being created

பா. தாவூத்ஷா

From Tamil Wiki

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர், புத்தக வெளியீட்டாளர் எனப் பல களங்களில் இயங்கியவர், பா. தாவூத் ஷா. இஸ்லாமிய இதழான ‘தாருல் இஸ்லாம்’ இதழின் நிறுவனர்.

தாவூத் ஷா

பிறப்பு, கல்வி

தாவூத் ஷா, தஞ்சாவூரில் உள்ள கீழ்மாந்தூர் என்னும் குக்கிராமத்தில், மார்ச் 29, 1885 அன்று பாப்பு ராவுத்தர் - குல்ஸும் பீவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை சொந்த ஊரான நாச்சியார் கோவிலிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். இடைநிலைக் கல்வியை கும்பகோணம் நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது இவருடன் பயின்ற மாணவர் தான் பிற்காலத்தில் கணித மேதையாக உயர்ந்த ராமாநுஜம்.

தனது 18-ம் வயதில் தந்தையை இழந்தார் தாவூத் ஷா. தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்று எஃப்.ஏ. மற்றும்  பி.ஏ. பட்டம் பெற்றார். உ.வே. சாமிநாத ஐயர், டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாவூத்ஷாவிற்கு ஆசிரியர்களாக இருந்தனர்.  உயர் கல்வியை முடித்த தாவூத் ஷா, மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பரிசாக வென்றார். தமிழோடு ஆங்கிலம், அரபு, உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

ஏப்ரல் 24, 1908-ல், சபுரா பீவியுடன்ம, தாவூத்ஷாவுக்குத் திருமணம் நடந்தது. அவர் மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 1912-ல், சபுரா பீவி உடல்நலக் குறைவால் காலமானார். அதன் பின் அரசுப் பணி வாய்ப்பு வந்தது. தென்னாற்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் தாவூத் ஷா. 1915-ல், மைமூன் பீவியை மணம் செய்து கொண்டார். மூன்று புதல்வர்கள் மற்றும் நான்கு புதல்விகள் பிறந்தனர். சில வருடங்களுக்குப் பின் இலாகா தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, 1917-ல், உதவி நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். ஒன்பது வருடங்கள் அப்பணியில் இருந்தார்.

சஹீஹ் புகாரி - பா தாவூத் ஷாவின் நூல்

அரசியல் வாழ்க்கை

சுதந்திரப் போராட்டம் சுடர்விட்டிருந்த காலம் அது. ஒத்துழையாமை இயக்கமும், கிலாஃபத் இயக்கமும் அரசு அலுவலர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. அரசுப் பணிகளில் பணியாற்றுவோர் அதிலிருந்து விலகி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென காந்தி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுப் பல அதிகாரிகளும், அரசுஅலுவலர்களும் பணியிலிருந்து விலகி சுதந்திரப் போராட்டத்தில்  இடுபட்டனர். 1921-ல், விழுப்புரத்தில்  உதவி நீதிபதியாகப் பணியாற்றி வந்த தாவூத் ஷாவும், காந்தி சொற்படி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். நாடெங்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

1922-ல் தாவூத் ஷாவிற்கு லண்டன் செல்லும் வாய்ப்பு வந்தது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் மத பிரச்சாரகர் காஜா கமாலுதீன் என்பவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் தாவூத் ஷாவினுடைய ஆங்கில மொழிப் புலமையையும், உரையாற்றும் திறனையும் கண்டு வியந்து அவரைத் தம்முடன் லண்டனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ‘இஸ்லாமிக் ரெவியூ' துணை ஆசிரியராகப் பணியாற்றினார் தாவூத் ஷா. காஜா கமாலுதீனிடம், இஸ்லாமிய இதழ்கள் வெளியீடு குறித்தும், பிரசார நுணுக்கங்கள் குறித்தும் கற்றுக் கொண்டார். 1923-ல், தமிழகம் திரும்பிய அவர், தான் முன்பு நடத்தி வந்த ‘தத்துவ இஸ்லாம்’ இதழை, ‘தாருல் இஸ்லாம்’ என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட ஆரம்பித்தார்.

தனது அரசியல் நடவடிக்கைகளுக்குச் சென்னை நகரமே ஏற்ற இடம் என்று கருதி குடும்பத்துடன் அங்கு குடியேறினார். கதர்த் துணிகளைக் கையிலேந்தி, சென்னை நகர் முழுவதும் சென்று விற்றார். தேச விடுதலை தொடர்பான பல கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது பணிகளின் காரணமாக சென்னை மாநகர காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தாவூத் ஷா. காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்திற்காக ‘தேச சேவகன்’ என்ற வார இதழையும் நடத்தினார். ராஜாஜி, ஈ.வே. ராமசாமி நாயக்கர்., சேலம் மருத்துவர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், மறைமலையடிகள், ஆகியோருடன் நல்ல நட்புக்கொண்டிருந்தார். நாளடைவில் காங்கிரஸ் கட்சியை விட்டுப் பல இஸ்லாமியத் தலைவர்கள் வெளியேறியபோது தாவூத் ஷாவும் வெளியேறினார். 1940-ல், முஸ்லீம் லிக்குடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஈ.வே.ரா.வுடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 1941-ல், சென்னையில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் உரையாற்றிய காயிதே ஆஜம் ஜின்னாவின் ஆங்கில உரையைத் தமிழில் மொழி பெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடுப் பிரிவினையை ஆதரித்து நாடெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். நாட்டுப் பிரிவினைக்குப் பின்னரும், முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும். நலன்களுக்காகவும் குரல் கொடுத்தார்.

தாருல் இஸ்லாம் இதழ்

இதழியல் வாழ்க்கை

தாவூத் ஷாவிற்கு இளமையிலேயே இதழியல் துறையில் ஆர்வம் இருந்தது. எழுத்து, பேச்சு இரண்டிலுமே ஈடுபாடு உடையவராக இருந்தார். தனது சிந்தனைகளை “முஸ்லிம் சங்க முதற் கமலம்” என்ற தலைப்பில்  நூலாக வெளியிட்டு வந்தார். இஸ்லாமிய மக்களிடையே எழுச்சியையும், விழிப்புணர்ச்சியையும் தூண்டி அவர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக 1919, ஜனவரியில்,  ‘முதல் கமலம்’ இதழையே பெயர் மாற்றி, ‘தத்துவ இஸ்லாம்’ (ISLAM AS IT IS) என்ர பெயரில் ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பின், 1923-ல், அதனைத் ‘தாருல் இஸ்லாம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். முதலில் மாத இதழாக வெளிவந்த  ’தாருல் இஸ்லாம்’ பின்னர் மாதமிருமுறை இதழாகவும், வார இதழாகவும், நாளிதழாகவும் வெளியாகிப் பின்னர் மாத இதழாக 1957 வரை வெளிவந்தது.

தாருல் இஸ்லாம் இதழில் பங்களிப்புகள்

தாருல் இஸ்லாம் இதழின் வளர்ச்சியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் தாவூத் ஷா. இதழுக்கு ஆசிரியராக இருந்ததோடு இதழில் இஸ்லாமிய சமயம் சார்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இஸ்லாமியர்களிடையே இருந்த மூட நம்பிக்கைகளைச் சாடிப் பல கட்டுரைகளை எழுதி வந்தார். தர்கா வழிபாடு கூடாது என்பதை வலியுறுத்தி எழுதியும் பேசியும் வந்தார். அதனால் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை நாயக மான்மியம்’ என்ற தலைப்பில் எழுதினார். அரபுக் கதைகளை தமிழில் மொழியில் மொழிபெயர்த்து “அல்பு லைலா வலைலா” என்ற தலைப்பில் வெளியிட்டார்.

1955-ல் தனது மகன் அப்துல் ஜப்பாருடன் இணைந்து, குர்ஆனைத் தமிழ் மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் எளிய தமிழில் ’குர்ஆன் மஜீத்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதினார் தாவூத் ஷா. 1961-ல் அதனை எழுதி முடித்தார். "குர்ஆன் மஜீத் - பொருளுரையும், விரிவுரையும்" என்ற தலைப்பில் பின்னர் அது நூலாக வெளியானது.

தாவூத் ஷாவின் மகன் அப்துல் ஜப்பார், “ஷஜருத்துர்” என்ற தொடர் கதையை தாருல் இஸ்லாமில் எழுதியிருக்கிறார். அப்துல் ஜப்பாரின் கடைசி மகனான நூருத்தீன், இப்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறார். இவரும் ஓர் எழுத்தாளரே!. ‘சமரசம்’ உள்ளிட்ட சில இஸ்லாமிய இதழ்களில் எழுதி வருவதுடன், இணையதளத்திலும் கதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘தாருல் இஸ்லாம் குடும்பம்’ என்ற இணையதளத்தில் தாருல் இஸ்லாம் இதழ்களையும், தாவூத்ஷாவின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியுள்ளார். முஸ்லிம் முரசின் நிறுவன ஆசிரியரான மறைந்த அப்துல் ரஹீம், தாவூத்ஷாவின் மூத்த மகள் ரமீஜா பேகத்தின் கணவர்.

விருதுகள்

1963-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்க்கிய கேடயம்

கொழும்பிலுள்ள தன்ஸீம் என்ற இஸ்லாமிய அமைப்பு வழங்கிய ‘இஸ்லாமிய மாவீரர்’ பட்டம்

மறைவு

தாவூத் ஷா, பிப்ரவரி 24, 1969-ல் சென்னையில் காலமானார்.

ஆவணம்

பா. தாவூத் ஷாவின் பேரர் நூருத்தீன் அவர்களது முயற்சியில் ‘தாருல் இஸ்லாம் இதழ்கள்’ வலையேற்றம் கண்டுள்ளன. தாவூத் ஷாவின் வாழ்க்கைக் குறிப்பும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று இடம்

“இசுலாமிய இதழ்கள் மத்தியில், கொடி கட்டிப் பறந்த இதழ், ‘தாருல் இஸ்லாம்’. முசுலிம்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதழின், தெளிந்த இனிய தமிழ் நடைதான் அதற்கு காரணம். பிற சமயத்தவர்களும்கூட இவ்விதழை வாங்கிப் படித்தார்கள்” என்று இதழாளர் அ.மா.சாமி குறிப்பிட்டுள்ளார். “பத்திரிகை பிரசுரத் துறையில் தாவூத் ஷா, ஒரு பல்கலைக் கழகம், தமது பத்திரிகைகள் மூலம் பெரும் இலக்கிய அணியை உருவாக்கிய பெருமைக்குரியவர்” என்பது எழுத்தாளர் ஜே. எம்.சாலியின் கருத்து.

நூல்கள்

கட்டுரைகள்
  • அவ்லியாக்கள் அல்லா(ஹ்) அல்லவே
  • திருக்குறள் பற்றி எமது அபிப்ப்ராயம்
  • மிர்ஜா குலாம்‌ அஹ்மத்‌ ஒரு நபியா?
  • முஸ்லிம்களை காபிர் ஆக்குவது ஏன்?
  • தாருல் இஸ்லாம் வாரப்பத்திரிகை!
  • பத்திராசிரியர்களுக்கு வேண்டிய சில நுட்பங்கள்
  • இதழ்கள் மோதல்
  • திருக்குறள் தெய்வத் திருமறை யாகுமா?
புத்தகங்கள்
  • குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு
  • அபூபக்ரு சித்தீக் (ரலி)
  • ஆரியருக்கொரு வெடிகுண்டு
  • இஸ்லாம் எப்படிச் சிறந்தது?
  • உதுமான் (ரலி)
  • ஸஹீஹ் புகாரீ
  • குத்பா பிரசங்கம்
  • ஜுபைதா அல்லது பழிக்குப் பழி
  • தக்தீரும் தலைவிதியும்
  • தாஜ்மஹால்
  • நபிகள் நாயக வாக்கியம்
  • நபிகள் நாயகமும் நான்கு தோழர்களும்
  • நாயகத்தின் நற்குணங்கள்
  • புதிய சீர்திருத்தங்கள்
  • மஹான் முஹம்மத் நபி (ஸல்)
  • முஸ்லிம்களின் முன்னேற்றம்
  • முஹம்மது நபிகள் (ஸல்)
  • ஹஜ்ரத் அலீ (ரலி)
  • ஜியாரத்துல் குபூர்
கதை நூல்கள்
  • அல்பு லைலா வலைலா (1001 இரவுகள்)
  • சிம்சனா? சிம்மாசனமா
  • மும்தாஜ் (வாழ்க்கை வரலாற்)
  • நூர்ஜஹான் (வாழ்க்கை வரலாறு)
நாவல்கள்
  • கள்ள மார்க்கெட் மோகினி
  • காதலர் பாதையில்
  • ரஸ்புதீன்
  • ஜுபைதா
  • கப்பல் கொள்ளைக்காரி
  • காபூல் கன்னியர்
  • கரளபுரி இரகசியம்
  • காதல் பொறாமையா அல்லது பொறாமைக்காதலா?
  • ஹாத்தீம் தாய்
  • மலை விழுங்கி மகாதேவன்
சிறுகதைத் தொகுப்பு.
  • அகமது உன்னிஸா மூட்டை கட்டுகிறார்
பொது நூல்கள்
  • சுவாசமே உயிர்
  • ஜீவ வசிய பரம ரகசியம்
  • மெஸ்மெரிசம்
  • மண வாழ்க்கையில் மர்மங்கள்
  • உலக அதிசயங்கள்
  • பிரபஞ்ச விநோதம்
  • நாத்திகர்களுக்கு நல்விருந்து
  • புத்துலகமைப்பு











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.