64 சிவவடிவங்கள்: 56-விசாபகரண மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று விசாபகரண மூர்த்தி
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஐம்பத்தி ஆறாவது மூர்த்தம் விசாபகரண மூர்த்தி. ஆலகால விஷத்தில் இருந்து உலகத்தைக் காக்கச் சிவபெருமான் அந்த விஷத்தை உண்டதால் விசாபகரண மூர்த்தி என்ற பெயர் பெற்றார்.
நீலகண்டரான இவர் மூன்று கண்களுடன் ஜடாமகுடம் தரித்திருப்பார். கரங்களில் மானும் மழுவும் இருக்கும். ஒரு கரத்தில் ஆலகால விஷமுள்ள கிண்ணமும் மறுகரத்தில் அருள் குறியீடும் இருக்கும். உடலெங்கும் அழகான அணிகலன்களை அணிந்திருப்பார். நீலகண்டரின் இடப்புறத்தில் உமையம்மை அவரின் கழுத்தில் நஞ்சு இறங்காதவாறு பிடித்திருப்பார்.
நீலகண்டரின் இன்னொரு தோற்றம் பற்றியும் சில நூல்கள் கூறுகின்றன. இத்திருவடிவத்தில் இடப வாகனத்தில் சிவபெருமான் மிக்க கோபம் கொண்டவராகவும், கோரைப்பற்கள் உடையவராகவும், அழகிய ஆபரணங்களை அணிந்தவராகவும் காணப்படுகிறார். வலது கையில் சூலமும் ஆலகால விஷமும் இருக்கும். இடது புறத்தில் உள்ள கையில் கபாலம் இருக்கும். அவரின் அருகில் பார்வதி தேவி வீற்றிருப்பார்.
தொன்மம்
தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்தவர்கள். அவர்களுக்குத் தங்களது வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தைப் பெற வேண்டுமானால் பாற்கடலைக் கடைய வேண்டும். அதனைத் தனியாகக் கடைவதற்கு அவர்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் ஆயிரம் தலைப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு, ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திரமலையின் அடியை முதுகாலும், கைகளாலும் தாங்கினார்.
ஆனால், சிவபெருமானின் அனுமதியின்றியும் அவரை வணங்காமலும் பாற்கடலைக் கடைந்தனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வாசுகி வலிதாளாமல் அதன் ஆயிரம் தலைகளின் வழியே கடுமையான ஆலகால விஷத்தைக் கக்கியது. விஷம் அனைத்து இடங்களிலும் பரவியது. தேவர்கள் சிவனிடம் வேண்டினர். பார்வதி தேவியும் அவர்களைக் காக்குமாறு சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார்.
ஆலகால விஷத்தைச் சேகரித்து வருமாறு ஆலாலசுந்தரரை அனுப்பினார் சிவபெருமான். சிவபெருமானில் இருந்து தோன்றிய ஆலாலசுந்தரரும் அந்த விஷத்தைக் கொணர்ந்தார். சிவபெருமான் அந்த விஷத்தை வாங்கி உண்டார். அது தொண்டைக் குழிக்குள் சென்றது. இதனைக் கண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று அஞ்சி அவரது கழுத்திற்குக் கீழே விஷம் இறங்காதவாறு கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் கழுத்தில் நின்ற விஷமானது சிவபெருமானின் கழுத்தை நீல நிறமாக்கியது.
உலகத்தை காக்க ஆலகால விஷத்தை அருந்தி நீலநிறக் கழுத்தைப் பெற்றதால் சிவபெருமான், நீலகண்டர், சீசகண்டர் என்ற பெயர்களைப் பெற்றார். அதற்குப் பின்னர் சிவபெருமானின் அனுமதியுடன் பாற்கடலைக் கடைய அதிலிருந்து அமிர்தமும், இன்னபிற பொருள்களும் வந்தன. திருமால் மோகினியாகி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்தார். அதன்பின் தேவர்கள் அனைவரும் அவரவரர் பதவியில் சென்று அமர்ந்தனர்.
சிவபெருமான், அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டு அனைவரையும் காத்ததால் அவருக்கு விசாபகரண மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
வழிபாடு
திருநீலகண்டரது சிற்பங்களையும் ஓவியங்களையும் தமிழ்நாட்டில் உள்ள பல சிவாலயங்களில் காணலாம். சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் நீலகண்டரின் பஞ்சலோகத் திருமேனி உள்ளது. கழுகுமலை வெட்டியான் கோவில் விமானத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தூணிலும் நீலகண்டரின் திருவுருவம் உள்ளது.
சென்னை - ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப்பள்ளி ஆலயத்தில் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி பார்வதி தேவியின் மடியில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரைச் சுற்றி தேவர்கள் நிற்கின்றனர். இவருக்கு செவ்வரளி அர்ச்சனையும், முக்கூட்டு எண்ணெய் என்றழைக்கப்படும் நெய், தேங்காய், எள் எண்ணை தீபமும், நைவேத்தியமும், செவ்வாய் அன்று அளித்து வழிபட விஷ பயம் தீரும், நீண்ட ஆயுளும், குடும்பத்தில் அமைதியும் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:16:08 IST