சேதிராயர்
சேதிராயர் திருவிசைப்பா பாடிய ஒன்பது ஆசிரியர்களில் ஒருவர். அவர் பாடிய ஒரு பதிகம் திருவிசைப்பாவின் ஒன்பதாம் தொகுப்பாக அமைகிறது.
வாழ்க்கைக் குறிப்பு
சேதிநாடு தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. சேதி நாடு மலையமான் நாடு எனவும் வழங்கப்பட்டது. இந்த நாட்டிற்கு திருக்கோவலூர், கிளியூர் இரண்டும் தலைநகரங்களாக இருந்தன. சேதிநாட்டை ஆண்ட மன்னர்கள் சேதிராயர்கள் எனப்பட்டனர். திருவிசைப்பா இயற்றிய சேதிராயர் கிளியூரில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.
ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம்எய் தியிருப்பரே.
என்ற இவரது திருவிசைப்பாவின் முதல் பாடலிலிருந்து இவர் சேதிநாட்டு அரசர் என்று அறியவருகிறது.
சேதிராயரைப் பற்றிய பிற தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
இலக்கிய வாழ்க்கை
சேதிராயர் திருவிசைப்பாவின் இறுதி (28-வது) பதிகத்தை இயற்றினார். பாடல்கள் தில்லையில் கோயில் கொண்ட சிவபெருமான் மீது காதல் கொண்ட பெண் பாடுவதாக அமைந்துள்ளன.
பாடல் நடை
வாணுதற் கொடி மாலது வாய்மிக
நாண மற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே.
உசாத்துணை
- ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு மூலமும் உரையும்- புலவர் பி.நடராசன்.
- ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு-திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:32:06 IST