அபிநவக் கதைகள்

From Tamil Wiki
Revision as of 22:25, 7 May 2022 by Santhosh (talk | contribs)
அபிநவக் கதைகள்

அபிநவக் கதைகள் (1921 மூன்றாம் பதிப்பு) திருமணம் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய கதைகளின் தொகுப்பு. நவீன உரைநடையில் அன்றாடவாழ்க்கையைச் சித்தரிக்கும் இக்கதைகள் தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி வடிவங்கள். இத்தொகுதியிலுள்ள சுப்பையர் என்னும் கதையை தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று சொல்லலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எழுத்து, வெளியீடு

திருமணம் செல்வக்கேசவராய முதலியார் இக்கதைகளை 1887 முதல் வெவ்வேறு காலங்களில் எழுதினார். இத்தொகுதியிலுள்ள கற்பலங்காரம் சி.சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா இதழில் வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் முதல் பதிப்பு எப்போது வெளியானது என்று தெரியவில்லை. 1921ல் இக்கதைகளின் மூன்றாவது பதிப்பு வெளியானது, அந்த பிரதியே இணையச் சேகரிப்பில் உள்ளது.

உள்ளடக்கம்

செல்வக்கேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் நூலில் கற்பலங்காரம், தனபாலன், கோமளம், சுப்பையர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்னும் ஆறு கதைகள் உள்ளன.

கற்பலங்காரம்: ஓர் அரசன் கற்புக்கரசியான பெண் ஒருத்தியை சோதனைசெய்து பார்ப்பது பற்றிய கதை. நாட்டுப்புறக்கதைகளின் தன்மையுடன் எழுதப்பட்டது

தனபாலன்: கொடுக்கல்வாங்கல் செய்துவரும் ஒருவனின் பணத்தில் போலிக்காசுகள் கலந்திருந்தமையால் அவன் மரணதண்டனைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் உண்மை தெளிவடைந்து விடுதலையாகிறான்

கோமளம்: ஷேக்ஸ்பியரின் சிம்பலின் நாடகக்கதையை தழுவி எழுதப்பட்டது

சுப்பையர்: தீவிபத்தில் இறந்தார் என கருதப்பட்ட சுப்பையர் திரும்பிவரும்போது அடையும் சிக்கல்கள்

கிருஷ்ணன்: விடுமுறையில் தாய் தந்தையரைப் பார்க்கச் சென்றிருந்த ஒருவன் திரும்பிவர தாமதமானபோது ஒரு சிறு சூழ்ச்சி செய்வதனால் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான்

ஆஷாடபூதி: தனக்கு நன்மைகளைச் செய்த ஒருவருக்கு ஒருவன் ரகசியமாகச் செய்யும் துரோகம் பற்றிய கதை.

இக்கதைகளில் சுப்பையர் என்னும் கதை தமிழின் முதற்சிறுகதை என்னும் தகுதி கொண்டது என்று விமர்சகர்கள் சிலரால் கூறப்படுகிறது. (பார்க்க, சுப்பையர் (சிறுகதை) )

இலக்கிய இடம்

அபிநவக் கதைகளில் உள்ள கதைகள் அன்றாடவாழ்க்கையை நிகழ்த்திக் காட்டும் தன்மை கொண்டவை. இயல்பான உரையாடல்களுடன் நேரடியான மொழியில் உள்ளன. கதைகளில் உச்சமும் அமைந்துள்ளது. ஆகவே அவை தமிழின் முதல்சிறுகதைகள் என்று சொல்லத்தக்கவை. அபிநவக் கதைகள் என்னும் சொல்லே அவை புதியகதைகள் என்னும் எண்ணமும் செல்வக்கேசவராய முதலியாருக்கு இருந்ததைக் காட்டுகின்றது. புதுமைப்பித்தன் “தமிழ்ச் சிறுகதை வரலாற்றை செல்வக்கேசவராய முதலியார் எழுதிய அபிநவக் கதைகள் என்னும் சிறுகதைத் தொகுதியை தொடக்கமாக வைத்துக்கொண்டு கவனிக்கவேண்டும்.அப்படிக் கவனிக்கும்போது தமிழ்ச்சிறுகதையின் சாதனை பெருமைப்பட்டுக்கொள்ள கூடியதுதான்” என்று தன் ‘சிறுகதை’ என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை