being created

பரணீதரன்

From Tamil Wiki
பரணீதரன்

ஆன்மிக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் பரணீதரன் (டி.எஸ். ஸ்ரீதர்: 1925-2020) ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய ‘அருணாசல மகிமை’ தொடர், பலரை ஆன்மிக வாசிப்பு நோக்கி ஈர்த்த தொடராகும். மகான்கள் பலரைப் பற்றிப் பல நூல்களைப் படைத்தவர்.

பிறப்பு, கல்வி

பரணீதரன், டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், டி.என். சேஷாசலம்-ருக்மிணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சேஷாசலம் சிறந்த தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், ‘கலாநிலயம்’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். நாடகத்திலும் ஆர்வம் உடைய தந்தை சேஷாசலம், ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றி வந்தார்.

வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சூழலில் பரணீதரன் வளர்ந்தார். எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச் சூழல்களால் இலக்கியத்தின் பாலும் நாடகத்தின் பாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார் பரணீதரன்.

கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற பரணீதரன், உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா பள்ளியிலும் படித்தார். திடீரெனத் தந்தை காலமானதால் பரணீதரனின் கல்வி தடைப்பட்டது. அண்ணன் மற்றும் உறவினர்களின் உறுதுணையால் லயோலா கல்லூரியில் பி.கா.ம் படிப்பை நிறைவு செய்தார்

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார்.

சிறுவனாக இருந்தபோது ‘கலாநிலயம்’ இதழுக்காக அச்சடிக்கப்பட்ட வெள்ளைக் காகிதங்களில் பொழுது போக்காக கேலிச் சித்திரங்கள் வரைவார் பரணீதரன். அனைவரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டவே, விகடனில் மாலி வரைந்திருக்கும் கார்டூன்களைப் பார்த்து அதே மாதிரி வரைய முயல்வார். அதுவே அவர் பிற்காலத்தில் கார்டூனிஸ்ட் ஆக உதவியது.

1942-ல் ஒருமுறை திருவிசைநல்லூருக்குச் சென்றார். அதுதான் விகடன் புகழ் ஓவியர் மாலியின் சொந்த ஊர். அவரைச் சந்தித்தவர், தனது படங்களைக் காட்டி ஆசி பெற்றார். மாலி ‘தொடர்ந்து வரைந்து கொண்டிரு’ என்று ஆசிர்வதிக்கவே தனக்குத் தோன்றியதை எல்லாம் வரைந்து வந்தார்.

கார்டூனிஸ்ட் சீலி

சுதேசமித்திரனில் அப்போது உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த ‘நீலம்’ என்ற புனைபெயர் கொண்ட நீலமேகம் பணிபுரிந்து வந்தார். அவரை அணுகி வாய்ப்புக் கேட்டார் பரணீதரன். நீலமும் இதழில் இடம் பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு கேலிச் சித்திரம் வரைந்து தருமாறு கேட்டுக் கொண்டார். தனது செல்லப் பெயரான ‘சீலி’ என்ற புனைபெயரில் சுதேசமித்திரன் இதழுக்குத் தொடர்ந்து பல நகைச்சுவைக் கேலிச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தார் பரணீதரன். அவரது இதழியல் பயணம், சுதேசமித்திரன் மூலம் 1945-ல் தொடங்கியது.

தொடர்ந்து சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, தொடர்களுக்கு சிறு சிறு ஓவியங்கள் வரைந்தார். அவற்றுள் கோமதி ஸ்வாமிநாதனின் சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, ய.மகாலிங்க சாஸ்திரியின் “தலை தூபாவளி” என்ற நகைச்சுவைத் தொடர் கதைக்கு, என்.எஸ்.ஸ்ரீ எழுதிய ‘அலமுவின் கடிதங்கள்’ என்ற தொடருக்கு வரைந்திருக்கிறார் பரணீதரன்.

கார்டூனிஸ்ட் ஸ்ரீதர்

ரிசர்வ வங்கித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் பரணீதரன். வேலைக்கான உத்தரவும் கையில் வந்தது. ஆனாலும், 1949 ஜனவரியில் ஏதோ ஒரு உந்துதலில் விகடனுக்குத் தன்னைப் பற்றி எழுதி அனுப்பினார். உடனே எஸ்.எஸ். வாசனை நேரில் சந்திக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தது. தனது கார்டூன்களையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் எடுத்துக் கொண்டு வாசனைச் சந்தித்தார் பரணீதரன். விகடனில் கார்டூன் வரைய வாய்ப்புத் தந்தார் எஸ்.எஸ். வாசன்.

பரணீதரனின் முதல் கார்டூன், டி.எஸ். ஸ்ரீதர் என்ற அவரது இயற்பெயரில், 23-01-1949 தேதியிட்ட விகடன் இதழில் வெளியானது. உலக அரசியல், இந்திய அரசியல் தொடர்பான கார்டூன்களை வரைந்து கொண்டிருந்தார் பரணீதரன். சுமார் பத்துவருடங்களில் பல நூற்றுக்கணக்கான கார்டூன்களை வரைந்தார்.

1956-ல் விகடனின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் பரணீதரன். அதே ஆண்டில் எஸ்.பாலசுப்பிரமணியனும் விகடனின் ஜே.எம்.டி. ஆகச் சேர்ந்தார். இருவரும் இணைந்து பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தனர்.

ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன்

விகடனில் பரணீதரனின் முதல் ஆன்மிகத் தொடர் ‘சென்னையில் பொன்மாரி’ என்பது. 1957-ல், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திரர் சென்னையில் தங்கியிருந்தார். அவர் ஆற்றிய உரைகளைத் தொகுத்து தொடராக எழுதினார் பரணீதரன். அதுவே ஆன்மிகம் பற்றி அவர் எழுதிய முதல் தொடர்.







🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.