under review

கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார்

From Tamil Wiki
Revision as of 17:36, 5 July 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Template error corrected)

கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய மூன்று பாடல்கள் அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

கொடியூர்கிழாரின் மகனாக கொடியூரில் பிறந்தார். இவருடைய தந்தை அரசரால் கிழார் என்ற சிறப்புப்பட்டம் பெற்றார். நற்றிணையில் இரண்டு நெய்தல் திணைப்பாடலகளும், சங்கத்தொகை நூல்களில் இடம் பெறாத இவரின் பல பாடல்களும் நெய்தல் திணையைச் சேர்ந்ததால் நெய்தல் தத்தனார் என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் மூன்று பாடல்கள் அகநானூறு (243), நற்றிணை (49, 130) ஆகியவற்றில் பாடினார். நற்றிணையில் இரண்டு நெய்தல் திணைப்பாடல்களும், அகநானூற்றில் ஒரு பாலைத்திணைப்பாடலும் இவர் பாடினார். தனித்திருக்கும் தலைவியின் துயரையும், பாலையின் பிரிவையும் பாடினார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • வாடைக்காற்று வீசும்போது அவரைப் பூக்கள் உதிரும்.
  • வளைந்து தழைத்த துர் கட்டிய ஈங்கைச் செடி பவளம் போன்ற செந்நிறப் பூக்கள் பூக்கும்.
  • தலை குப்புற இறங்கித் தொங்கும் பூங்கொத்துகளை உடைய பகன்றைப்பூ இறங்கும் பனிநீர்த் திவலைகள் போல எங்கும் பரந்து பூக்கும்.
  • நெல்லுப்பயிர் காயாத பச்சைநெல் காய்க்கும் கதிர் வாங்கும்.
  • நெய்தல் வாழ்க்கை.

பாடல் நடை

  • அகநானூறு: 243

அவரை ஆய் மலர் உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈரம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!

  • நற்றிணை: 49

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச்
சென்று நாம் அறியின், எவனோ- தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறுவீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?

  • நற்றிணை: 130

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது,
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர்
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.

உசாத்துணை


✅Finalised Page