under review

அஞ்சுவண்ணம்

From Tamil Wiki
Revision as of 12:42, 3 May 2022 by Santhosh (talk | contribs)

அஞ்சு வண்ணத்தார், அஞ்சுவண்ணம் என்பது இஸ்லாமிய அடையாளங்களில் ஒன்றாக சொல்லப்படுவது. அஞ்சுவண்ணம் ஜமாஅத் போன்ற சொல்லாட்சிகள் தமிழகத்தில் புழக்கத்திலுள்ளன. இது அஞ்சுமன் என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கூறுவர். 

சொல்காரணம்

அஞ்சுமன் என்பது தொண்டியிலிருந்து சில கல் தொலைவிலுள்ள ஒரு முஸ்லீம் குடியேற்றத்தையே குறிக்கும் என்றும் அது பாசிப்பட்டணத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வூரில் குடியேறி வாழ்ந்த முஸ்லீம்கள் ஓர் அஞ்சுமன் (சபையை) நிறுவி இருந்தனர் என்றும் அவர்களுக்கு அக்காலப் பாண்டிய மன்னர்கள் பலவித சலுகைகளை வழங்கி இருந்தனர் என்றும் அவர்களில் எவரேனும் தவறு செய்தால் அவரை தண்டிக்கும் தனி அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பெற்றிருந்தது என்றும் தெரிய வருகிறது என்று நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய ‘பாண்டிய அரசாங்கம்’ என்னும் நூலில் காணப்படுகிறது. அதன் காரணமாகவே அக்காலத்தில் இங்குள்ள மக்கள் முஸ்லீம்களை அஞ்சு வண்ணத்தார் என்று அழைத்தனர் என சிலர் கூறுகின்றனர்.

ஆனால் வேறு சிலரோ இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளைக் குறிக்கும் என்றும் அவற்றை தம் கொள்கைகளாகக் கொண்டதன் காரணமாக முஸ்லீம்களுக்கு இப்பெயர் ஏற்பட்டதென்றும் கூறுகின்றனர். வேறு சிலரோ முஸ்லீம்கள் நாள் ஒன்றிற்கு ஐந்து வேளை தொழுவதன் காரணமாக அவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டதென்று கருதுகின்றனர். இப்பொழுது தமிழ்நாட்டில் பல ஊர்களில் அஞ்சுவண்ண ஜமாஅத்  மஸ்ஜித் என்ற பெயருடன் பள்ளி வாயில்கள் உள்ளன.  

உசாத்துணை

  • இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்- அப்துற் றஹீம்
  • அஞ்சுவண்ணம் தெரு (நாவல்) - தோப்பில் முகமது மீரான்


✅Finalised Page