standardised

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

From Tamil Wiki
Revision as of 20:29, 19 June 2022 by Manobharathi (talk | contribs)

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

திருவில்லிபுத்தூருக்கு அருகேயுள்ள திருத்தண்காலில் வெண்ணாகனார் பிறந்தார். பொற்கொல்லர் தொழில் செய்து வாழ்ந்தார். சில ஏடுகளில் தங்கால் முடக்கொல்லனார், தங்கால் பூட்கொல்லனார், பூண்கொல்லன் என்றும் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

வெண்ணாகனார் பாடிய பாடல் புறநானூற்றில் 326-வது பாடலாக உள்ளது. வாகைத்திணைப் பாடலாக இது அமைந்துள்ளது. மறக்குடி மனக்கிழத்தி மடுக்கரையில் பிடித்த உடும்பை தயிரோடு சேர்த்து சமைத்த உணவை பாணர்களுக்கு அளிக்கும் செய்தியும், மறக்குடி ஆடவர் போர்க்களத்தில் போரிட்டு யானைகளை அடித்துக் கொன்று அது தலையில் அணிந்திருக்கும் பொன்னாலான பட்டத்தை பாணர்களுக்கு பரிசு அளிக்கும் செய்தியும் இப்பாடலின் வழி அறியமுடிகிறது.

செவிலித்தாய் தலைவியின் காதல் நோய் கண்டு வருந்திய போது அவள் காதலனை மணம் முடித்துக் கொடுப்பதே சிறந்த அறம் என செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்ற குறுஞ்சித்திணைப் பாடலாக அகநானூற்றில் 48-வது பாடல் பாடியுள்ளார். குறுந்தொகை 217-வது பாடல் குறிஞ்சித்திணைப்பாடலாக காமத்தை சிறப்பாக எடுத்துக்கூறும் தோழிகூற்றாக அமைந்துள்ளது.

பாடல் நடை

  • புறநானூறு 326

மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.

  • அகநானூறு 48

'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு

  • குறுந்தொகை 217

தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.

உசாத்துணை

  • புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.