being created

அருணாசல மகிமை

From Tamil Wiki
Revision as of 20:12, 11 July 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
அருணாசல மகிமை

’அருணாசல மகிகை’ ஆனந்த விகடன் இதழில் வெளியான பக்தித் தொடராகும். பரணீதரனால் எழுதப்பட்ட இந்தத் தொடர், பலரை ஆன்மிகத்தின் பால் ஈர்த்தது. ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், வள்ளி மலை சுவாமிகள், பூண்டி மகான், யோகிராம் சுரத்குமார் உள்ளிட்ட பல மகான்களின் வாழ்க்கைச் சரிதம் இத்தொடரில் இடம் பெற்றுள்ளது. இது பின்னர் நூலாகவும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

எழுத்து, பிரசுரம்

அருணாசல மகிமை தொடராக ஆனந்த விகடன் இதழில் 1969-ல் வெளியானது. இதனை பின்னர் விகடன் பதிப்பகம் 1972-ல் நூலாக வெளியிட்டது. இந்த நூலுக்கு வாசகர்களிடையே மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஆனந்த விகடனில் தொடர்ந்து பல ஆன்மிகத் தொடர்களை பரணீதரன் எழுத இத்தொடர் ஒரு காரணமானது.

பிற்காலத்தில் இதனை இரண்டு பாகங்களாக கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. பின்னர் இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்டு ஒரே நூலாக 1987-ல் வெளியானது.

உள்ளடக்கம்

பரணீதரன்

சேஷாத்ரி சுவாமிகளில் தொடங்கி, விட்டோபா சுவாமிகள், ரமண மகரிஷி, பூண்டி மகான் ரத்தினகிரி பாலமுருகனடிமை மௌனசுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், சாதுராம் சுவாமிகள், யோகிராம்சுரத்குமார், ஈஸ்வர சுவாமிகள் என்று பல மகான்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அருணாசல மகிமை. பூண்டி மகான், ஞானானந்த கிரி சுவாமிகள், சாதுராம் சுவாமிகள், யோகிராம்சுரத்குமார், ஈஸ்வர சுவாமிகள் எனப் பல மகான்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களைச் சந்தித்து உரையாடி அந்த அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்திருந்தார் பரணீதரன். மகான்களின் அறிவுரைகள், அவர்கள் செய்த அற்புதங்கள் என்று பல விஷயங்களை இந்தத் தொடர் விரிவாக ஆவணப்படுத்தியது. இத்தொடருக்கு காஞ்சி மகாப் பெரியவரின் ஆசிர்வாதமும், பூண்டி மகானின் அருளாசியும் கிடைத்ததோடு, ஞானானந்த கிரி சுவாமிகளும் தனது நல்வாழ்த்துக்களை அளித்து ஆதரித்தார். பூண்டி மகானைப் பற்றிப் பலரும் அறிந்து கொண்டது ‘அருணாசல மகிமை’ மூலம் தான்.

மிக எளிமையான, வாசகர்களுடன் உரையாடுவது போன்ற நேரடியான நடை, ஆன்மிக வரலாறு, தான் அறிந்த, கண்ட, கேட்ட செய்திகள், காஞ்சி மகாப் பெரியவருடனான உரையாடல்கள், தனது அனுபவங்கள் என்று அனைத்தையும் விரிவாக இந்த நூலில் காட்சிப்படுத்தியிருந்தார் பரணீதரன்.

தொடரிருந்து ஒரு சிறு பகுதி

பூண்டி மகான்

முதல் முறை பூண்டி மகானை தரிசனம் செய்த பிறகு காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்கச் சென்றார் பரணீதரன். அவரிடம் அந்த அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டார்.

அடுத்த முறை பூண்டி மகானை தரிசிக்கச் சென்றபோது அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் பரணீதரன்.

“சாமீ, நான் போன வாரம் வந்திருந்தேன். மறுபடியும் உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு, வந்தேன்” என்றேன். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொன்னேன். அவர் பதில் கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. திடீரென்று அவர் பேசினார்: “நாகரத்தினம் பிள்ளை கூட அப்படித்தான் சொல்வாரு. நினைச்சுக்கிட்டா நான் வந்துடனுங்கிறாரு. அதான் ஐயா, ஆற்காடு நாகரத்தினம் பிள்ளை... வேலூர் ஆற்காடு”

எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது. கூடவே தைரியமும் வந்தது ..

“சாமி பேர் என்ன? எந்த ஊர்..?” என்று கேட்டேன்,

“ரைஸ்மில் கோவிந்தராஜ முதலியாருக்கு நான் எனன செஞ்சேன்... அவருதான் எனக்கு எனன செஞ்சாரு. அதெல்லாம் அந்தக் காலம் ஐயா .. நல்லது கெட்டது, ஒழுங்கு கட்டுப்பாடு. போக்குவரதது, நீதி நேர்மை, என்னாய்யா நான் சொல்றது? ரோடு போட்டானுங்க... பஸ் ஓடிசசு, கரண்ட் வந்தது. போஸ்ட் நட்டுகினே போனான். கோனேரிகுப்பம், பில்லூரு, மேல் வைத்தியநாதக் குப்பம், வெள்ளிக்கிழமை சந்தை.... கும்பல் இருக்காதா, வரவங்க போறவங்க, பிள்ளைக்குட்டிங்க, அதெல்லாம் ஆட்டோமாடிக்கா நடக்க வேண்டியது தானே. என்னாய்யா, நான் சொல்றது.. ? அண்ணாமங்கலம் ஆதிமூலம், ஏர்ணாமங்கலம் சிவராமன்.. டோல்கேட் போட்டான்... அதுக்குத் துட்டு வாங்கி ரசீது கொடுத்தான். ஆனா அது ராத்திரி வரைக்கும் தான் செல்லும்... மறுநாள் வேறே ரசீது வாங்கிக்கணும், தெரியுமா?” - இப்படி அவர் பேசிக் கொண்டே போனார். எனக்குத் தலைகால் புரியவில்லை. இவர் எத்தனை வருஷத்துக்கு முந்திய விஷயங்களைச் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள, “அப்போதெல்லாம் வெள்ளைக்காரன் இருந்தானா?” என்று நான் கேட்டேன்.

“ஜப்பான்காரன் கூட இருந்தான்” என்று சாமியார் பதில் சொன்னார்.

“சாமீ பேரு என்னா? சாமிக்கு எந்த ஊர்?” என்று சந்தடி சாக்கில் மறுபடியும் கேட்டு வைத்தேன்.

“அதெல்லாம் சொல்ல முடியாது போய்யா?'” ‘பட்’டென்று முகத்தில் அடித்தாற் போல் கூறி விட்டார்.

அருணாசல மகிமை பற்றிய வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

ஆன்மிகவாதிகளை மட்டுமல்லாமல், நாத்திகச் சிந்தனை உள்ளவர்களையும் இந்தத் தொடர் ஈர்த்தது. வரவேற்க வைத்தது. சேலம் ஆத்தூரிலிருந்து பா.சுந்தரமூர்த்தி என்ற ஆசிரியர் ஆனந்த விகடனுக்கு ’அருணாசல மகிமை’ தொடர் வெளியாகிக் கொண்டிருக்கும் போது எழுதி அனுப்பிய வாசகர் கடிதம் கீழ்க்காணுவது:

“ ‘அருணாசல மகிமை’யை உடனே நிறுத்தும்படி பரணீதரனிடம் தயவு செய்து சொல்லுங்கள். அது தொடர்ந்து வந்தால் என் போன்ற நாத்திகனையும் மெல்ல மெல்ல ஆத்திகனாக மாற்றி விடுமோ என்று பயமாயிருக்கிறது”

வரலாற்று இடம்

ஆன்மிக வரலாற்றுத் தொடர்களில் அருணாசல மகிமைக்கு மிக முக்கிய இடமுண்டு. அதற்கு முன் எந்தத் தொடருக்கும் கிட்டாத வாசக வரவேற்பு இந்தத் தொடருக்குக் கிடைத்தது. புத்தகமாக வெளியான பின்னும் அது தொடர்ந்தது.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.