முச்சங்கங்கள்

From Tamil Wiki
Revision as of 14:45, 25 June 2022 by ASN (talk | contribs) (para created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை

முற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைக் கூட்டித் தமிழ்ச்சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்தனர். அவை முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படுகின்றன.

சங்கம் – சொல் விளக்கம்

சங்கம் என்னும் சொல் வடமொழிச் சொல்லின் வழி வந்ததாகும். கூடல், மன்றம் ஆகியவை சங்கத்தைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்களாகும். தமிழ்ச்சங்கம் வளர்ந்த இடம் மதுரை. மதுரைக்குக் கூடல் என்ற பெயரும் உண்டு. புறநானூறு இதனை ‘தமிழ் கெழு கூடல்’ (புறம் பா:58) என்று குறிப்பிடுகின்றது.

ஆனால், சங்க இலக்கியங்களில் ‘சங்கம்’ என்ற சொல் காணப்படவில்லை. ‘இறையனார் களவியல் உரை’ தான் தமிழ்ச்சங்கத்தைப் பற்றியும் தலை, இடை, கடைச் சங்கங்களின் வரலாற்றைப் பற்றியும் கூறுகிறது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் சங்கம் குறித்துக் கூறியுள்ளார்.

முதற்சங்கம்

குமரி ஆற்றங்கரையில் இருந்த தென்மதுரையில் முதற்சங்கம் அமைந்திருந்தது. அச்சங்கத்தில் 4449 புலவர்கள் இருந்தனர். 4440 ஆண்டுகள் நடைபெற்ற இச்சங்கத்தில் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்ற நூல்கள் இயற்றப்பட்டன. மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழ் வளர்த்தனர். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். அகத்தியர், குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர் உள்ளிட்ட புலவர்கள் இச்சங்கம் மூலம் தமிழாய்ந்தனர். அகத்தியனார் எழுதிய அகத்தியம் இச்சங்கத்தின் முதன்மை இலக்கண நூலாக இருந்தது.

கடல்கோளால் இச்சங்கம் அழிந்தது.

இடைச்சங்கம்

மதுரை கடலால் அழிந்ததும் கபாடபுரம் பாண்டி நாட்டுக்குத் தலைநகரமாயிற்று. இடைச்சங்கம் அங்கு அமைந்தது. இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இச்சங்கத்தில் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுணுக்கம், தொல்காப்பியம் போன்ற நூல்கள் அரங்கேறின. சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்றவர்கள் இருந்தனர். வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை இச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்தனர். அகத்தியமும் தொல்காப்பியமும் இச்சங்கத்தின் முதன்மை இலக்கண நூலாக இருந்தது.

கடைச்சங்கம்

கடைச்சங்கம் உத்தர மதுரையில் கூடியது. அதுவே இப்போதைய மதுரை எனக் கருதப்படுகிறது. இச்சங்கத்தை பாண்டிய மன்னன் முடத்திருமாறன் அமைத்தான். மன்னன் உக்கிரப்பெருவழுதி காலம் வரை சுமார் 1850 ஆண்டு காலம் நடைபெற்ற இச்சங்கத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் உருவாகின. நக்கீரன், நல்லந்துவனார், கபிலர், பரணர், திருவள்ளுவர், இடைக்காடர் போன்ற புலவர்கள் இச்சங்கத்தில் தமிழாய்ந்தனர். அகத்தியமும் தொல்காப்பியமும் இச்சங்கத்தின் முதன்மை இலக்கண நூலாக இருந்தது.

கடைச்சங்கம் பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. பாண்டிய நாட்டில் மிகக் கொடிய பஞ்சம் நேர்ந்ததாகவும், பன்னிரெண்டாண்டுகள் அது நீடித்திருந்து மக்களை வாட்டியதாகவும், பாண்டிய வேந்தன் சங்கப் புலவர்களைப் பாதுகாக்க இயலாதவனாய் வெளியே பல இடங்களுக்கும் சென்று வாழும்படி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டான் என்றும், அஃதுடன் தமிழ்ச்சங்கம் இறுதியான முடிவை யெய்தியது எனவும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன என்று டாக்டர் கே.கே.பிள்ளை தெரிவிக்கிறார்.

திருவிளையாடற் புராணம் - உரை நூல்

திருவிளையாடற் புராணத்தில் சங்கம் பற்றிய செய்திகள்

சங்கங்களைப் பற்றிய குறிப்பு, இறையனார் களவியல் உரையில் மட்டுமல்லாது, பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணத்திலும் காணப்படுகிறது. சங்கப்பலகை கொடுத்த படலத்தில் இடம் பெற்றுள்ள கீழ்காணும் வரிகள் மூலம் சங்கத்தில் சங்கப் புலவர்கள் இருந்ததையும், சிவபெருமான் அவர்களுக்குத் தலைவனாக இருந்து வழிநடத்தியதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.


முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம்பத் தொன்றில்

திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச்

புகழ் தரு நாற்பத்து எட்டு நாற்பத்து எண் புலவர் ஆகி

அகழ் தரு கடல்சூழ் ஞாலத்து அவதரித்து இடுவாக.


அத் தகு வருணம் எல்லாம் ஏறி நின்று அவற்றின்

மெய்த்தகு தன்மை எய்தி வேறு வேறு இயக்கம் தோன்ற

உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகும் நாதர்

முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் அம் முறையான் மன்னோ.


தாம் ஒரு புலவர் ஆகித் திரு உருத் தரித்துச் சங்க

மாமணிப் பீடத்து ஏரி வைகியே நாற்பத்து ஒன்பது

ஆம் அவர் ஆகி உண்ணி நின்று அவர் அவர்க்கு அறிவுதோன்றி

ஏமுறப் புலமை காப்பார் என்றனன் கமலப் புத்தேள்.

படல விளக்கச் சுருக்கம்

முன்னொரு காலத்தில் வங்கிய சேகர மன்னன் என்பவன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். அப்போது காசித் தலத்தில் பிரம்மதேவன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்தான். யாகத்தை முடித்து விட்டு அவன் கங்கையில் தன் மனைவியர் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி ஆகிய மூவருடன் நீராடச் சென்றான். அப்போது ஒலித்த கந்தருவப் பெண் ஒருத்தியின் இன்னிசையில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தாள் சரஸ்வதி தேவி. அதனால் அவள் நடையில் சற்றுப் பின் தங்கினாள். அதனால் பிரம்மதேவன் மற்ற இருவருடன் சேர்ந்து நீராடினான். தன்னை விட்டுவிட்டுக் கணவன் நீராடியதால் சரஸ்வதி தேவி பிரம்மனைக் கோபித்தாள். அதனால் சினமுற்ற பிரம்ம தேவன், ‘தவறு உன் மீதுதான்’ என்று கூறி, சரஸ்வதியை மானிடப் பிறவி எடுக்குமாறு சபித்தான். சரஸ்வதி தேவி தன்னுடைய பிழையைப் பொறுத்து தனக்குச் சாப விமோசனம் அளிக்கும்படித் தன் கணவனாகிய பிரம்ம தேவனிடம் மன்றாடினாள்.

பிரம்ம தேவனும் மனமிரங்கி விமோசன வழியை அவளுக்குத் தெரிவித்தான். சரஸ்வதி தேவியின் உடல் ஐம்பத்தொரு எழுத்தால் ஆனது. அவற்றுள் ‘ஆ’ முதல் ‘ஹக’ வரையிலான எழுத்துக்கள் உலகில் 48 புலவர்களாகப் பிறப்பார்கள். அவ்வெழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் தலைமை எழுத்தான ‘அகரம்’ ஆகிய சிவபெருமான், நாற்பத்தொன்பதாம் புலவராகத் தோன்றி,  அந்தப் புலவர்களுக்குப் புலமையை வளர்த்து முத்தமிழையும் காப்பான்” என்று சொல்லி வழி நடத்தினான்.

சங்கம் பற்றியும், சங்கப் புலவர்கள் பற்றியும், நூல்கள் அரங்கேற்றம் பற்றியும் திருவிளையாடற் புராணத்தில் சங்கப்பலகை கொடுத்த படலம் தொடங்கி, தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் வரை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

உசாத்துணை