being created

சல்மா

From Tamil Wiki
Revision as of 10:42, 27 June 2022 by Jayashree (talk | contribs)
tamil.oneindia.com

சல்மா (இயற்பெயர் ருக்கையா பேகம்) தமிழ்க் கவிஞர் , நாவலாசிரியர், மற்றும் அரசியல்வாதி. பெண்களின் அக உலகையும், தனக்குள்ளேயே வசிக்க நேர்ந்துவிட்ட தனிமையயும் பாடுபொருளாகக் கொண்டவை சல்மாவின் கவிதைகள். இஸ்லாமிய சமூகத்துப் பெண்களின் அக உலகை சித்தரித்த அவரது ‘இரண்டாம் சாமங்களின் கதை’, யின் ஆங்கில மொழியாக்கம் ஆசியப் படைப்புகளுக்கான புக்கர் விருதின் தேர்வுப்பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படைப்பு. அரசியல் தளத்தில் பேரூராட்சித் தலைவியாகயும் தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவியாகவும் தி.மு.க.வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராகவும் செயல்பட்டார்.

பிறப்பு,கல்வி

ராஜாத்தி சல்மா 1968-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என்ற ஊரில் சம்சுதீன், சர்புன்னிசா இணையரின் மகளாகப் பிறந்தார். துவரங்குறிச்சியில் 13 வயது வரை பள்ளிக்குச் சென்றார். சிறு வயதில் குரான் ஓதுவதற்கான போட்டிகளில் பரிசுகள் பெற்றார்.

அடுத்த வீட்டில் வசித்த பெரியப்பாவின் மகன் அப்துல் ஹமீது(கவிஞர் மனுஷ்யபுத்ரன்) சல்மா வெளியுலகைப் பார்ப்பதற்கான ஜன்னலாக இருந்தார். அவர் மூலம் பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. ராணி”, “அரசி” போன்ற பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுதி, அவை பிரசுரமாகின. அப்துல் ஹமீதைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் புத்தகங்களும், தகவல்களும் சல்மாவின் வாசிப்பைப் பரவலாக்கின. தமிழின் முக்கியப் படைப்புகள், பெரியாரின் நூல்கள் மற்றும் ரஷ்ய இலக்கியங்களின் அறிமுகம் கிடத்தது. எழுதுவதற்கான ஆர்வம் தோன்றியது. சல்மா கவிதைகள் எழுதத் துவங்கினார். அப்துல் ஹமீது மூலமோ அல்லது தன் பெற்றோர் மூலமோ தன் கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். பல கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

தனி வாழ்க்கை

தனது பதினேழாம் வயதில் அப்துல் மாலிக்குடன் திருமணம் நடந்தது. சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு மகன்கள். ஒரு பெண் எழுதுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழலில் கணவருக்கோ, வீட்டில் உள்ளவர்களுக்கோ தெரியாமல் அப்துல் ஹமீது மூலமோ அல்லது தன் பெற்றோர் மூலமோ தன் கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். சல்மா என்ற புனைபெயரில் எழுதினார். பல கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. எழுதுவதன் மூலமே தனக்கான அடையாளத்தைத் தக்க வைக்க முடியும் என நம்பினார்.

1995-ல் சுந்தர ராமசாமியச் சந்தித்த பின், அவரிடம் கடிதத் தொடர்பில் இருந்தார்.

இலக்கியப் பணிகள்

மனுஷ்யபுத்திரனினின் முயற்சியால் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' என்ற தொகுப்பு 2000-ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகமாக வெளிவந்தது. கவிதையின் பாடுபொருள் பெரும்பாலும் ‘தனக்குள்ளேயே வசிக்க நேர்ந்து விட்ட நீண்ட தனிமை’. இத்தொகுப்பிலுள்ள 59 கவிதைகளில் 17 தலைப்பில்லாதவை.

நவம்பர் 2003-ல் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' நாவலை எழுதினார். சுந்தர ராமசாமி, லல்லி, காலச்சுவடு கண்ணன் ஆகியோர் தந்த உற்சாகத்தினாலும், அக்கறையான நினைவுறுத்தல்களாலுமே இந்த நாவலை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். இஸ்லாமியச் சமூகப் பெண்களின் அகவுலகை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்தே எழுதிய படைப்பு . திருமண உறவின் மூலம் ஏற்படுத்தப்படும் இறுக்கம், உடலியல் சார்ந்த துன்பங்கள், மறுக்கப்படும் காமம், அவளைச் சுற்றி நிகழும் சுரண்டல்கள் பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் என பல்வேறு விடயங்களை பகிங்கரமாகச் சொல்கிறது. சமூகத்துக்காகப் பூசிக் கொண்ட முகப் பூச்சுகளையெல்லாம் கழுவித் துடைத்துவிட்ட பின், அடிப்படையாக ஒரு மனித உயிராக மட்டும் இருத்தலின் பொழுதான இரண்டாம் ஜாமம் பல புரிதல்களைத் தரவல்லது. மறுபடியும் அடுத்த நாள் விடிந்துவிட்டால் பூச்சுகள் திரும்பி விடும். பூச்சற்ற உண்மைப் பெண்களின் கதை ஜாமங்களில் தான் எழுதப் படுகிறது.

இரண்டாம் கவிதைத் தொகுப்பான 'பச்சை தேவதை 2003-ல் வெளிவந்தது. பெண்கள் மட்டுமே உணர்ந்து எழுதக்கூடிய பல்வேறு விதமான படிமங்கள், காட்சிப்படலங்கள் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் நிரம்பிக்கிடக்கிறது.

சல்மாவின் சிறுகதைத் தொகுப்பு ' சாபம் '2008-ல் வெளியானது. இரண்டாவது நாவல் 'மானாமியங்கள்' 2013-ல் வெளியானது.

அரசியல் பணிகள்

பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சல்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டு, தேர்தலில் வென்றார். 2002-ல் இலங்கையில் நடந்த சர்வதேசப் பெண்ணுரிமை மாநாட்டில் பங்குகொள்ள அழைக்கப்பட்டார். 2004-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 2006-ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார். சமூகநல வாரியத்தில் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தார். திருச்சி நகரில் பிச்சை எழுப்பவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்தார். கிராமத் தத்தெடுப்புத் திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தில் பெண் முன்னேற்றம், அனைவருக்குமான கல்வி, போன்ற திட்டங்கள் முன்னெடுத்தார். திருச்சி மாவட்டத்தில் திருநங்கையருக்கான ஆலோசனை மையங்கள், ஆதரவற்ற பெண்களுக்கான கணினி மையங்கள்,மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை அவரது தலைமையில் சமூகநல வாரியம் ஏற்படுத்தியது.

இலக்கிய இடம்

நவீனத் தமிழில் பெண்ணெழுத்து தீவிரம் பெற்ற கட்டத்தில் முதன்மையாக வெளிப்பட்டவற்றில் ஒன்று சல்மாவின் கவிதை மொழி. தன்னை உணர்ந்த தன் இருப்பை அறிந்து தனது விடுதலையை விழையும் பெண் நிலையைச் சொன்னவை இவரது கவிதைகள்.

சமூகக் கட்டமைப்பின் ஒடுக்குமுறை தரும் வலியும் வேதனையும், உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் கசியும் மொழியில் சல்மாவின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. அவரது ஆரம்ப காலக் கவிதைகளில் ஒரு இயலாமை, மீற முடியாமை. என்று இன்னும் பல பெண் உலகத்துக்கான சலிப்புகள் தெரிகின்றன. பல கவிதைகளிலும் கொடுந்தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும் இழையோடுகின்றன.

அவர் முன்னே கட்டியெழுப்பப் பட்டிருந்த தடைகளும், அதனால் அவர் எதிர் நோக்கிய பிரச்சனைகளும், அதையும் தாண்டி அவர் வெளியுலகுக்கு வந்த விதங்களும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு - முடியும் - என்றதொரு தன்னம்பிகையை அளித்தன.

"சமூகம், அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் உடையவை, இல்லாதவை என நவீன கவிதைகளைப் பிரித்தால் இரண்டாம் வகையில் சல்மா வின் கவிதைகள் அடங்கும். துணிச்சலும், நளினமும் சல்மாவின் கவிதைகளில் தெரிகின்றன. கவனிப்பைத் தக்கவைக்கும் கவிஞர் சல்மா" என்று ஞானக்கூத்தன் குறிப்பிடுகிறார்.

மொத்தத்தில், மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் சமூகத்தின் நடைமுறைகளுக்குமிடையில் அகன்று செல்லும் இடைவெளி பற்றியும் அதற்குள்ளே புழுங்கியும் நசுங்கியும் கொண்டிருக்கும் பெண்ணுலகம் பற்றியுமான ஒரு துக்கம் நிரம்பிய பதிவு தான் சல்மாவின் மனாமியங்கள்[1].

படைப்புகள்

பரிசுகள், விருதுகள்

  • 2002 - இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது.
  • 2003 - அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும்,
  • 2004 - இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார்.
  • 2011 - அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.
  • 2016 - ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது
ஆவணப்படம்

2013-ல் வெளிவந்த 'சல்மா' என்ற ஆவண நிகழ்படம் கவிஞர் சல்மாவினது தன்வரலாற்றையும் அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளின் பின்னால் உள்ள சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் சிக்கல்களையும் பற்றியது . இப் படத்தை கிம் லோங்னோரோ (Kim Longinotto) இயக்கினார்.

இப் படம் 2009-ல் சண்டான்ஸ்(Sundance) திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு, பின்னர் பல நாட்டு விழாக்களிலும் நிகழ்வுகளிலும் திரையிடப்பட்டது.

உசாத்துணை

முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள் -சல்மா நேர்காணல் பெ. அய்யனார்சல்மாவின் கவிதைகளில் பெண் மொழியும் பெண் இருப்பும்

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்-கவிதைகல்-திண்ணை

சல்மா கவிதைகள் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் தொகுப்பை முன்வைத்து-கீற்று

சல்மாவின் பச்சை தேவதை குறித்து-டிசே தமிழன்

அடிக்குறிப்புகள்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.