நொண்டி நாடகம்
நொண்டி நாடகம் சிற்றிலக்கிய நாடக வகைமைகளுள் ஒன்று. மேடையில் தனி மனிதானாகத் தோன்றி நடிக்கும் கதைத் தலைவனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வதால் நொண்டி நாடகம் எனப் பெயர் பெற்றது. இதனை “ஒற்றைக்கால் நாடகம்” என்றும் அழைப்பர்.
திருசெந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம் ஆகியன குறிப்பிடத்தக்க நொண்டி நாடகங்கள்.
தோற்றம்
நொண்டி நாடகம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய நாடகக் கலை. இவை சிற்றிலக்கிய நாடக வகைகளுள் அடங்கும். பொது மக்களுக்காக மேடையில் நிகழ்த்தப்படும் நாடகம், மக்களுக்கு அறத்தினையும், ஒழுக்கத்தினையும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்நாடகம் செல்வாக்குப் பெற்றிருந்தது.
நொண்டி நாடகம்
நொண்டி நாடகம் இசையுடன் சேர்ந்தமைந்த இலக்கிய வகை. இது வெண்பாவும், ஆசிரியர்பாவும் கலந்து சிந்து, ஆனந்தக்களிப்பு ஆகிய பாவினங்களுடன் ஆகிய நாடகம்.
மக்களின் வழக்கு மொழியில் இந்நாடகம் ஆக்கப்பட்டிருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து வகை நொண்டி நாடகங்களும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பொது மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும்படி எளிய பாடல் வரிகளில் அமைந்திருக்கும்.
கதை
நொண்டி நாடகங்கள் அனைத்தும் பொதுவான கதைக் கருக்களைக் கொண்டவை. மேடையில் தோன்றும் கதைத் தலைவன் தன்னுடைய கடந்த கால வாழ்வை சொல்வதாக அமையும். கதையின் தொடக்கத்தில் அவன் பெற்றோரிடம் வளர்வான். அந்த வாழ்வு பிடிக்காமல் அவர்களை விட்டு வெளியேறுவதாகவும் நாடக கதைத் தொடங்கும். மகிழ்ச்சியான எதிர்காலத்தை எண்ணி வீட்டை வீட்டு வெளியேறும் கதைச்சொல்லி, சிறிது நாட்களில் கையில் உள்ள பொருள் முடிந்ததும் திருடத் தொடங்குவான். திருடிய பணத்தில் மதுவும், பெண்களும் என சந்தோஷமாக இருப்பான். பணத்தை இழந்து உதவிக்கு யாரும் இல்லாமல் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவான்.
பரத்தையரும் அவனைத் துரத்தி அடித்தபின் அவன் மேலும் தீய வழிகளுக்குச் செல்வான். அவன் ஒரு குதிரையைத் திருட முயற்சிக்கும் போது அகப்படுவான். அவர்கள் அவன் கை, கால்களைத் துண்டிப்பர். செய்த தவறை உணர்ந்து இறைவனிடம் வேண்டுவான். அவனுக்கு இறைவன் மன்னிப்பு கொடுத்து இழந்த கால்களை திரும்பத் தருவார். அதன்பின் திருந்தி கடவுளைத் துதித்து வாழ்வான்.
இது நொண்டி நாடகத்தின் பொதுவான கட்டமைப்பு. இதன் நாடக ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் நாடக கதையைக் கட்டமைப்பர். கதையின் தன்மைக்கு ஏற்ப அந்த மாறுபாடும் தேவைப்படும். உதாரணமாக திருசெந்தூர் முருகனை மையமாக கொண்டு திருசெந்தூர் நொண்டி நாடகம் அமையும், சீதக்காதி நொண்டி நாடகம் இசுலாமிய நெறியை மையப்படுத்தி அமையும்.
நாடக அமைப்பு முறை
நொண்டி நாடகத்தில் நொண்டி ஒருவனை மேடையில் தோன்றுவான். அவனே அவனது கதையைச் சொல்வான்.
கடவுள் வாழ்த்துடன் நாடகம் தொடங்கும். நொண்டி தனக்கு தானே கேள்வி கேட்ட பின் தனது நாட்டுவளம், கல்வி, மண வாழ்வு, பயணம் ஆகியவற்றைச் சொல்வான். அதன் பின் தீயோருடன் ஏற்பட்ட நட்பு அதன் பயனாக அவன் கால்களை இழந்ததைப் பற்றிக் கூறுவான். இந்த பகுதி இந்நாடகத்தின் மையக் கருத்தைக் கூறுவதால் அதிகமாக வலியுறுத்திக் கூறப்படும். நாடகம் குறிப்பிடும் குறிப்பிட்ட இறைத் தளத்தை அடந்து அங்கே அவன் கால்களை மீளப் பெருவதில் நாடகம் முடியும்.
திருவிடைமருதூர் நொண்டி நாடகம்
திருவிடைமருதூர் நொண்டி நாடகத்தின் ஆசிரியர் அனந்த பாரதி. இந்நாடகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது.
கடவுள் வாழ்த்து, தோடையம் (நாடகத்தின் முன்மொழிப்பாட்டு) ஆகியன் முடிந்ததும் நொண்டி மேடையில் தோன்றுவான். அவன் பொன்னியில் நீராடி, திருநீறு அணிந்து, சிவ நாமம் சொல்லி, கையில் குளிசக் கயிறும், மார்பில் ரச மணியும் தரித்து, மார்பில் முத்து மாலைகள் ஒளி வீசும் படி நொண்டி வருவான்.
பொன் சரிகைப் புள்ளி உருமாலை - வாகைப்
பூவணிந்து கட்டியுள்ளே மேவுமிந்திர சாலை
விஞ்சை மூலி ஒன்றை வைத்துக்காலை - நொண்டி
விளம்பரஞ் சபையிலாட விருதுகட்டினேனே.
என நொண்டி சிந்துவில் பாவமைத்து பாடுவான்.
