64 சிவவடிவங்கள்: 57-கருடாந்திக மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கருடாந்திக மூர்த்தி. (கருடன் அருகிருந்த மூர்த்தி)
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஐம்பத்தி ஏழாவது மூர்த்தம் கருடாந்திக மூர்த்தி. நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்கு உதவியதால் சிவபெருமானுக்கு கருடாந்திக மூர்த்தி (கருடன் அருகிருந்த மூர்த்தி) என்ற பெயர் ஏற்பட்டது.
தொன்மம்
திருமால் ஒரு சமயம் சிவபெருமானைத் தரிசனம் செய்ய விரும்பினார். தனது வாகனமான கருடன் மீதேறிச் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையை அடைந்தார். நந்தி தேவரின் அனுமதியுடன் சிவபெருமானைக் காணச் சென்றார். கருடன் வெளியே காத்திருந்தார்.
திருமால், சிவபெருமானைத் தரிசிக்கச் சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராததால், கருடன் தானும் உள்ளே செல்ல முயன்று நந்திதேவரால் தடுக்கப்பட்டது. அனுமதி மறுத்தார். கோபம் கொண்ட கருடன், நந்திதேவரைப் பார்த்து, “என்னைத் தடுக்க நீயார்? நீ சுடலையாடியின் வாகனம். உன்னை விரைவில் கொல்வேன்” என்று நந்திதேவரைத் தாக்க முயற்சித்தது. நந்திதேவர் தனது மூச்சுக் காற்றை இழுத்துவிட நந்திதேவர் அந்தக் காற்றின் வேகம் கருடனை மிக தூரத்திற்குத் தூக்கிச் சென்று போட்டது. நந்தி தேவர் மீண்டும் மூச்சை இழுத்ததும் காற்றின் வேகத்தில் உறிஞ்சப்பட்ட கருடன் மீண்டும் தான் இருந்த அதே இடத்திற்கு வந்தார். நந்திதேவர் விட்ட மூச்சுக் காற்றால் கருடன் அங்கும் இங்கும் அலைபாய்ந்து திருமாலிடம் தன்னைக் காக்க வேண்டினார்.
திருமால் கருடனை, நந்திதேவரிடமிருந்து காக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார். கருடனை மன்னித்த சிவபெருமான், நந்திதேவரை அழைத்துக் கருடனை விடுவிக்குமாறு ஆணையிட்டார். கருடன் தன் கர்வம் அடங்கிப் பின் பழையபடி திருமாலுடன் பாற்கடல் சென்றார். நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்கு உதவியதால் சிவபெருமானுக்கு கருடாந்திக மூர்த்தி (கருடன் அருகிருந்த மூர்த்தி) என்ற பெயர் ஏற்பட்டது.
வழிபாடு
குடந்தை - ஆவுர் செல்லும் வழியில் உள்ள பட்டீஸ்வரத்தில் கருடாந்திக மூர்த்தியின் சிலா வடிவம் உள்ளது. மூலவர் பட்டீஸ்வர நாதர் (தேனுபுரீஸ்வரர்) இறைவி பெயர் பல்வளைநாயகி, ஞானாம்பிகை . இங்குள்ள இறைவனுக்கு தும்பை மலர் அர்ச்சனையும் வெண்பொங்கல் நைவேத்தியமும் சனிக்கிழகைளில் அளித்து வழிபட, செல்வமும், புகழும், மதிநுட்பமும் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 17:55:01 IST