being created

பாலகுமாரன்

From Tamil Wiki
Revision as of 20:38, 31 January 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

பாலகுமாரன்

பாலகுமாரன் (05-ஜூலை-1946 -15-மே-2018) தமிழில் பொதுவாசிப்புக்கான சமூகநாவல்களையும், வரலாற்று நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளர். யோகி ராம்சுரத்குமார் வழிவந்த ஆன்மிகவாதி. இந்து ஆன்மிகம் சார்ந்த நூல்களையும் பக்திநூல்களையும் புராண மறுஆக்கக் கதைகளையும் எழுதியவர். தன் காலகட்டத்தின் பொதுவான உளநெருக்கடிகளையும் பாலியல்சிக்கல்களையும் ஆன்மிகத்தேடல்களையும் புனைவுகளாக்கியவர் என்பதனால் பெரும் வாசக எண்ணிக்கை கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தார்

பிறப்பு, கல்வி

பாலகுமாரன்

பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை பெயர் வைத்தியநாதன். தாயார் சுலோசனா, ஒரு தமிழ் பண்டிதர். தனது தாயாரிடமிருந்தே வாசிப்பு மற்றும் எழுத்தார்வம் பிறந்ததாக கூறியுள்ளார். 1946ம் ஆண்டு பிறந்த பாலகுமாரன், பதினொராம் வகுப்பு வரை பள்ளி படிப்பு முடித்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சிப்பெற்று, 1969ம் ஆண்டு சென்னையிலுள்ள டஃபே என்னும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றதொடங்கினார்.

தனிவாழ்க்கை

பாலகுமாரன் மனைவியருடன்

பாலகுமாரனுக்கு இரு மனைவியர். கமலா, சாந்தா. மகன் சூர்யா, மகள் ஸ்ரீகெளரி.

இலக்கியவாழ்க்கை

பாலகுமாரன்

பாலகுமாரன் சென்னையில் சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோர் நடத்திவந்த கசடதபற சிற்றிதழ்க் குழுவில் இளம் வாசகராக ஈடுபட்டார். டெலிபோன் துடைப்பவள்’ என்னும் தலைப்பில் பாலகுமாரன் எழுதிய கவிதை, முதன்முதலாக கணையாழி இதழில் வெளியானது. பிறகு சாவி இதழில் சிறுகதைகளும், குறுங்கட்டுரைகளும் எழுதினார். பல்வேறு ஆளுமைகளை பேட்டிகண்டு எழுதினார். சின்னச்சின்ன வட்டங்கள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

டஃபே டிராக்டர் நிறுவனத்தில், நடந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் கலந்துக்கொண்டு அந்த அனுபவங்களை 1980ல் ’மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் பெயரில் சாவி இதழில் தொடர்கதையாக எழுதினார். 1981ல் அது நூலாக வெளிவந்தது.மெர்க்குரிப் பூக்கள் நாவல் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரும்புக் குதிரைகள் தொடர்கதையை கல்கி இதழில் எழுதினார். தொடர்ந்து தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட தொடர்கதை எழுத்தாளர்களில் ஒருவராக ஆனார்.

மாலன், சுப்ரமணிய ராஜூ போன்றவர்களுடன் நட்புக்கொண்டிருந்த பாலகுமாரன், எழுத்தின் நுணுக்கங்களை சொல்லிதந்ததாக எழுத்தாளர் சுஜாதா அவர்களை குறிப்பிடுகிறார். பாலகுமாரனின் படைப்புகளில் தி.ஜானகிராமனின் செல்வாக்கு உண்டு

திரைப்படம்

பாலகுமாரன் 1987ல் மணிரத்னத்தின் நாயகன் படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார். இயக்குநர் பாலசந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பாலசந்தர் இயக்கத்தில் பாலகுமாரன் எழுதிய சிந்து பைரவி தேசிய விருதுபெற்ற படம். இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தை இயக்கினார். மொத்தம் 27 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

ஆன்மிகம்

பாலகுமாரன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரை தன் ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டார். பக்தியும் வேதாந்தமும் கலந்த ஒரு வழிபாட்டுமுறையை தனக்காக உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஆன்மிக மாணவர்களும் இருந்தனர்

மறைவு

14 மே 2018 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

பாலகுமாரன் இரண்டு புனைவுமரபுகளின் இணைப்பு. வணிகக்கேளிக்கை எழுத்து மரபில் வந்த ஆர்வி, பிவிஆர் போன்றவர்களின் எழுத்துமுறையின் நீட்சி அவர். கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துமுறையால் தூண்டுதல்கொண்ட இளைஞர்களில் ஒருவராக அவர் எழுத ஆரம்பித்தார். ஆண்பெண் உறவின் நுட்பமான உளவியல்நாடகங்களை, புரிதல்களை எழுதுவது இந்த மரபு. பாலகுமாரன் இவ்விரு மரபுகளையும் இணைத்தவர். பாலகுமாரனின் நடை பேச்சுமொழிக்கு மிக அண்மையானது. ஆசிரியர் வாசகர்களிடம் நேரடியாக கதையைச் சொல்வதுபோன்ற பாவனை கொண்டது.

தனக்கு முன்பிருந்த வணிகக்கேளிக்கை எழுத்தில் இருந்த சலிப்பூட்டும் இரு கூறுகளை பாலகுமாரன் களைந்தார். ஒன்று, சுழன்று சுழன்றுசெல்லும் கதைப்போக்கு. இரண்டு ,செயற்கையான நாடகத்தருணங்கள். பதிலுக்கு நவீனத்துவ இலக்கிய எழுத்துமுறையில் இருந்து பெற்றுக்கொண்ட கச்சிதமான சுருக்கமான கதைசொல்லும் முறையை வணிகக்கேளிக்கை எழுத்துக்கு அறிமுகம் செய்தார். செயற்கையான நாடகத்தருணங்களை உருவாக்காமல் அன்றாடத் தருணங்களில் உள்ள உளவியல் ஆழத்தை சுட்டிக்காட்டி அழுத்தமான உணர்ச்சிகளை வாசகர்களிடம் உருவாக்கினார். ஆகவே அவருடைய எழுத்துக்கள் முற்றிலும் புதிய அனுபவமாக வாசகர்களுக்கு இருந்தன.

நவீனத் தமிழிலக்கியத்தில் உருவாகி வலுப்பெற்றிருந்த புதுக்கவிதையின் அழகியலையும் பாலகுமாரன் நாவல்களுக்குள் கொண்டுவந்தார். கரையோரமுதலைகள் போன்ற நாவல்களில் உருவகத்தன்மை கொண்ட கவிதை நேரடியாகவே இணைக்கப்பட்டிருந்தது. அவை பொதுவாசகர்களுக்கு புதியவை. கசடதபற இலக்கியக்குழுவில் இருந்து பெற்றுக்கொண்ட நவீனக் கவித்துவம் தொடக்ககால பாலகுமாரன் கதைகளின் தனித்தன்மையாக இருந்தது.லகுமாரன் பி.வி.ஆர் போல வெவ்வேறு வாழ்க்கைக் களங்களை ஆராய்ச்சி செய்து அவற்றில் தன் நாவல்களை அமைத்தார். அவையும் அவருடைய நாவல்களுக்கு புதுமையை அளித்தன. இரும்புக்குதிரைகள் லாரி ஓட்டுநர்களின் உலகைச் சார்ந்த நாவல்

பின்னாளில் பாலகுமாரன் ஆன்மிக உள்ளடக்கம் கொண்ட நாவல்களையும் புராண மறு ஆக்கங்களையும் எழுதினார்.பிற்காலத்தைய படைப்புகளில் உடையார், கங்கைகொண்ட சோழன் ஆகிய இரு நாவல்களும் அளவில் மிகப்பெரியவை. இவற்றில் உடையார் பாலகுமாரனின் முக்கியமான இலக்கியப் பங்களிப்பு. ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தின் விரிவான சித்தரிப்பை, தஞ்சைபெரியகோயில் அமைத்தல் என்னும் பண்பாட்டு பெருநிகழ்வின் காட்சியை அளித்தமையால் அந்நாவல் இலக்கிய முக்கியத்துவம் உடையது. பாலகுமாரனின் சிறந்த நாவல் அப்பம் வடை தயிர் சாதம். தஞ்சையில் இருந்து சென்னை வரை சென்ற நூற்றாண்டில் பிராமணர்களின் வாழ்க்கையின் நகர்வை குடும்பப்பின்னணியில் எழுதிய குறிப்பிடத்தக்க ஆக்கம் அது

படைப்புகள்

நாவல்கள்

பாலகுமாரன் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் (நூல்பட்டியல் இணைப்பு*) இவற்றில் முக்கியமானவை சில

  • மெர்க்குரிப்பூக்கள்
  • கரையோர முதலைகள்
  • பச்சைவயல் மனது
  • அகல்யா
  • செண்பகத்தோட்டம்
  • பனிவிழும் மலர்வனம்
  • கடல்நீலம்
  • பயணிகள் கவனிக்கவும்
  • துணை
  • மீட்டாத வீணை
  • வெற்றிலைக்கொடி
  • என்மனது தாமரைப்பூ
  • கல்யாணமுருங்கை
  • ஆசைக்கடல்
  • தாயுமானவன்
  • இரும்புக்குதிரைகள்
  • திருப்பூந்துருத்தி
  • ஆனந்த வயல்
  • கடலோரக் குருவிகள்
  • கண்ணாடிக் கோபுரங்கள்
  • பந்தயப்புறா
  • அப்பம் வடை தயிர்சாதம்
  • உடையார் (6 பகுதிகள்)
  • கங்கைகொண்ட சோழன் ( 4 பகுதிகள்)
கட்டுரைகள்
  • காதலாகிக் கனிந்து
  • ஞாபகச் சிமிழ்
  • சூரியனோடு சில நாட்கள்
  • அந்த ஏழு நாட்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
  • சுகஜீவனம்
  • கடற்பாலம்
கவிதைத் தொகுப்புகள்
  • விட்டில்பூச்சிகள்
ஆன்மிகம்
  • விசிறி சாமியார் (1991 திசம்பர்)
  • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
  • குரு
தன்வரலாறு
  • முன்கதைச் சுருக்கம்
  • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
  • ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்) 1981
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
  • தமிழ்நாடு மாநில விருது (கடற்பாலம் - சிறுகதை தொகுப்பு)
  • கலைமாமணி
  • கவிஞர் வாலி விருது2017
  • மா.போ.சி விருது

திரையுலக விருதுகள்

  • தமிழ்நாடு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்) 1994

உசாத்துணை

http://writerbalakumaran.com/