கைம்மை

From Tamil Wiki
Revision as of 18:10, 2 July 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கைம்மை : கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை. கைம்மையை ஒரு நோன்பாக வாழவேண்டும் என்று தமிழ்நூல்கள் கூறுகின்றன. கடுமையான தற்கட்டுப்பாடுகளும், சமூகக் கட்டுப்பாடுகளும் இருந்ததை சங்ககா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கைம்மை : கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை. கைம்மையை ஒரு நோன்பாக வாழவேண்டும் என்று தமிழ்நூல்கள் கூறுகின்றன. கடுமையான தற்கட்டுப்பாடுகளும், சமூகக் கட்டுப்பாடுகளும் இருந்ததை சங்ககால நூல்கள் காட்டுகின்றன

சொல் வளர்ச்சி

கைம்மை என்னும் சொல்லுக்கு எஸ். வையாபுரிப்பிள்ளை பேரகராதி கீழ்க்கண்ட பொருள்களை அளிக்கிறது. கணவனைப் பிரிந்திருக்கும் நிலை. கணவனை இழந்த நிலை. சிறுமை.( கைம்மை கொள்ளேல் காஞ்சன் மணி ) அறிவின்மை (கைம்மையினாயின் கால்பாவாது ) பொய் (கைம்மைசொல்லி)

இச்சொல்லில் வேர்ச்சொல் கை என்று வையாபுரிப்பிள்ளை சொல்கிறார். கையறு நிலை என்னும் சொல்லில் இருந்து வந்தது. கையறு நிலை என்பது புறத்துறைகளில் ஒன்று. தலைவனோ தலைவியோ இறந்தமைக்கு அவர் ஆயத்தார் முதலானோர் மிக வருந்தியமையைச் சொல்வது. பொதுவாக மறைந்த அரசனை எண்ணி வருந்தி எழுதப்படும் பாடல்கள் இதில் வருகின்றன. (கழிந்தோர் தேஎத் தழிபட குறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை- தொல்காப்பியம் பொருளியல் 79)

ஆனால் கைம்மை என்பதற்கு இன்னொரு வேர்ச்சொல்லும் எண்ணத்தக்கதே. கைப்பு என்னும் சொல் கசப்பு என்பதன் முன்வடிவம். (கைப்பறா பேய்ச்சுரையின் காய்- நாலடியார். 116) வெறுப்புக்கும் துயரத்திற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழின் தொல்வடிவங்கள் நிலைகொள்ளும் மலையாளத்தில் கைப்பு என்பது கசப்பு, துயர் என்று பொருள் கொள்கிறது