தி சிராங்கூன் டைம்ஸ் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 05:28, 4 May 2022 by Madhusaml (talk | contribs) (கனகலதா)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிங்கப்பூர்ச் சமூகம், கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு என்று பரந்துபட்ட வெளியில், அச்சிதழாகவும் இணையத்திலும், வெளிவரும் இடைநிலை மாத இதழ் 'தி சிராங்கூன் டைம்ஸ்'.

தொடக்கம்

முஸ்தஃபா அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ.முஸ்தஃபா, சிங்கப்பூரிலுள்ள  தமிழரின் சிந்தனைகளைப் பதிவு செய்யவும், சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்கான தளமாகவும் இலாப நோக்கின்றித் தொடங்கினார். ஜூன் 2010 முதல், சிறிய வடிவத்தில் ஐம்பது பக்க அளவில், கட்டுரை, கவிதை, சிறுகதை, செய்திச் சுருக்கம், தலையங்கம், திரைப்படச் செய்திகள், பத்தி எழுத்து, விளம்பரங்கள் போன்றவற்றுடன் இவ்விதழ் வெளியானது. ஆசிரியர் சந்திரசேகரன்.  

சில இதழ்களுக்குப் பின் நின்றுபோய் மீண்டும் ஆகஸ்ட் 2015 முதல் தொடர்ந்து வெளிவருகிறது. முதன்மை ஆசிரியர் ஷாநவாஸ். ‘சிங்கைத் தமிழரின் சிந்தனை’ என்ற பிரகடனத்துடன், 48 பக்கங்களில், சிங்கப்பூர் தொடர்பான ஆய்வுகள், செய்திகள், நேர்காணல், படைப்பிலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளியாகிறது.

பெயர்க் காரணம்

‘சிராங்கூன் என்பது வெறும் ஓர் இடத்தின் பெயர் மட்டும் அல்ல. சிங்கைவாழ் தமிழர்களின் இதயங்களோடு கலந்துவிட்ட ஓர் உணர்வு. அதைப் பிரதிபலிக்கும் வகையிலும் சிங்கையின் பழமையான ஆங்கில நாளிதழான 'தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' போல நீடித்து நிலைக்கவேண்டும்' என்ற நிறுவனரின் விருப்பத்திற்கு இணங்க 'தி சிராங்கூன் டைம்ஸ்' என்ற பெயரில் துவங்கப்பட்டது.

இணையம்

2021 ஜூன் மாதம் முதல் serangoontimes.com என்ற வலைதளத்தில் இணைய இதழாகவும் வெளியாகிறது[1].

இதழ் உள்ளடக்கம்

சிறுகதைகள், கவிதைகள், பல வேறுபட்ட தளங்களில் ஆய்வுக் கட்டுரைகள், சிங்கப்பூர் தொடர்பான வரலாற்றுத் தொடர்கள், துறைசார் திறனாளர்களின் ஆளுமைகளின் நேர்காணல்கள், பேச்சுக்கலை, சிற்பக்கலை, சட்டம் பற்றிய குறுந்தொடர்கள், வாசிப்பனுபவம், நூல் அறிமுகம், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிறப்புக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு, எழுத்தாளர் விழா போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிப் பதிவுகள், அண்மைச் செய்திகளின் சிறுதொகுப்பு எனப் பலவிதமான படைப்புகள் வெளியிடப்படுகின்றன.

ஆசிரியர்கள்

தொடக்கத்தில் சந்திரசேகரன் முதன்மை ஆசிரியராக இருந்தார். தவிர, எம்.கே.குமார், பாரதி மூர்த்தியப்பன், அழகுநிலா, பாண்டித்துரை, சித்ரா ரமேஷ், போன்ற பலரும் ஆசிரியர் குழுவில் பங்களித்துள்ளனர்.

2022ல் முதன்மை ஆசிரியராக ஷாநவாஸ் பணியாற்றுகிறார். சிவானந்தம் நீலகண்டன், மஹேஷ் குமார், ஜமால் சேக் ஆகிய மூவரும் தன்னார்வல ஆசிரியர்களாகப் பங்களித்துவருகின்றனர்.

படைப்பாளர்கள்

2015-2022 காலகட்டத்தில் வெளியான முதல் 75 இதழ்களில் 220 பேர் பங்களித்துள்ளனர். இவர்களுள் சுமார் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூர் வாசிகள்.

குறிப்பிடத்தக்க சாதனைகள்

புனைவு, அபுனைவு, கவிதை மொழிபெயர்ப்பு இலக்கிய வகைமைகளுக்கான குறிப்பிடத்தக்க தளமாக 'தி சிராங்கூன் டைம்ஸ்' விளங்குகிறது.

எடுத்துக்காட்டுகளாக, எம்.கே.குமாரின் 5:12 PM தொகுப்பிலிருக்கும் பல கதைகள் (சிங்கப்பூர் இலக்கியப்பரிசு 2018, தகுதிப்பரிசு), அழகுநிலாவின் 'சிறுகாட்டுச் சுனை' (2018) தொகுப்பின் பல கட்டுரைகள், ஹேமாவின் ‘வாழைமர நோட்டு’ (சிங்கப்பூர் இலக்கியப்பரிசு 2020, வெற்றிப்பரிசு) நூலின் அனைத்து கட்டுரைகள், சிவானந்தம் நீலகண்டனின் 'கரையும் தார்மீக எல்லைகள்' (மு.கு.இராமச்சந்திரா விருது 2021, வெற்றிப்பரிசு) நூலின் பலகட்டுரைகள், மாதந்தோறும் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுக்கப்பட்டு 'வண்ணம் தேடும் சொற்கள்' என்ற கவிதைத் தொகுப்பு நூல் (2021) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

'தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் சிங்கப்பூரில் இளையரைத் தமிழின்பால் ஈர்ப்பது' என்ற கொள்கையின்படி குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளைச் செய்துள்ளது. எடுத்துக்காட்டு, இளையர் சிறப்பிதழ் (ஆகஸ்ட் 2021) இளையரின் படைப்புகளைக்கொண்டே வெளியிட்டது. முக்கியமான சமூகவியல், வரலாற்று ஆய்வுகளை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே முடங்கிவிடாமல் சுருக்கி மொழிபெயர்த்து பொதுவாசிப்பிற்காக வெளியிட்டுவருவது.

முதல் 25 இதழ்களில் அறிமுகமான 50 படைப்பாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுடன் ‘காலச்சிறகு’ (நவம்பர் 2017) என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. 50-ஆவது இதழ் 98 பக்கங்களுடன் (டிசம்பர் 2019) வெளியானது. 75-ஆவது இதழ் 100 பக்கங்களுடன் (மார்ச் 2022) ஆகியவற்றை குறிப்பிடத்தக்க மைல் கற்களாகச் சொல்லலாம். தமிழக நூலகங்களில் வாங்கப்படும் இதழ்களின் பட்டியலில் ஏப்ரல் 2022-இல் ' தி சிராங்கூன் டைம்ஸ்' சேர்க்கப்பட்டது.

குறிப்புகள்