1991
  • https://serangoontimes.com/2021/09/17/pon-sundararasu-stories/</nowiki>
  • https://www.jeyamohan.in/91010/</nowiki>


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.