under review

கனக. அஜிததாஸ்

From Tamil Wiki
Revision as of 11:24, 15 October 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:மதம்:சமணம் to Category:சமணம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பேராசிரியர், டாக்டர் கனக. அஜிததாஸ்

கனக. அஜிததாஸ் (க. அஜிததாஸ்; பேராசிரியர் க. அஜிததாஸ்; டாக்டர் கனக. அஜிததாஸ்; பேராசிரியர் கனக. அஜிததாஸ்; முனைவர் கனக. அஜிததாஸ்) (பிறப்பு: பிப்ரவரி 05, 1948) தமிழ்ப் பேராசிரியர். சமண சமய ஆய்வாளர்; எழுத்தாளர்; கட்டுரையாளர், நாடக ஆசிரியர். சமண சமயம் சார்ந்து பல ஆய்வுகளை முன்னெடுத்தார். நூல்களை எழுதினார். முக்குடை என்னும் சமண சமயத் திங்களிதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

கனக. அஜிததாஸ் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள நெல்லியாங்குளம் என்ற ஊரில் கனகசாந்தி நைனார் – சுனந்தா இணையருக்கு, பிப்ரவரி 05, 1948-ல் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று தாவரவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறையில் பயின்று ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

தனி வாழ்க்கை

கனக. அஜிததாஸ், பேராசிரியராகப் பணியாற்றினார். மணமானவர்.

கல்விப் பணிகள்

கனக. அஜிததாஸ், சென்னை மாநிலக் கல்லூரியில் 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாடு பாடநூல்கழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்புக்குழுத் தலைவராகவும், சென்னைப்பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்தார்.

தாவர உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ பூஞ்சைசையியல்(Mycology) ஆகியவற்றில் 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

கனக. அஜிததாஸ், சமணம் சார்ந்த பல இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். சமணக் கையெழுத்துப் பிரதிகள் பண்டைக் கல்வெட்டுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சமணம் சார்ந்த பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சமூகப் பணிகளிலும், சமண சமய முன்னெடுப்புகளிலும் முன்னின்று உழைத்தார். 'ஜைனம் ஓர் அறிமுகம்', 'திருப்பருத்திக்குன்றம் சமண ஆலயங்கள்'போன்ற கனக. அஜிததாஸின் நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்கள் மற்றும் த்ரிஷஷ்டி சலாக புருஷர்களான அறுபத்து மூன்று சான்றோர்கள் பற்றிய விரிவான வரலாறுகளை முக்குடை இதழில் பல ஆண்டுகள் தொடராக எழுதினார்.

ஜைன இளைஞர் மன்றம் மூலம் பல நூல்கள் வெளிவர உறுதுணையாகச் செயல்பட்டார். சமண சமயப் பாரம்பரியச் சின்னங்கள், குன்றுகள், கல்வெட்டுகள், பாறைச் சிற்பங்கள், சமய நிகழ்ச்சிகள், அறிஞர்களது நேர்காணல்கள் மற்றும் சமண சமயம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இணையத்தில் காணொளியாகப் பதிவு செய்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதழ்களில் சமணம் சார்ந்து பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.

பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாடகங்களையும், ஒரு நாவலையும் எழுதினார்.

மொழிபெயர்ப்பு

கனக. அஜிததாஸ் மொழிபெயர்ப்புக்கும் முக்கியப் பங்களித்தார். மணிப்பிரவாளத்திலிருந்த ஸ்ரீபுராணம் காவியத்தை எளிய தமிழில் மொழியாக்கம் செய்tதார். சமணத் தத்துவ நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தளித்தார்.

இதழியல்

கனக. அஜிததாஸ், சமண சமயத் திங்களிதழான முக்குடை இதழின் ஆசிரியர்.

பொறுப்பு

கனக. அஜிததாஸ், அகிம்சை நடைக் குழுவின் தலைவராகப் பணிபுரிந்தார். தமிழகமெங்குமுள்ள பல சமண ஆலயங்கள், குன்றுகளுக்கு ஆர்வமுள்ளவர்களை அழைத்துச் சென்று சிறப்புரையாற்றினார்.

மதிப்பீடு

கனக. அஜிததாஸ், யூ ட்யூப் தளம்மூலம் தொன்மையான சமண ஆலயங்கள் குறித்தும், விழாக்கள், சமண மன்றச் செயல்பாடுகள் குறித்தும் ஆவணப்படுத்தி வருகிறார். தமிழின் சமணம் சார்ந்த குறிப்பிடத் தகுந்த எழுத்தாளராகவும், ஆய்வாளராகவும், சொற்பொழிவாளராகவும் கனக, அஜிததாஸ் அறியப்படுகிறார்.

நூல்கள்

ஆய்வு நூல்கள்
  • ஜைனம் ஓர் அறிமுகம்
  • திருப்பருத்திக்குன்றம் சமண ஆலயங்கள்
  • தமிழைச் செம்மொழியாய் வளர்த்த திராவிட திகம்பர சமண முனிவர்களும் அவர்கள் வழங்கிய அருள் நெறியும்
  • வழிபாட்டில் உள்ள சமண ஆலயங்கள் (ஆங்கிலம்)
நாடகங்கள்
  • மவுனியே மன்னித்தருள்க
  • யார் சாட்சி
  • நாகபவனம்
நாவல்
  • கற்பக மலர்

மற்றும் பல சிறுகதைகள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 17:58:07 IST