standardised

வித்தாலி பூர்ணிக்கா

From Tamil Wiki
Revision as of 22:54, 19 May 2022 by Manobharathi (talk | contribs)

வித்தாலி பூர்ணிக்கா (Vitaly Fournika, விதாலி ஃபூர்ணிக்கா) (1940-1980 களின் பிற்பகுதி) ரஷ்ய தமிழறிஞராக அறியப்படுகிறார். இவர் ரஷ்ய மக்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்களில் மூன்றாம் தலைமுறை அறிஞர்.

வாழ்க்கை ககுறிப்பு

பிறப்பு, கல்வி

இவர் 1940-ஆம் ஆண்டு ரஷ்யாவில் (தற்போதைய உக்ரேன் நாட்டில்) ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பின் லெனின்கிராட்டில் கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்தார்.

இவர் 1965-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள லெனின்கிராட் பல்கலைக்ககழகத்தில் செம்பியன் என்று அறியப்பட்ட சிம்யோன் நூதின் அவர்களிடம் தமிழ் கற்றார். பின்னர் இந்தியா சென்று சென்னைப்பல்கலைக்கழகத்தில் மு.வரதராசனிடம் தமிழ் பயின்றார்.

அதன் பின்னர் மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் (Moscow University's Institute of Oriental Languages) தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் ஜெயகாந்தனின் படைப்பிலக்கியம் ஆகிய தலைப்புகளில் ஆய்வு செய்து முனைவர்(கலாநிதி) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இவர் ரஷ்யாவில் இருந்த ராதுகா பதிப்பகத்தில் தமிழ் பிரிவின் பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார்.

இவர் காதல் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

இவர் ஜெயகாந்தனின் நண்பர். ஜெயகாந்தன் பூர்ணிக்காவின் நினைவாக நட்பில் பூத்த மலர் என்ற நூலையும் எழுதியுள்ளார்.  இவர் ஈழத்து – தமிழக எழுத்தாளர்களின் பல படைப்புகளை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்தவர். இவர் தமிழகப்பித்தன் என்ற புனைபெயரில் எழுதினார்.

இவர் 1965-ஆம் ஆண்டு ஒரு புத்தகக்கடையில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை தற்செயலாகப்பார்த்து, தமிழ்மேல் ஆர்வம் கொண்டு பின்னாளில் தமிழறிஞராக மாறினார். பின் சோவியத்தில் பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட வேளையில் அதில் இணைந்து பணியாற்றி, தங்கப்பதக்கம் விருது பெற்றார்.

இவர் காலத்தில் வாழ்ந்த பல தமிழ் எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருந்தார். இவர் உக்ரேனிய கவிஞரான தாராஸ் ஷெவ்சென்கோவின் மீது மிகுந்த பற்றுள்ளவாரக இருந்தார்.

பங்களிப்பு

இவர் தமிழிலக்கியம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி 60-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை ரஷ்ய மொழியில் எழுதி வெளியிட்டார்.

இவர் தமிழகத்தில் ஆய்வு செய்து ரஷ்ய மொழியில் தமிழகத்தைப்பற்றி ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். பின்னர் அந்த நூலை பிறப்பு முதல் இறப்புவரை என்று ந. முகம்மது செரிபு மொழிபெயர்த்து சென்னை நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியிட்டது. இந்த நூலில் பலரும் அறியாத ஸ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என்ற நாவலை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார். இந்த நூல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது.

இவர் ஜெயகாந்தனின் படைப்புகளை ருஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இவர் மொழி பெயர்த்த நூல்கள்

  • ஜெயகாந்தனின் சுந்தரகாண்டம் - உக்ரேனிய மொழி.
  • காவலூர்  ராசதுரையின்  ஒருவகை உறவு - ரஷ்ய மொழி.
  • ஆதவனின் என் பெயர் ராமசேஷன் - ரஷ்ய மொழி.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

  • தல்ஸ்தோயும் தமிழிலக்கியமும்.
  • தொட்டிலிருந்து சுடுகாடு வரை - தமிழ்ப்  பண்பாடுகளை விளக்கும் நூல்.
  • பிறப்பு முதல் இறப்புவரை.

இவரை ஈழ எழுத்தாளரான ஐயாத்துரை சாந்தன் தம்முடைய ரஷ்யாவும் தமிழும் என்ற கட்டுரையில் மூன்றாம் தலைமுறை ரஷ்ய தமிழறிஞர் என்று வரையறுக்கிறார்.

மறைவு

இவர் 1980-களின் பிற்பகுதியில் மறைந்தார்.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.