பள்ளிகொண்டபுரம்
பள்ளிகொண்டபுரம் (1971 ) நீல பத்மநாபன் எழுதிய நாவல். நனவோடை உத்தியில் அமைந்த இந்நாவல் ஆண்பெண் உறவின் ஊடாட்டத்தையும் அடுத்த தலைமுறையின் பார்வை மாறுபடுவதையும் ஒரு நகரத்தின் பின்னணியில் சித்தரிக்கிறது.
எழுத்து, பிரசுரம்
பள்ளிகொண்டபுரம் 1971 ல் நீலபத்மநாபனால் எழுதப்பட்டது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி என்னும் பதிப்பாளரின் வாசகர் வட்டம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
கதைச்சுருக்கம்
அனந்தன் நாயர் இந்நாவலின் கதைநாயகன். அவர் ஒரு நாள் முழுக்க பழைய நினைவுகள் கொந்தளிக்க திருவனந்தபுரம் நகரில் அலைவதுதான் கதையின் கட்டமைப்பு. அவர் மனைவி காத்யாயனி அழகி. அவர் அவளை மணந்துகொண்டபின் தாழ்வுணர்ச்சியால் அலைக்கழிகிறார். காத்யாயனி அனந்தன் நாயரின் மேலதிகாரியுடன் சென்றுவிடுகிறாள். தன்னந்தனியாக குழந்தைகளை வளர்க்கும் அனந்தன் நாயர் தன் மகன் அன்னையை ரகசியமாகச் சென்று சந்திப்பதை அறிந்து துயருறுகிறார். தன் தரப்பை பிள்ளைகளிடம் சொல்கிறார். அவர்களின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. காசநோயால் தன் நாட்கள் முடிந்துவருவதை உணரும் அனந்தன் நாயர் தன் வாழ்க்கையின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை எண்ணிக்கொள்கிறார். திருவனந்தபுரம் நகரின் ஒவ்வொரு பகுதியுடனும் இணைந்து அவர் வாழ்க்கையின் நினைவுகள் எழுவதே இந்நாவலின் அழகியல்
இலக்கியஇடம்
பள்ளிகொண்டபுரம் நனவோடை உத்தி சிறப்புறக் கையாளப்பட்ட நாவலாக கருதப்படுகிறது. சிட்டி-சிவபாதசுந்தரம் இந்நாவலின் இறுதியில் அனந்தன் நாயர் தன் பிள்ளைகளுடன் நிகழ்த்தும் உரையாடல் நனவோடை அழகியலின் ஒருமைக்கு மாறாக உள்ளது என கருதுகிறார்கள் (தமிழ்நாவல்) காமம், காதல் ஆகியவற்றின் உளவியலாட்டத்தை சித்தரித்த நாவல் என பள்ளிகொண்டபுரம் கருதப்படுகிறது
மொழியாக்கம்
- Where the Lord Sleeps- Tr. M Dakshinamurthy.