ஞானாலயா ஆய்வு நூலகம்

From Tamil Wiki
Revision as of 00:18, 28 June 2022 by ASN (talk | contribs) (para corrected)
ஞானாலயா ஆய்வு நூலகம் - புதுக்கோட்டை

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். இது 1959-ம் ஆண்டு, நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி - டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையர் இணைந்து நடத்தி வருகின்றனர். இருவருமே ஆசிரியராகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றவர்கள்.

நூலக உருவாக்கம்

பள்ளி ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தியும், தாவரவியல் துறை பேராசிரியரான அவரது மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தியும், தங்கள் பணி ஓய்வின்போது கிடைத்த தொகை ரூபாய் 11 லட்சத்தைக் கொண்டு, தங்களது வீட்டை அடுத்து நூலகத்திற்கு என்று ஒரு கட்டிடத்தை எழுப்பினர். அது கீழ்த்தளம், மேல் தளம் என இரண்டு அடுக்குகளைக் கொண்டதாகும்.

ஞானாலயா நூலகம் - பெயர்க் காரணம்

ஆரம்பத்தில் ‘மீனாட்சி நூலகம்’ என்று தனது தாயாரின் பெயரில்தான் இந்த நூலகத்தை நடத்தி வந்தார், கிருஷ்ணமூர்த்தி. அது வாடகை நூல் நிலையத்தின் பெயர் போல இருப்பதாக நண்பர்கள் சொல்லவும், ‘ஞானாலயா’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

நூல் சேகரிப்பு ஆர்வம்

கிருஷ்ணமூர்த்தியின் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் மூலம் கிருஷ்ணமூர்த்திக்குச் சிறு வயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. ஒரு சமயம் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், நூறு புத்தகங்களை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து ‘இவற்றை கவனமாகப் பாதுகாத்து வா’ என்று சொன்னார். அதில் ஒரு புத்தகம், கிருஷ்ணமூர்த்தியின் தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி, 1873ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது, எஸ்.எஸ்.எல்.சியில் தமிழில் முதல் பரிசு பெற்றதற்காக் கிடைத்த பரிசு நூலாகும். ‘Footprints of Famous men’ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். தாத்தா பொன்னுசாமி கையெழுத்திட்டிருந்த ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலும் அந்தச் சேகரிப்பில் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி வியப்புற்றார். அதுவே பழைய புத்தகங்களின் மீதான கிருஷ்ணமூர்த்தியின் காதலுக்கும் தேடலுக்கும் காரணமானது.

இதழ்கள் சேகரிப்பு

டோரதி - கிருஷ்ணமூர்த்தி இணையர்

கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களைச் சேகரிப்பது மட்டுமில்லாமல் பத்திரிகைகளின் சேகரிப்பிலும் தனித்த கவனம் செலுத்தினார். பாரதியின் சுதேச கீதங்கள், உ.வே.சா.வின் மணிமேகலை போன்றவற்றின் முதல் பதிப்பில் இடம்பெற்ற பல விஷயங்கள் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை என்பதை அறிந்தார் கிருஷ்ணமூர்த்தி. அது முதல் முதற் பதிப்பைச் சேர்ப்பது, அவை வெளியான மூல நாளிதழ்கள், வார, மாத இதழ்களைச் சேர்ப்பது என்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். குமரி மலர் ஆசிரியரும், காந்தி பற்றிய குறும் படத்தை எடுத்தவருமான ஏ.கே. செட்டியார், கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளை ஊக்குவித்தார். பல இதழ்கள், புத்தகங்கள் கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைக்க அவர் வழிகாட்டினார்.

மனைவி டோரதியும் கணவரது முயற்சிகளுக்கு உதவியாக இருந்தார். இருவரது ஊதியப் பணத்தையும் பெரும்பாலும், பழைய இதழ்கள், அரிய நூல்கள் வாங்குவதற்குச் செலவிட்டனர். அப்படிப் படிப்படியாகச் சேகரித்த நூல்களே இன்றைக்கு ஞானாலயா ஆய்வு நூலகமாக வளர்ந்திருக்கிறது.

புத்தகச் சேகரிப்பு முயற்சிகள்

20 வயதிலேயே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத் தேடல் துவங்கிவிட்டது. பேருந்துகளில் சென்றும், குக்கிராமங்களுக்கு நடந்தும், சைக்கிள்களில் பயணப்பட்டும் பல இடங்களுக்குச் சென்று புத்தகங்களைச் சேகரித்திருக்கிறார். அலைச்சல்களையும் ஏமாற்றத்தையும் எதிர்கொண்டிருக்கிறார். செட்டிநாட்டுப் பகுதியில் நாள் முழுக்க, காலை முதல் மாலை வரை காத்திருந்து வெறும் கையுடன் திரும்பிய அனுபவமும் உண்டு. மிகுந்த பொறுமையுடனும், அர்ப்பணிப்புடனும், சலிப்பில்லாமல் இவர் சேகரித்தவைதான், இன்றைக்கு ஒன்றரை லட்சம் நூல்களாக ஞானாலயாவில் காட்சி தருகின்றன.

ஞானாலயாவில் புத்தக வரிசை

ஞானாலயாவில் புத்தக அலமாரிகள்

ஞானாலயாவில் எழுத்தாளர்களின் அடிப்படையில் புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சான்றாக, காந்திக்காக ஒரு புத்தக அலமாரி உள்ளது என்றால், அதில் முதல் வரிசையில் காந்தி பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள் உள்ளன. அடுத்த வரிசையில் தமிழ்ப் புத்தகங்கள். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் நூலக அடுக்கில் முதலில் தமிழில் வந்தவை, பின்னர் ஆங்கிலத்தில் வெளியானவை வைக்கப்பட்டுள்ளன. பின்னால் கீதையின் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

அடுத்த வரிசையில் பாரதியார் நூல்கள் முழுமையும் உள்ளன. பின்னால் குரான், பைபிள். அடுத்து ராமாயணம். வால்மீகி, துளஸிதாசர், கம்பன் எல்லாருடைய பதிப்புகளும் உள்ளன. அடுத்து உரையாசிரியர்கள் திரு,வி.க., மறைமலையடிகள் நூல்கள். தொடர்ந்து திருக்குறள் அனைத்து பதிப்பு, ஆராய்ச்சி நூல்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு வரலாறு, மன்னர்கள் வரலாறு. ஒரு அலமாரி வரிசையில் சிறுகதைகள். துறைவாரியாகவும், நூல் பெயர்வாரியாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

விழா மலர்கள், செய்தித் தொகுப்புகள், கட்டுரைகள், தின இதழ்கள் தனி அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. இப்படி நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆன்மிக நூல்கள் எனத் தனித்தனி அலமாரி வரிசைகளில் புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இரு தளங்களில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது தளத்தில் அறிஞர்கள், ஆய்வாளர்கள் சந்திப்பிற்கான கூடம் உள்ளது. நூலகத்தில் உள்ள நூல்களுக்கு எண்ணிடப்பட்டு ஒவ்வொரு அலமாரியிலும் அந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

ஞானாலயாவில் இருக்கும் அரிய நூல்கள்

  • 1578ல் தமிழில் அச்சான முதல் நூலான ‘தம்பிரான் வணக்கம்’ நூலின் நகல் இங்குள்ளது.
  • தமிழில் கலித்தொகையைப் பதிப்பித்த, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியான சி.வை. தாமோதரம் பிள்ளை பயன்படுத்திய 1880-ம் வருடத்துச் ‘சதுரகராதி’ இங்கு உள்ளது. அதன் சிறப்பு, சதுரகராதியை அச்சிட்டவர்கள் ‘முருகன் துணை’ என்று அச்சிட்டிருக்க, தாமோதரம் பிள்ளை அதனை அடித்துவிட்டு, அதற்கு மேல் சின்னதாக ஒரு சிலுவைக் குறியைப் போட்டு, கூடவே ’இம்மானுவேல் துணை’ என்று தன் கையால் எழுதியிருப்பதுதான்.
  • 1835-ல் தொடங்கி தமிழில் வெளி வந்த ஏராளமான புத்தகங்களின் அரிய முதல் பதிப்புகளும், 1,500க்கும் மேற்பட்ட பழைய இதழ்களும் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. 1928ல் வெளியான, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் முதல் மொழிபெயர்ப்பு நூல் ‘கல்வி கற்பித்தல் - ஒரு புதிய அணுகுமுறை’ இங்கு உள்ளது.
  • அது போல At ‘The Feet of the Master’ என்னும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அரிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான, ’குருநாதரின் அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பிலான நூலும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • தமிழ்-லத்தீன்-பிரெஞ்சு அகராதி, லத்தீன் -தமிழ் அகராதி போன்றவை இங்கு பாதுக்காக்கப்பட்டுள்ளன.
  • ‘குமரிமலர்’ இதழ்த் தொகுப்புகள் முழுமையாக ஞானாலயாவில் இருக்கின்றன.
  • உ.வே.சாமிநாதையர். பதிப்பித்த சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குறுந்தொகை முதலிய நூல்கள் இருக்கின்றன.
  • ஆர்.கே. சண்முகம் செட்டியார், சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்திற்கு எழுதிய அரிய உரை நூல் இங்கே உள்ளது.
  • சக்தி வை. கோவிந்தன், தனது வெளியீடான ‘சக்தி மலர்’ மூலம் வெளியிட்ட முதல் நூலான ’இனி நாம் செய்ய வேண்டியது யாது?” என்னும் டால்ஸ்டாய் நூல் (What’s will we do that?) ஞானாலயாவின் சேகரிப்பில் உள்ளது.
  • தனிச் செய்யுள்களின் தொகுப்பாக, முறையூர் ஜமீனாக இருந்த சண்முகஞ்செட்டியாரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட ‘தனிச்செய்யுட் சிந்தாமணி’ நூல் இங்குள்ளது. இந்த நூல் தான் பிற்காலத்தில் வெளியான தனிப்பாடற்றிரட்டு நூல்களுக்கு எல்லாம் முன்னோடி நூல்.
  • எஸ்.எஸ். வாசனின் 'நாரதர்' தொகுப்பு உள்ளது.
  • பூதூர் வைத்தியநாத ஐயர் நடத்தி வந்த ஆனந்த விகடன், எஸ்.எஸ். வாசனின் பொறுப்பில் வெளியான ஆனந்த விகடன், பூதூர் வைத்தியநாத ஐயர் மீண்டும் புதிதாக உருவாக்கி நடத்திய ஆனந்த விஜய விகடன் போன்ற நூல்கள் இங்கு சேகரிப்பில் உள்ளன.
  • பாண்டித்துரைத் தேவரால் தொகுக்கப்பட்ட பன்னூற்றிரட்டு நூல் இங்கு பாதுகாக்கப்பட்டுள்லது.
  • ஏ.கே.செட்டியாரின் உலக நாடுகள் குறித்த பயண நூல்கள், சக்தி வை. கோவிந்தனின் பிரசுரங்கள் முழுமையாக இங்கே சேகரிப்பில் உள்ளன.
  • அப்புண்ணி நாயர் என்னும் தயானந்த சரஸ்வதி எழுதிய, ஈ.வெ.ரா. நடத்திய குடியரசின் முதல் வெளியீடான ‘ஞான சூரியன்’ நூல் இங்கு உள்ளது. அந்த நூலுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை., மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற பல தமிழ் அறிஞர்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர். இப்போதைய சுயமரியாதை இயக்கப் பதிப்பில் இந்த அணிந்துரைகள் இல்லை என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் ராஜாஜி எழுதிய முன்னுரையுடன், சாவர்க்கர் எழுதியிருக்கும் அணிந்துரையும் இடம் பெற்ற, வ.வே.சு.ஐயரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மங்கையர்க்கரசியின் காதல்’ இங்கு இருக்கிறது. பிற்காலத்தில் வந்த பதிப்புகளில் இவை இல்லை.
  • வ.வே.சு. ஐயரின் சிறப்பான முன்னுரை கொண்ட திருக்குறளின் மொழிபெயர்ப்பான ‘Kural or The Maxims of Tiruvalluvar’ நூல் இங்குள்ளது. சித்பவானந்தர் அமைப்பு மூலம் அது மீண்டும் வெளியாகியுள்ளது. ஆனால், வ.வே.சு. ஐயர் எழுதிய முன்னுரை அதில் இல்லை.
  • காந்தி பற்றிய மிகப் பெரிய தொகுப்பு ஞானாலயாவில் உள்ளது. அதில் ஒன்று இந்திய அரசின் பப்ளிகேஷன் டிவிஷன் வெளியிட்ட ’MAHATMA GANDHI' என்னும் நூல்.
  • பாரதியால் சாற்றுக்கவி வழங்கப்பட்ட ‘வருணசிந்தாமணி’ நூல் இங்கு உள்ளது.
  • ஸ்ரீ ரமண மகரிஷிகளின் நூல்களுக்கென்று ஒரு தனி வரிசை உள்ளது.
  • 1938-ல், குஞ்சிதம் குருசாமி வெளியிட்ட, பாரதிதாசனின் முதல் தொகுதி இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • அரிய கடிதங்கள், அரிய இலக்கிய நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
  • மாதவையாவின் பஞ்சாமிர்தம், வ.வே.சு.ஐயர் நடத்திய பாலபாரதி, குகப்ரியை ஆசிரியையாக இருந்த மங்கை, சுதேசமித்திரன், விவேகபோதினி, கலைமகள், சக்தி, மஞ்சரி, சங்கு, சுதந்திரச் சங்கு, ஊழியன், தன வைசிய ஊழியன், குமரன், குடியரசு, விடுதலை, தமிழரசு, செங்கோல், தாமரை, சரஸ்வதி இதழ் தொகுப்புகள், ஜம்புநாதன் தமிழாக்கிய வேதத் தொகுப்புகள் என அந்தக்காலதில் வெளியான நூல்கள், இதழ்கள் இங்கு உள்ளன.
  • அக்காலத்தில் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட நூல்கள் சிலவும் இங்கு உள்ளன.

ஞானாலயா நூலகத்தின் சிறப்புகள்

  • மற்ற நூலகங்களில் நூலகர் ஒருவருக்குத் தேவையான நூல்களைத் தேடி எடுத்துத் தரக்கூடும். ஆனால் ஞானாலயாவில் ஒருவருக்குத் தேவையான நூலின் பின்னணி, அதன் பதிப்பு வரலாறு, அதை எழுதியவர் பற்றிய குறிப்பு, அதனை அச்சிட்டவர், வெளியிட்டவர்கள் பற்றிய குறிப்புகள், அதோடு தொடர்புடைய பிற சம்பவங்கள், பிற நூல்கள் எனப் பல தகவல்களை விளக்கமாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து நேரடியாக, வாய்மொழியாகத் தெரிந்து கொள்ள முடியும் என்பது இந்த நூலகத்தின் மிக முக்கியமான சிறப்பாகும்.
  • இந்த நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.
  • தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் பலவற்றல் பல அரிய நூல்கள் இங்கிருந்து பெறப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  • 100க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்தி இள முனைவர், முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இன்றும் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.