மாத்வ மித்திரன்
- மித்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மித்திரன் (பெயர் பட்டியல்)
மாத்வ மித்திரன் த்வைத சமயம் சார்ந்த தமிழ் இதழ். 1928 முதல் கும்பகோணத்தில் இருந்து வெளிவந்தது. ரங்கநாதாச்சாரிய பாகவதர் இவ்விதழின் ஆசிரியர். மாத்வ சமயம் சார்ந்து தமிழில் வெளிவந்த அக்காலத்தின் ஒரே தமிழ் இதழ் மாத்வ மித்திரன்.
பதிப்பு, வெளியீடு
1900-ங்களில் சைவ, வைணவ சமயம் சார்ந்து பல்வேறு இதழ்கள் வெளிவந்தன. அது போல் த்வைத சமயத்திற்கும் இதழ் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்று கும்பகோணத்தைச் சேர்ந்த பாகவதர் ரங்கநாதாச்சாரியர் விரும்பினார். 1928-ல், கும்பகோணத்தில், மாத்வ மித்திரன் இதழைத் தொடங்கினார். மத்வ சித்தாந்தத்தைப் பரப்புவதே இதழின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு பௌர்ணமி தோறும் இதழ் வெளிவந்தது. மாத்வர்களின் சமய விளக்கக் கொள்கைகள் கொண்டஇதழாக இது இருந்தது.
இதன் வருட சந்தா: மூன்று ரூபாய். பக்கங்கள்: 28. தனிச்சுற்று இதழாக மட்டுமே இவ்விதழ் வெளிவந்தது. சந்தாதாரர்களுக்கேற்ப குறைந்த பிரதிகளே அச்சடிக்கப்பட்டது. தனிப்பிரதியாக விற்பனை செய்யப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவந்த இந்த இதழ் பொருளாதாரச் சிக்கல்களால் நின்று போனது.
உள்ளடக்கம்
“மாத்வர்களின் சாஸ்திரீயமான தமிழ் பத்திரிகை இது ஒன்றே. ஸ்ரீ மத்வ மதத்தின் அரிய இரகசியங்கள், ஸம்பிரதாயங்கள், மாகாத்மியங்கள், புராண சரிதைகள், மாத்வ வகுப்பு புண்ய புருஷர்களின் சரித்திரங்கள், வேதாந்த சர்ச்சைகள், தர்ம சாஸ்திர விசாரங்கள், தினசரி விரதாதி குறிப்பு, மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் முதலான அநேக கிரந்தங்களின் மொழிபெயர்ப்புகள் முதலிய எண்ணிறைந்த விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீ மத்வ மதத்தை சுலபமாய் அறிந்து கொள்ள இப்பத்திரிகைக்கு உடனே சந்தாதாரர்களால் சேருங்கள்” என்ற குறிப்பு, மாத்வ மித்திரன் இதழில் இடம் பெற்றுள்ளது.
இவ்விதழில் பகவத்கீதை விளக்கம், ஹரிகதாம்ருதஸாரம், ஸ்ரீ ஆச்சார்யார் சர்வமூல கிரந்தம், ஸ்ரீமாத்வ விஜயம், குரு ஆபோத தௌம்யர், த்வைத வேந்தாந்த பால சிக்ஷை, உபநிஷதம், ஹரி வாயுஸ்துதி, ஸங்கிரஹ ராமாயணம், ஸ்ரீ ரகோத்தம ஸ்வாமிகள் ஆராதனை, விசேஷ தினக் குறிப்புகள் போன்ற பல தலைப்புகளில் கட்டுரைகள், தொடர்கள் வெளியாகியுள்ளன.
திருமண விளம்பரங்கள் உள்பட விளம்பரங்கள் சிலவும் இதழில் இடம் பெற்றன. வடமொழிச் சொற்கள் அதிகம் கலந்த மணிப்பிரவாள நடையில் இந்த இதழ் வெளிவந்தது.
மாத்வ மித்திரன் பிரசுரங்கள்
ராகவேந்திரர் வரலாறு, மாத்வ மித்திரன் இதழ் தொகுப்பு, கும்பகோண மகாத்மியம், துதிகள், பாராயண நூல்கள் என பல்வேறு நூல்களை ‘மாத்வ மித்திரன்’ தனது பிரசுரமாக வெளியிட்டது.
ஆவணம்
மாத்வ மித்திரன் இதழின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.
வரலாற்று இடம்
மாத்வ சமயம் சார்ந்து தமிழில் வெளிவந்த ஒரே இதழாக மாத்வ மித்திரன் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Aug-2023, 01:08:38 IST