தேவார மாண்பும் ஓதுவார் மரபும்

From Tamil Wiki
தேவார மாண்பும் ஓதுவார் மரபும்

தேவார மாண்பும் ஓதுவார் மரபும் (2021) குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதிய ஆய்வுநூல். தமிழிசை மரபு பண்ணிசையின் வளர்ச்சியின் ஊடாக ஓதுவார் மரபாக ஆன வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கிறது. தேவார மரபின் வழியாக தமிழிசை மரபு நிலைகொண்டதை விரிவான தரவுகள் வழியாக நிறுவுகிறது

எழுத்து வெளியீடு

குடவாயில் பாலசுப்ரமணியம் இந்நூலை 2021 ல் எழுதினார். அன்னம் பதிப்பகம் வெளியிட்டது

உள்ளடக்கம்

தேவாரம் சைவ மரபுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்த நூல். அது ஒர் அறிவுநூல் என்பதைக் கடந்து இசைநூலும் மந்திரநூலுமாக சைவத்தால் கருதப்படுகிறது. செவியிலும் கருத்திலும் தேவாரத்தை நிலைநிறுத்தும்பொருட்டு ஓதுவார் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு ஆயிரமாண்டுகளாக நீடிக்கிறது

குடவாயில் பாலசுப்ரமணியத்தின் இந்நூல் தேவாரம் ஆக்கிய மூவரின் வரலாறு, அவர்களின் பதிகங்களின் இயல்பை அறிமுகம் செய்துகொண்டு தொடங்குகிறது. தேவாரம் என்னும் பெயர் உருவாகி வந்தமை, தேவாரம் பற்றி சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் உள்ள செய்திகள், வரலாற்றில் ஓதுவார்களைப் பற்றி இருக்கும் குறிப்புகள், என விரிகிறது

கல்வெட்டுகள் காட்டும் தேவார மூவர் வழிபாடு, தேவார மூவர் பெயரில் அமைந்த திருமடங்கள், தேவரா மூவர் திருவிழாக்கள், திருமுறைகண்ட புராணம் பற்றிய ஆய்வு, கலைப்படைப்புக்களில் தேவாரம் இடம்பெற்றுள்ள வகை என ஆய்வு விரிந்துசெல்கிறது.

ஆய்வு இடம்

சோழர்காலக் கலைவெற்றிகள் வழியாக சோழர் வரலாற்றை ஆய்வுசெய்யும் குடவாயில் பாலசுப்ரமணியத்தின் நுண்வரலாற்றாய்வு முறையின் முதன்மை நூல்களில் ஒன்று இது. இந்நூல் சோழர்காலத்தில் பண்ணிசை, ஓதுவார் மரபு என ஒருங்கிணைக்கப்பட்ட தமிழிசையின் வரலாற்றை விரிவான தரவுகளின் வழியாக சித்தரிக்கிறது. கலைவழியாக வரலாற்றை எழுதுவதற்கான முன்னுதாரணமாக திகழும் இந்நூல் தமிழக கலைவரலாற்றெழுத்துக்கும் முன்னுதாரணநூலாகும்

உசாத்துணை

கற்கோயிலும் சொற்கோயிலும் ஜெயமோகன்