பூங்குழலி வீரன்

From Tamil Wiki

பூங்குழலி வீரன் மலேசிய எழுத்தாளர். கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். மலேசியத் தமிழ்க் கவிதைகளில் குழந்தைகளின் அகவுலகை நெருக்கமாகக் காட்ட முயன்றவையாக இவரது கவிதைகள் கருதப்படுகின்றன.

பிறப்பு

மே 29, 1984 ஆண்டு பேராக் மாநிலத்தில் செலாமா நகரில் பிறந்தார். இவரின் பெற்றோர் வீரன் பழனி, லீலாவதி நாராயணசாமி. இவருடன் உடன்பிறந்தவர்கள் அறுவர்.

தனிவாழ்க்கை

பூங்குழலி வீரன்

பூங்குழலி தன்னுடைய தொடக்கக் கல்வியை பேராக் மாநிலத்தின்  செலாமா நகரில் இருக்கும் ஜாலான் சிர் சுலான் தமிழ்ப்பள்ளியில் 1991 ஆம் ஆண்டு தொடங்கி 1996 நிறைவு செய்தார். படிவம் 1 முதல் படிவம் 5 வரையிலான இடைநிலைக்கல்வியை பேராக் மாநிலத்தில் பெங்கலான் ஹுலு, துன் சபான் இடைநிலைப்பள்ளியில் 1997 ஆம் ஆண்டு தொடங்கி 2001 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். அதன் பிறகு, படிவம் 6 ஐ செலாயாங் பாரு, டாருள் ஏசான் இடைநிலைப்பள்ளியில் 2002 ஆம் தொடங்கி 2003 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். தன்னுடைய உயர்கல்வியை மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் 2004 ஆம் ஆண்டு தொடங்கி 2007 ஆண்டு வரை மேற்கொண்டார். செம்பருத்தி மாத இதழின் ஆசிரியராக 2007 ஆம் ஆண்டு பணியாற்றினார். அதன் பிறகு, மலேசியத் தமிழ்க்கல்வி ஆய்வு மேம்பாட்டு அறவாரியத்தில் செயல்திட்ட அதிகாரியாக 2007 ஆம் ஆண்டு தொடங்கி 2008 ஆண்டு வரையில் பணியாற்றினார். கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தில் 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2009 வரையில் செயல்திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டு  Synovate Malaysia ஆய்வு மையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். 2011 தொடங்கி 2012 வரையில் ஈராண்டுக்குத் தனியார் நிறுவனமொன்றில் மனிதவள அதிகாரியாகப் பணியாற்றினார். 2012 தொடங்கி 2015 வரையில் மலேசியச் சமூகக் கல்வி அறவாரியத்தில் செயல்திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு தொடங்கி மலேசிய அரசு வானொலிப் பிரிவான ஆர்.டி.எம் வானொலியில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றுகின்றார். மலேசிய இந்திய மாணவர்களிடையே கல்விக் கருத்தரங்குகள், முகாம்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் இல்ஹாம் கல்விக் கழகத்தின் செயல்திட்ட அதிகாரியாக 2016 ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறார். 2021 ஆம் ஆண்டு பூபாலன் முருகேசனைத் திருமணம் புரிந்து கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கப்பள்ளியில் பயிலும் போதிருந்தே கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். பின்னர், பதின்ம வயதில் கவிதைகளை எழுதவும் செய்திருக்கிறார். அவ்வாறு எழுதப்பட்ட கவிதைகள் யாவும் சமூகம், சமூகப் போராட்டம், இனம், மொழி ஈழ விடுதலைப் போராட்டம், பெண் விடுதலை என வெகுஜனக் கவிதைகளின் கருக்களைக் கொண்டவையாக இருந்திருக்கின்றன. அதன் பிறகு கோலாலம்பூருக்கு இடம்பெயர்ந்தவுடன் இலக்கிய ஆர்வம் கொண்ட ம.நவீன், பா.அ.சிவம் போன்ற மலேசிய எழுத்தாளர்களுடனான நட்பு இலக்கியம் குறித்த மேலதிகத் தேடலை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகப் புத்தகங்கள், காலச்சுவடு, கணையாழி, உயிர்மை போன்ற இதழ்களை வாசிக்கத்தொடங்கியப் பின் கவிதைகளின் போக்குகள் குறித்த புரிதலை மேம்படுத்திக் கொண்டார்.  வல்லினம் ஆசிரியர் குழுவில் தீவிரமாகப் பங்காற்றியவர் பூங்குழலி வீரன். வல்லினம் இலக்கியக் குழுவின் தூண்டுதலாலும் கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

இலக்கிய இடம்

பூங்குழலியின் குழந்தைகள் மீதான அவதானிப்பு கொண்ட கவிதைகள் முகுந்த் நாகராஜனின் கவிதைகளை நினைவுறுத்துகின்றன என எழுத்தாளர் சாம்ராஜ் குறிப்பிடுகிறார்.

புத்தகங்கள்

  • உயிர் வேட்டை - கவிதைத் தொகுப்பு (2006)
  • பொம்மைகள் கூட பேசிக் கொண்டிருக்கலாம் - கவிதைத் தொகுப்பு (2013)
  • நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் - கவிதைத் தொகுப்பு (2013)
  • அகப்பறவை - கவிதைத் தொகுப்பு (2018)

பரிசுகள், விருதுகள்

  • கட்டுரை பிரிவுக்கான தான்ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது
  • மலேசிய தேசிய பல்கலைக்கழக கவிதைப் போட்டி வெற்றியாளர்
  • கவிதைப் பிரிவுக்கான சிலாங்கூர் மாநில இளம் திறனாளர் விருது (Selangor Young Talent Award (SEYTA))

உசாத்துணை

https://vallinam.com.my/version2/?p=531