காந்திமதி (நாவல்)
- காந்திமதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காந்திமதி (பெயர் பட்டியல்)
To read the article in English: Gandhimathi (novel).
காந்திமதி (1926) தமிழில் காந்தியக் கொள்கைகளை நேரடியாகவே பிரச்சாரம் செய்து எழுதப்பட்ட தொடக்க கால நாவல். மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார் எழுதியது.
எழுத்து, பிரசுரம்
செட்டிநாட்டில் காரைக்குடி அருகே மேலைச்சிவபுரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் பனையப்பச் செட்டியார். காங்கிரஸ் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். காங்கிரஸ் தீவிரவாதக் குழுவை சேர்ந்தவர். மணிவாசகன், சண்முகநாதன், அமிர்தம் என்ற மூன்று துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். அவற்றில் துப்பறியும் ரங்கநாதன் என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார்.
கதைச்சுருக்கம்
காந்திமதி ஒரு காதல் கதை. கதாபாத்திரங்கள் இந்திய விடுதலை சார்ந்த சொற்பொழிவுகளை நடத்துவதே இதன் கட்டமைப்பு. காந்திமதியின் நாயகன் கல்யாணசுந்தரம். அவன் ஆற்றும் சொற்பொழிவுடன் நாவல் தொடங்குகிறது. "இயற்கையோடியைந்த இன்ப வாழ்வு வாழ்ந்த நம் நாட்டார் இதுகாலை அடிமை வாழ்வு வாழ்கின்றனர். அடிமைக்கு இன்பம் ஏது? சுதந்திர வாழ்க்கையிலன்றோ இன்பம் பொங்கித்ததும்பும்?’ என்று கல்யாணசுந்தரம் பேசுகிறான். வெவ்வேறு வகையான உரையாடல்களாலானது இந்நாவல்.
இலக்கிய இடம்
இந்நாவல் எழுதப்பட்ட காலம் காந்தி காங்கிரஸுக்குள் நுழைந்து ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த ஆண்டு. தேர்தலில் நின்று சட்டசபைக்குச் செல்வதா வேண்டாமா என்னும் விவாதம் நடந்து மோதிலால் நேரு தலைமையில் காங்கிரஸ் உடைந்தது. அது சார்ந்த விவாதங்கள் இந்நாவலில் உள்ளன. இது அக்காலகட்டத்தின் அரசியல் சிந்தனைகள் அன்றாட வாழ்க்கையில் எப்படி நிகழ்ந்தன என்பதற்கான பதிவு எனும் வகையில் ஆராயத் தக்க நாவல். "இதுகாலை சட்டசபை மோகம் நாளுக்கு நாள் அதிகப்படுகிறது. கதர் இயக்கம் குன்றியது. எங்கும் ஒருவித அயர்வு காணப்படுகிறது. சாதிச்சண்டைகளும் பிறவும் மலிந்து காணப்படுகின்றன. சட்டசபைக் கட்சியினர் சட்டசபை புகுந்தனர். அங்கே சென்று ஏதேதோ செய்து அரசாங்கத்தாரை மடக்கி தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் எண்ணங்கள் எல்லாம் வீணாயின" என்று கல்யாணசுந்தரம் சொல்கிறான்.
1922 முதல் 2006 வரை வெளியான காந்தியம் பேசும் 32 நாவல்களை ஆய்வுசெய்து இரா. விச்சலன் எழுதிய 'தமிழில் காந்திய நாவல்கள்’ என்ற நூலில் "தேசியத்தையும் விடுதலை உணர்வையும் இணைத்துப் பார்க்கும் நாவல் (காந்திமதி) காந்தியத்தோடு தமிழின் அகப்புறச் சிந்தனைகளான காதலையும் வீரத்தையும் இணைத்துப் பேசுகிறது" என்று இந்நாவலை மதிப்பிடுகிறார்*
உசாத்துணை
தமிழ் நாவல் - சிட்டி சிவபாதசுந்தரம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:58 IST