உமாமகேஸ்வரி

From Tamil Wiki
உமா மகேஸ்வரி

உமாமகேஸ்வரி (1971) தமிழில் கதைகளும் நாவல்களும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். பெண்களின் அகவுலகைச் சித்தரிக்க்கும் கதைகளை எழுதியவர்

பிறப்பு, கல்வி

போடிநாயக்கனூரை அடுத்த திருமலாபுரத்தில் 1971ல் பிறந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பி.ஏ படித்தபின் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றார்

தனிவாழ்க்கை

உமா மகேஸ்வரி

உமாமகேஸ்வரியின் கணவர் பெயர் சங்கரபாண்டியன். ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார். துணி மொத்தவணிகம் செய்பவர். உமாமகேஸ்வரிக்கு ஒரு மகள், ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.

இலக்கியவாழ்க்கை

உமாமகேஸ்வரி கவிதைகள்தான் எழுதிவந்தார். 1985 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். அவருடைய நட்சத்திரங்களின் நடுவே என்னும் கவிதைத்தொகுதி 1990ல் வெளியாகியது. கவிதைகளும் எழுதிவருகிறார்.பாரதியார்,சுந்தர ராமசாமி,தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், எமிலி டிக்கன்சன் ஆகியோரின் செல்வாக்கு தன்னிடமிருப்பதாக சொல்கிறார் .மஹி என்னும் புனைபெயரிலும் எழுதுவதுண்டு.

இலக்கிய இடம்

உமா மகேஸ்வரி

உமாமகேஸ்வரியின் புனைவுலகம் மிகக்குறுகியது. எமிலி டிக்கன்ஸன் போல இல்லத்திற்குள்ளாகவே வாழும் வாழ்க்கை அமைந்தவர்.ஆனால் அச்சிறிய உலகத்திற்குள் பெண்களின் வாழ்க்கையின் இடர்களையும், அவர்களின் விடுதலை வேட்கையையும் கூடவே அவர்களின் வஞ்சம், வெறுப்பு என்னும் உணர்வுகளையும் சித்தரித்தவர். பெண்ணியக்கொள்கை போன்ற பொதுவான சிந்தனைகள் ஏதும் அவரிடமில்லை. தன்னியல்பாக மானுட உணர்வுகளையும் நடத்தைகளையும் கண்டு புனைவாக்குகிறார். ஆனால் தமிழில் பெண்ணியர்கள் எழுதிய படைப்புகளைவிட ஆழ்ந்த பெண்விடுதலைக்குரல் ஒலிப்பவை அவருடைய ஆக்கங்கள். பெண்விடுதலை என்பது பெண் என்னும் அடையாளத்தின் மீதான தேடலாக, இருத்தலின் பொருள் பற்றிய உசாவலாக மாறும் கதைகள்.

’தன் ஸ்வாதீனத்தின்மீது நிர்ப்பந்தத்தை விளைவிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ அவற்றுக்கு எதிராக வளர்த்தெடுத்துக்கொண்ட வன்மமோ இவர் படைப்புகளில் வெளிப்படுவதில்லை’ என்று க.மோகனரங்கன் மதிப்பிடுகிறார்*. அம்பையின் செல்வாக்கு உமாமகேஸ்வரியில் உண்டு என்றாலும் அம்பையின் கலையை வெகுவாகத் தாண்டிவந்துவிட்டவர் என ஞானி சங்கரன் அவரை மதிப்பிடுகிறார்* ‘உமாமகேஸ்வரிதான் எனது தலைமுறையின் பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். அவருடைய கவிதைகளும் மொழியின் அழகும் உணர்வுத்தளமும் சந்திக்கும் அழகிய வரிகளாலானவை. ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்கள் அவருடையவை’ என ஜெயமோகன் மதிப்பிடுகிறார் *

விருதுகள்

  • கதா தேசியவிருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • இந்தியா டுடே சிகரம் விருது
  • நஞ்சங்கூடு திருமலாம்பாள் விடுது
  • ஏலாதி இலக்கிய விருது
  • இலக்கிய சிந்தனை பரிசு
  • கவிஞர் சிற்பி இலக்கிய விருது

நூல்கள்

கவிதைகள்
  • நட்சத்திரங்களின் நடுவே 1990
  • வெறும் பொழுது 2002
  • கற்பாவை 2003
  • இறுதிப்பூ 2008
  • மிட்டாய்க்கடிகாரம் 2015
சிறுகதைத்தொகுதிகள்
  • மரப்பாச்சி 2002
  • தொலைகடல் 2004
  • அரளி வனம் 2008
  • வயலட் ஜன்னல் 2019
  • உமாமகேஸ்வரி கதைகள்
நாவல்
  • யாரும் யாருடனும் இல்லை 2003
  • அஞ்சாங்காலம் 2013

உசாத்துணை