ராஜேஸ்வரி அம்மையார்
- ராஜேஸ்வரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜேஸ்வரி (பெயர் பட்டியல்)
ராஜேஸ்வரி அம்மையார் (ஈ. த. இராசேசுவரி அம்மையார், இராசேசுவரி அம்மையார், இ. டி.) (அக்டோபர் 18, 1906 - மார்ச் 1, 1955) தமிழ் அறிவியல் எழுத்தாளர்களில் முன்னோடி. இவர் சைவ சித்தாந்த சொற்பொழிவாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ராஜேஸ்வரி அக்டோபர் 18, 1906 அன்று ஈ. ந. தணிகாசல முதலியாரின் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்று, ஆங்கிலத்தில் எம். ஏ பட்டமும் பின் சென்னை லேடி வில்லிங்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பி.டி பட்டமும் பெற்றார்.
தனிவாழ்க்கை
இவர் 1925-ம் ஆண்டு சென்னை இராணி மேரிக் கல்லூரியில் அறிவியல் துணைப்பேராசிரியராக பணியில் அமர்ந்தார். பின் 1946-ம் ஆண்டு சென்னை லேடி வில்லிங்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் துணைப்பேராசிரியராகவும், 1953-ம் ஆண்டு இராணி மேரிக் கல்லூரியின் பௌதிகத் துறையின் துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார்.
பங்களிப்பு
நூல் வெளியீடு
ராஜேஸ்வரி சூரியன் என்ற அறிவியல் நூலை எழுதி வெளியிட்டார். இது தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டைப்பெற்றது. இந்நூல் பி. ஏ பட்டப்படிப்பிற்கு பாடமாக பல தென்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தது. இவரின் வானக்குமிழி[1] என்ற நூலும் இதுபோல் பாடமாக இருந்தது. குழவியுள்ளம் என்ற நூலும் குறிப்பிடத்தக்க வாசக கவனத்தைப்பெற்றது. இது தமிழக அரசின் பரிசையும் வென்றது.
இவர் எழுதி தருமபுரம் ஆதினத்தின் வெளியீடாக வந்த ஐன்ஸ்டீன் கண்ட காட்சி மற்றும் 1953 -ல் பரமாணுப் புராணம்[2] என்ற நூலும் பெரும் வாசக கவனத்தைப்பெற்றது. இரண்டாம் நூல் அணுவின் ஆற்றலைப்பற்றியும், அதை அறிந்தவர்களின் வரலாற்றையும் விளக்குகின்றது.
சொற்பொழிவாளர்
இவர் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் தன் அறிவியல் சொற்பொழிவுகளை ஆற்றி பெரும் புகழ் பெற்றார். சென்னையின் சைவ சித்தாந்த சபை உட்பட பல புகழ் பெற்ற சபைகளிலும், கழகங்களிலும் சொற்பொழிவாற்றியுள்ளார்.
கல்வித்தொண்டு
சிந்தாதிரிப் பேட்டை நடுநிலைப் பள்ளியின் துணைத்தலைவராகவும், உயர் நிலைப்பள்ளியில் பல்வேறு பதவிகளையும் வகித்தார்.
மறைவு
இவர் மார்ச், 1 1955 அன்று தமது 48-வது வயதில் மறைந்தார்.
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Dec-2022, 16:35:12 IST