being created

கமலா சத்தியநாதன்

From Tamil Wiki
Revision as of 09:16, 7 July 2022 by ASN (talk | contribs) (Para corrected)
கமலா சத்தியநாதன்

கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: 1879-1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி. ஆங்கிலத்தில் வெளியான தென்னிந்தியாவின் முதல் பெண்கள் இதழான ‘The Indian Ladies Magazine’-ன் ஆசிரியர். கல்வியாளர் சாமுவேல் சத்தியநாதனின் மனைவி.

பிறப்பு, கல்வி

ஹன்னா ரத்தினம் கிருஷ்ணம்மா என்னும் இயற்பெயர் கொண்ட கமலா சத்தியநாதன், ஜூலை 2, 1879-ல், ராஜமுந்திரியில், ஒருகன்டி சிவராமன் கிருஷ்ணம்மா - நானி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பிராமணர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய குடும்பம் அவர்களுடையது. உயர்கல்வியை உள்ளூரில் முடித்த கமலா, தனது சகோதரி சுந்தரத்துடன் கல்லூரிப் படிப்பை மசூலிப்பட்டினத்தில் உள்ள நோபிள் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு இண்டர்மீடியட்டில் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

தனி வாழ்க்கை

தன் மகள் கமலா மேற்கல்வி கற்க வேண்டும் என்று விரும்பினார் சிவராம கிருஷ்ணம்மா. சென்னை சர்வகலாசாலையில் (சென்னைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய பெயர்) கமலாவைச் சேர்த்தார். இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் ரெவரண்ட் W.T. சத்தியநாதன் அறிமுகமானார். அவரது மகனான சாமுவேல் சத்தியநாதனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைக்க விரும்பினார் சிவராமன். சாமுவேல் சத்தியநாதன் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றவர். சென்னை பிரசிடெர்ன்ஸி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏற்கனவே மணமாகி மனைவி கிருபா பாயை இழந்தவர் என்பதை சிவராம கிருஷ்ணம்மா அறிந்திருந்தார். கமலாவை விட 20 வயது அதிக வயதுடையவர் என்பதும் தெரிந்திருந்தார். ஆனாலும், சென்னை ராஜதானியின் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்த சாமுவேலுக்கே தனது மகள் கமலாவை அவர் மணம் முடிக்க விரும்பினார். கமலா - சாமுவேல் சத்தியநாதன் திருமணம் 1898-ல் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் அவர்கள் குடியேறினர்.

மனைவியின் ஆர்வங்களை அறிந்த சாமுவேல் சத்தியநாதன் அவர் முறையாக மேற் கல்வி பயில ஊக்குவித்தார். இளங்கலைப் பட்டத்திற்குப் பின் தான் பயின்ற தே சென்னைப் பல்கலையில் முதுகலை ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார் கமலா.

சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரி

கமலா சத்தியநாதன் எம்.ஏ.பட்டம் பெற்ற குறிப்பு

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த கமலா, ஆங்கிலத்தை மிக விரும்பிக் கற்றார். சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். அப்போதைய சென்னை ராஜதானியின் ஆங்கில இலக்கியத்தில் முதல் முதுகலைப்பட்டதாரியும் கமலா சத்தியநாதன் தான். இதனை அக்காலத்தில் வெளிவந்த இதழ்கள் பாராட்டி எழுதின.

சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழ்

பல்வேறு மொழிகள் அறிந்திருந்த கமலா, பெண்களின் உயர்வு பற்றிச் சிந்தித்தார். பிரிட்டிஷாரால் வெளியிடப்பட்ட ஆங்கில இதழ்களுக்கு அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்த அவர், நாமே ஏன் பெண்களுக்காக ஒரு பத்திரிகை தொடங்கக் கூடாது என்று நினைத்தார். கணவர் சாமுவேல் சத்தியநாதனும் அவரை ஊக்குவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழான ‘தி இண்டியன் லேடீஸ் மேகசின்’ (The Indian Ladies' Magazine) 1901-ல் உருவானது.

தி இந்தியன் லேடீஸ் மேகஸினின் சிறப்புகள்

தி இந்தியன் லேடீஸ் மேகஸின் - 1905 இதழ்

தமிழ்ப் பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை ’தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ தான். இவ்விதழ் மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவை பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வந்தது. By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும் பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை ‘கமலா சத்தியநாதன்’ எழுதியுள்ளார். பெண்கள் பலர் நன்கொடை செலுத்தி இவ்விதழ் வளர்ச்சிக்கு உதவினர். இந்தியா முழுமைக்குமான பெண்கள் இதழாக இவ்விதழ் இருந்தது.

கமலாவின் பிற பணிகள்

ஆவணம்

The Indian Ladies' Magazine இதழின் சில இதழ்கள் சென்னை தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மறைவு

ஜனவரி 26, 1950-ல் கமலா சத்தியநாதன் காலமானார்.

உசாத்துணை

The Indian Ladies' Magazine : தமிழ் இணைய நூலகம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.