அறத்தொடு நிற்றல்
அறத்தொடு நிற்றல்: சங்கப்பாடல்களில் பேசப்படும் துறைகளில் ஒன்று. தலைவியுடன் தலைவன் களவுறவுக்கு முற்படுகையில் தலைவியோ தலைவியின் தோழியோ,செவிலியன்னையோ, அன்னையோ அவர்களுக்கு முறையான கற்பொழுக்கத்தை எடுத்துரைத்து மணம்புரிவதற்கு அறிவுரை சொல்லுதல் அறத்தோடு நிற்றல். பலதருணங்களில் கவிதையின் கூறுமுறையில் அந்த அறிவுறுத்தல் உள்ளுறையென மறைந்திருக்கும். களவுறவை குறிப்பாக பிறருக்கு உணர்த்திக்காட்டுதலும் அதன் நோக்கம் மணவுறவுக்கு இட்டுச்செல்லுதல் என்பதனால் அறத்தொடு நிற்றல் என்னும் துறையின்கீழ் அமையும்.
அறத்தொடு நிற்பவர்கள்
தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் அறத்தொடு நிற்பவர்கள்.
அறத்தொடு நிற்கும் முறைகள்
தலைவி
தலைவியின் களவுப் புணர்ச்சியைச் செவிலி கண்டாலோ, தன் இல்லத்தில் காவல் மிகுந்திருக்கும்போதோ தலைவி அறத்தொடு நிற்பாள். அவளே தலைவனிடம் சொல்வதுபோல் பாடல் அமையும். இது ஏழு வகைகளில் அமையலாம் என நம்பியகப்பொருள் கூறுகிறது.
- தோழி தன் துயரைக் காணும்போது தன் துயருக்கான காரணத்தைக் கூறுதல்.
- தலைவன் தெய்வத்தைச் சான்றாக வைத்துத் தன்னை மணந்து கொள்ளும் உறுதி கூறியதை வெளிப்படுத்துதல்.
- உறுதிமொழி கூறிய பிறகு தலைவன் தன்னை விட்டு நீங்கியதை, தோழியிடம் கூறுதல்.
- தோழி, தலைவனின் பண்புகளைப் பழித்துக் கூறுதல் ; அது கேட்ட தலைவி தலைவனது பண்புகளைப் புகழ்ந்து கூறுதல்.
- தெய்வத்தை வேண்டிக் கொள்ள இருவரும் செல்வோம் என்று தலைவி கூறுதல்.
- தன் தாய் தன்னை வீட்டுக்காவலில் வைத்தாள் என்று தலைவிதோழியிடம் கூறுதல்.
- செவிலித் தாய் இரவு நேரத்தில் தலைவன் வந்ததைப் பார்த்து விட்டாள் என்று தோழியிடம் கூறுதல்.
தோழி தலைவியின் நலன் கருதி அறத்தொடு நிற்பாள். அவள் நேரடியாக தலைவன் அல்லது தலைவியிடம் சொல்வது முன்னிலை மொழி எனப்படும். தலைவனிடமோ தலைவியிடமோ சொல்லவேண்டியதை வேறு எவரிடமோ சொல்வதுபோல உணர்த்துவது முன்னிலைப் புறமொழி எனப்படும். -
அறத்தொடு நிற்றலுக்கு காரணங்கள்
- ஆற்று ஊறு அஞ்சுதல் (களவுறவுக்கு வழியில் விளையும் துன்பங்களை அஞ்சுதல்)
- அவன் வரைவு மறுத்தல் (தலைவன் தலைவியை சந்திப்பதையும் மணப்பதையும் உறவினர் மறுத்தல்)
- வேற்று வரைவு நேர்தல் (தலைவிக்கு இன்னொரு மணம் பேசப்படுதல்)
- காப்புக் கைம்மிகுதல் (தலைவிக்கு வீட்டில் காவல் மிகுந்துவிடுதல்)