being created

மா. இராசமாணிக்கனார்

From Tamil Wiki
மா. இராசமாணிக்கனார் நன்றி விக்கிபீடியா


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


மா. இராசமாணிக்கனார் (12-3-1907 - 26-5-1967). சுதந்திர இந்தியா உருவாகிவந்த காலக்கட்ட தமிழ் வரலாற்று ஆய்வாளர்களில் கவனிக்கத்தக்கவர். ஆய்வுகளில் கல்வெட்டும், செப்பேடுகள் மட்டுமே சான்றாக கருதி ஆய்வு செய்துகொண்டு இருந்த ஆய்வாளர்களுள், இவர் இலக்கிய தரவுகளைக் கொண்டும்  ஆராய்ச்சி செய்யலாம் என்று நிறுவியவர்களுள் ஒருவர். அதே போல் சைவ சமயத்திலும், தமிழ்  இலக்கியத்திலும்  ஈடுபட்டு குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார்.

தனிவாழ்க்கை

மா. இராசமாணிக்கனார் 12-03-1907 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை மாணிக்கம் , அன்னை தாயாரம்மாள். இவர்களுக்கு பிறந்த எழு குழந்தைகளுள் மா. இராசமாணிக்கனாரும் அவரின் அண்ணன் இராமகிருஷ்ணன் இருவர் மட்டுமே எஞ்சியவர்கள். இவரின் தந்தை மாணிக்கம் நில அளவையாளராக இருந்து பின்னர் வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்றார். தந்தையின் அரசு பணிக்காரணமாக  ஆந்திரா மாநில சித்தூரிலும், கர்னூலிலும்  இருந்த போது   மா. இராசமாணிக்கனார் தெலுங்கு மொழியில் கல்வி பயின்றார். பின் 1916இல் நான்காம் வகுப்பு படிக்கும் போது தமிழகத்திற்கு திரும்பி நிலக்கோட்டையில் தமிழ் கல்வி கற்க ஆரம்பித்தார்.  1917இல்  திண்டுக்கலில் 5ஆம் வகுப்பு படிக்கும் போது தந்தையை இழந்தார். அதனால் சிறிது காலம் அவரின் படிப்பு தடைப்பட்டது.  1920ஆவது வருடம் அண்ணன் இராமகிருஷ்ணனுடன் இருந்தபோது நன்னிலத்தில் 5ஆம்  வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.  1921 முதல் 1927ஆம் ஆண்டு  பள்ளி இறுதிவகுப்பு  தேர்ச்சி பெறுவதுவரை தஞ்சாவூர் தூய பீட்டர்ஸ் பள்ளியில் பயின்றார். 1927 ஆம் ஆண்டு ஒரத்தநாடு போர்டு பள்ளியில் எழுத்தராக  பணியில் சேர்ந்தார்.

1930ஆம் ஆண்டு (9-9-1930அன்று) துரைசாமி, ஜெயலட்சுமியின் மகள் கண்ணம்மாளை மணந்தார். அவர்களுக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர்.

1928ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக சேர்ந்தார். 1936ஆம் ஆண்டு முத்தியால்பேட்டை உயர்னிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். 1947ஆண்டு முதல் 1953 ஆண்டு வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1953 தமிழ்த்துறை தலைவராக பணிசெய்தார். பின் 1959ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் துணைப்பேராசிரியராகப் பணியேற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மா.இராசமாணிக்கனார் அண்ணன் இராமகிருஷ்ணனுடன் நன்னிலத்தில் இருந்த போது மெளனசாமி மடத்தில் இருந்த துறவியிடம் சித்தர் பாடல்கள் மற்றும் அருட்பாட்கள் கற்றியிருக்கிறார். தஞ்சையிலிருந்த போது தஞ்சை தூய பீட்டர் பள்ளி தலைமையாசிரியரின் உதவியுடன் தஞ்சை பள்ளி பேராசிரியர்கள் கரந்தை அ.வேங்கடாசலம் பிள்ளை, கரந்தை தமிழ் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி நாட்டார், உ.வே.சாமிநாதையர், இரா. இராகவையங்கார் போன்ற தமிழறிஞர்களிடம் பாடம் கேட்டுள்ளார்.

1930ஆம் ஆண்டு தன் முதல் நூலான 'நாற்பெரும் வள்ளல்கள்' வெளியிட்டார். 'தமிழர் நல்வாழ்க்கைக் கழகத்தார்' வேண்டுகோளுக்கு இணங்க 'தமிழர் திருமண நூல்' இயற்றினார். 'மொஹெஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு போன்ற நூல்கள் அவருக்கு வரலாற்றாய்வாளர் என்ற இடத்தை அளித்தன. சைவ சமயம் சார்ந்து 'சைவ சமய வளர்ச்சி' ,'சேக்கிழார்' ,'பெரியபுராணம் ஆராய்ச்சி' ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 1966ஆம் ஆண்டு மலேசிய நாட்டு கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று 'சங்க காலத் தமிழர் சமுதாய வாழ்க்கையின் சில பகுதிகள்' என்னும் ஆய்வு கட்டுரை வழங்கினார். அதே ஆண்டு 'இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரை நடை வளர்ச்சி' என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக்கத்தில் 'கல்கி நினைவுச் சொற்பொழிவு' நிகழ்த்தினார். அவர் இறந்த பின் 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' என்னும் நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பெற்றது.

இலக்கிய பங்களிப்பு

ஐந்தாண்டுகள் ஆய்வு செய்து  ' 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி'' என்னும் நூலை விரிவாக எழுதினார். இந்நூல் வழியாக சங்க கால வாழ்வியலைப் பதிவு செய்ய முற்பட்டார். 'பத்துப்பாட்டின்' தகவல்களை கொண்டு கல்வெட்டுடன் இணைத்து ஆய்வு செய்திருக்கிறார். தமிழ் இலக்கிய வரலாறு, கம்பர் யார்? திருவள்ளுவரின் காலம் என்ன?, இலக்கிய அமுதம், இலக்கிய அறிமுகம், என்று இலக்கியம்  சார்ந்து அறிமுக ஆய்வுக்குரிய நூல்களை எழுதியுள்ளார். 'இருபதாம் நூற்றாண்டு உரைநடை வளர்ச்சி ' இவருடைய இன்னொரு குறிப்பிடத்தக்க நூலாகும்.

சைவ சமய பங்களிப்பு

சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைய நூல்களை எழுதியுள்ளார். சைவ சமய வளர்ச்சி , பெரிய புராணம் , சேக்கிழார், ஆகிய நூல்களை சைவ சமயம் சார்ந்து எழுதியுள்ளார்.

வரலாற்றாய்வு பங்களிப்பு

வரலாற்றாய்வில் இவருடைய பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, மற்றும் தமிழில் சிந்துவெளி நாகரீகம் பற்றி எழுதிய மொஹஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரீகம் ஆகிய நூல்கள் முதன்மை கட்ட ஆய்வுக்கு உதவியாக இருப்பவை. ஆராய்ச்சி கட்டுரைகள் என்னும் நூலில் கல்வெட்டுகள், அரசர்களின் மெய்கீர்த்திகள் அடங்கிய தகவல்களை ஆண்டு குறிப்போடு பதிப்பித்திருக்கிறார்.

இலக்கிய இடம்

மா. இராசமாணிக்கனாரின் முக்கியமான பங்களிப்பு பல்லவ வரலாறு, சோழர் வரலாறு நூல்களை தமிழில் எழுதியள்ளார். அதன் அடிப்படையில் இந்த வரலாற்று காலகட்டத்தின்  முதல் கட்ட வரைவை  உண்டாக்கி, ஆரம்பகட்ட ஆய்வுக்கு பெரிதும் வழிசெய்துள்ளார். வரலாற்று நூலுக்கான கடினமான மொழியை எடுத்துக்கொள்ளாமல் பொது வாசகர்களும் வாசிக்கும் படி எளிய மொழிநடையில் வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். சிந்து சமவெளி நாகரீகம் பற்றியும் தமிழில் முதன்முதலில் எழுதியுள்ளார்.

சைவ சமய ஆராய்ச்சியில் இவர் 'பெரிய புராண ஆராய்ச்சி ' , சேக்கிழார் ஆகிய நூல்களை எழுதினார். இந்த நூல்களில் சேக்கிழாரின் காலகட்டம் எது? எந்த மன்னன் ஆட்சி காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார்?  என்று கல்வெட்டு, இலக்கிய சான்றுகளுடன் நிறுவுகிறார். இவர் ஆய்வு செய்த காலத்தில் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை கல்வெட்டுகளின் படிவங்களை சில தொகுதிகள் மட்டுமே வெளியிட்டு இருந்தது. அவைகளை மட்டும் கொண்டு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளாமல் கோயில்களுக்கு சென்று நேரடியாக கல்வெட்டுகள் படித்து ஆய்வை செய்துள்ளார். அதற்காக அவர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்த நாட்களையும் குறிப்பிட்டுள்ளர். மா. இராசமாணிக்கனார் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கல்லூரி பாடத்திற்கு, மாணவர்களுக்கான தமிழ் பாட நூல்களை உருவாக்கியவர்களில் ஒருவர்.

மறைவு

மா.இராசமாணிக்கனார் 1967ஆம் ஆண்டு (26-5-1967)  சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்தபோது மாரடைப்பினால் மரணமடைந்தார்.

நூல்கள்

  • நாற்பெரும் வள்ளல்கள் 1930
  • ஹர்ஷவர்த்தனன் 1930
  • முடியுடை வேந்தர் 1931
  • நவீன இந்திய மணிகள் 1934
  • தமிழ்நாட்டு புலவர்கள் 1934
  • முசோலினி 1934
  • ஏப்ரஹாம் லிங்கன் 1934
  • அறிவுச்சுடர் 1938
  • நாற்பெரும் புலவர்கள் 1938
  • தமிழர் திருமண நூல் 1939
  • தமிழர் திருமண இன்பம் 1939
  • மணிமேகலை 1940
  • மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரீகம் 1941
  • பாண்டியன் தமிழ் கட்டுரை (முதல் தொகுதி) 1941
  • பல்லவர் வரலாறு 1944
  • மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944
  • சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945
  • இரண்டாம் குலோத்துங்கன் 1945
  • கட்டுரை மாலை 1945
  • செய்யுள் - உரைநடை பயிற்சி நூல் 1945
  • முத்தமிழ் வேந்தர் 1946
  • காவியம் செய்த கவியரசர் 1946
  • விசுவநாத நாயக்கர் 1946
  • சிவாஜி 1946
  • சிலப்பதிகாரக் காட்சிகள் 1946
  • இராஜேந்திர சோழன் 1946
  • பல்லவப் பேரரசர் 1946
  • கட்டுரைக் கோவை 1946
  • சோழர் வரலாறு 1947
  • ஆராய்ச்சி கட்டுரைகள் 1947
  • பண்டித ஜவஹர்லால் நெஹ்ரு 1947
  • வீரத் தமிழர் 1947
  • இருபதாம் நூற்றாண்டுப் புலவர் பெருமக்கள் 1947
  • இந்திய அறிஞர் 1947
  • தமிழ்நாட்டு வடஎல்லை 1948
  • பெரியபுராண ஆராய்ச்சி 1948
  • கதை மலர் மாலை (மலர் ஒன்று) 1948
  • இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948
  • சிறுகதைக் களஞ்சியம் (பகுதி ஒன்று) 1949
  • சிறுகதைக் களஞ்சியம் (பகுதி இரண்டு) 1949
  • சிறுகதைக் களஞ்சியம் (பகுதி மூன்று) 1949
  • மேனாட்டுத் தமிழறிஞர் 1950
  • தென்னாட்டுப் பெருமக்கள் 1950
  • இந்தியப் பெரியார் இருவர் 1950
  • தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950
  • நாற்பெரும் புலவர் 1950
  • மறைமலையடிகள் 1951
  • அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951
  • சங்கநூற் காட்சிகள் 1952
  • இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953
  • விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953
  • பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953
  • சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954
  • திருவள்ளுவர் காலம் யாது? 1954
  • சைவ சமயம் 1955
  • கம்பர் யார்?
  • வையை 1955
  • தமிழர் திருமணத்தில் தாலி 1955
  • பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955
  • இலக்கிய அறிமுகம் 1955
  • அருவிகள் 1955
  • தமிழ் மொழிச் செல்வம் 1956
  • பூம்புகார் நகரம் 1956
  • தமிழ் இனம் 1956
  • தமிழர் வாழ்வு 1956
  • வழிபாடு 1957
  • இல்வாழ்க்கை 1957
  • தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957
  • வழியும் வகையும்
  • ஆற்றங்கரை நாகரீகம் 1957
  • தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957
  • என்றுமுள தென்றமிழ் 1957
  • சைவ சமய வளர்ச்சி 1958
  • பொருநை 1958
  • அருள்நெறி 1958
  • தமிழரசி 1958
  • இலக்கிய அமுதம் 1958
  • எல்லோரும் வாழவேண்டும் 1958
  • தமிழகக் கலைகள் 1959
  • தமிழக ஆட்சி 1959
  • தமிழக வரலாறு 1959
  • தமிழர் நாகரீகமும் பண்பாடும் 1959
  • தென்பெண்ணை 1959
  • புதிய தமிழகம் 1959
  • நாட்டுக்கு நல்லவை 1959
  • தமிழ் அமுதம் 1959
  • பேரறிஞர் இருவர் 1959
  • துருக்கியின் தந்தை 1959
  • தமிழகக் கதைகள் 1959
  • குழந்தைப் பாடல்கள் 1960
  • கட்டுரைச் செல்வம் 1960
  • தமிழகப் புலவர் 1960
  • தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963
  • தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964
  • தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965
  • சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969
  • பத்துபாட்டு ஆராய்ச்சி 1970
  • கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977
  • இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ர்ச்சி 1978
  • இலக்கிய ஓவியங்கள் 1979

பின்வரும் நூல்கள் பதிப்பிக்கப்பட்ட  ஆண்டு தெரியவில்லை.

  • சிறுவர் சிற்றிலக்கணம்
  • பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும்
  • பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி - 2)

மா.இராசமாணிக்கனார் எழுதிய நூல்களில் கீழ்க்காண்பவை, தற்போது கிடைப்பதில்லை

  • பதிற்றுப்பத்துக் காட்சிகள்
  • செந்தமிழ்ச் செல்வம்
  • தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்
  • பள்ளித் தமிழ் இலக்கணம்
  • செந்தமிழ் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்)
  • செந்தமிழ் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)

ஆங்கில நூல்

  • The Development of Saivism in South India 1964

தமிழக அரசு மா.இராசமாணிக்கனாரின்  நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

பெற்றப் பட்டங்கள்

  • 1935ஆம் ஆண்டு வித்துவான் பட்டம்.
  • 1939ஆம் ஆண்டு பி.ஓ.எஸ் பட்டம்.
  • 1944 ஆம் ஆண்டு  எல்.டி. பட்டம்.
  • 1945ஆம் ஆண்டு 'பெரியபுராண ஆராய்ச்சி' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஓ.எல் பட்டம்    பெற்றார்.
  • 1951ஆம் ஆண்டு 'சைவ சமய வளர்ச்சி ' என்னும் தலைப்பில் டாக்டர் பட்டத்திற்கு ஆய்வு செய்து  பட்டம் பெற்றார்.

சைவ மடங்கள் வழங்கிய பட்டங்கள்

  • சமயத்துறை பணிகளுக்காக திருவாடுதுறை ஆதீனம் 'சைவ வரலாற்று ஆராய்ச்சி பேரறிஞர்' பட்டம் - 1951
  • மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தார் 'ஆராய்ச்சி கலைஞர்' பட்டம் -1955
  • சைவ சித்தாந்த சமாஜம் 'சைவநெறி காவலர் பட்டம்-1959
  • தருமை ஆதீனம் ' சைவ இலக்கியப் பேரறிஞர்' பட்டமளித்து பொற்பதக்கமும் பொன்னாடையும் வழங்கியது -1963

உசாத்துணை

சாகித்ய அகாடமி வெளியிட்ட இந்திய இலக்கிய சிற்பிகள் 'மா. இராசமாணிக்கனார்' நூல்.

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3luhy.TVA_BOK_0006393/page/n133/mode/2up

பாவை பப்ளிகேஷனஸ் வெளியிட்ட மா. இராசமாணிக்கனாரின் 'பல்லவர் வரலாறு' என்ற நூலில் இடம் பெற்ற தகவல்கள்.

மறக்க முடியுமா? பேராசிரியர் மா. இராசமாணிக்கனார்.

https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2017/32656-2017-03-14-04-16-59

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-49.htm