சுரேஷ் மான்யா

From Tamil Wiki

சுரேஷ் மான்யா (பிறப்பு:1980) தமிழ் சிறுகதை ஆசிரியர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுரேஷ் மான்யா திருச்சி மாவட்டம் இலால்குடியில் ஏப்ரல் 14, 1980-ல் தங்கராஜ், ஜெனோவா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இலால்குடி  அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு பயின்றார். மதுரை மேலூர் அருள்மிகு கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் துறையில் பட்டயப் படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இளங்கலை சமூகவியலும் படித்தார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொல்லியல் சின்னங்களின் மீதான ஈடுபாட்டின் காரணமாய் 2013-ல் புதுக்கோட்டைக்கு குடிபெயர்ந்தார். தற்போது பொதுநூலகத் துறையின் இளநிலை உதவியாளராக புதுக்கோட்டை மாவட்ட மையநூலகத்தில் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சுரேஷ் மான்யா 2012-ல் தனது நண்பர் மா.செல்லத்துரையுடன் இணைந்து ‘உயிர்மொழி’ என்ற சிற்றிதழைத் தொடங்கி அதன் ஆசிரியராய் இருந்தார். சபரிநாதன், சா.தேவதாஸ், இசை, பெருமாள்முருகன் ஆகியோரின் படைப்புகள் அவ்விதழில் வெளியாகியுள்ளன. இரண்டு இதழ்கள் வெளிவந்தபின் நிதிச்சுமையின் காரணமாக தொடர்ந்து ‘உயிர்மொழி’ வெளியாகாமல் நின்று போனது.

இவரது முதல் சிறுகதை உயிர் எழுத்து இதழில் 2016ல் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கல்நாகம்’ 2018ல் யாவரும் பதிப்பாய் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, ஜெயமோகன், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, கந்தர்வன், வண்ணநிலவன், தி.ஜானகிராமன் ஆகியோரைத் தனது இலக்கிய ஆக்கங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருது

  • சௌமா இலக்கிய விருது (2019)

நூல்கள்

  • கல்நாகம் (2018) (சிறுகதைத் தொகுப்பு)

வெளி இனைப்புகள்