64 சிவவடிவங்கள்: 49-ஜலந்தரவத மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ஜலந்தரவத மூர்த்தி
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி ஒன்பதாவது மூர்த்தம் ஜலந்தரவத மூர்த்தி. தேவர்களின் துயர்துடைக்க ஜலந்தரனை வதம் செய்த சிவ மூர்த்தமே ஜலந்தரவத மூர்த்தி. ஜலந்தரனின் தலையை சக்கராயுதத்தால் பிளந்து வதம் செய்ததால் கையில் சக்கரம் ஏந்தியிருப்பார்.
தொன்மம்
தேவர்களின் தலைவனான இந்திரன், கயிலை சென்று சிவபெருமானை வணங்க விரும்பினான். தான் என்ற ஆணவத்துடன் சென்ற அவனது ஆணவத்தை அழிக்க விரும்பிய சிவபெருமான், கயிலை செல்லும் வழியின் வாயிலில் துவாரபாலகர் போல் உருமாறி நின்றார். இந்திரன், துவாரபாலகன் என நினைத்து பல கேள்விகளைக் கேட்டான். எதற்கும் பதில் வராததால் சினம் கொண்ட இந்திரன் தன்னுடைய வஜ்ராயுதத்தால் துவாரபாலகரை அடித்தான். வஜ்ஜிராயுதம் தவிடுபொடியானது. சீற்றம் கொண்ட சிவபெருமான் ருத்ரவடிவம் கொண்டார். இந்திரன் தனது ஆணவம் அழிந்து சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினான். சிவனும் அவனை மன்னித்து தனது கோபத்தை உடலிலிருந்து அகற்றிக் கடலில் எறிந்தார்.
கடலில் விழுந்த அது ஒரு குழந்தையானது. அக்குழந்தையைக் கடலரசன் வளர்த்தான். கடலரசன், பிரம்மாவிடம் அக்குழந்தைக்குப் பெயர் சூட்ட வேண்டினான். பிரம்மா அக்குழந்தையைக் கொஞ்சும் போது அக்குழந்தை பிரம்மாவின் தாடியைப் பிடித்து இழுத்தது. வலி தாங்காமல் பிரம்மா கண்ணீர் சிந்தினார். அக்கண்ணீர் குழந்தை மீது பட்டது. அதனால் அக்குழந்தைக்கு பிரம்மா ஜலந்தரன் என்று பெயர் சூட்டினார்.
ஜலந்தரன் வளர்ந்தவுடன் அசுரர்களுடன் சேர்ந்து பலவகையான ஆற்றல்களைப் பெற்றான். பிரம்மாவை நோக்கி தவம் செய்து பல வரங்களைப் பெற்றான். உலகை வெற்றிகொண்ட அவன், ‘ஜலந்தபுரம்’ என்ற அழகிய நகரை உருவாக்கினான். காலநேமி என்பவரது மகளான பிருந்தையை மணம் புரிந்து வாழ்ந்தான்.
தேவர்களுடன் போரிட முடிவு செய்த ஜலந்தரன், மேருமலைக்குச் சென்றான். அங்கிருந்த தேவர்கள் பயந்து திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர். திருமால் ஜலந்தரனுடன் இருபதினாயிரம் ஆண்டுகள் போரிட்டார். போரின் முடிவில் ஜலந்தரனே வென்றான். திருமாலின் பாராட்டையும் பெற்றான்.
தேவர்களின் தலைவனான இந்திரன், ஜலந்தரனுக்குப் பயந்து திருக்கயிலையிலேயே தங்கியிருந்தான்.னவனைத் தேடி ஜலந்தரன் கயிலைக்குச் சென்றான். அதனால் பயந்துபோன இந்திரனின் பயத்தைப் போக்கிய சிவபெருமான், ஜலந்தரனை அழிப்பதாக இந்திரனுக்கு வாக்குறுதி அளித்தார். அதன்படி வயதான முனிவர் போல் தளர்ந்த உடலுடனும், கையில் கமண்டலத்துடன், தடியை ஊன்றி நின்றார். அவரது சேனைகள் அவர் பின்னால் நின்றன.
கயிலைக்கு வந்த ஜலந்தரனை வழிமறித்த சிவபெருமான், அவனைப் பற்றி விசாரித்தார். ஜலந்தரன் தன்னைப் பற்றியும் தன் தந்தையைப் பற்றியும் கூறி, சிவபெருமானுடன் போரிட வந்துள்ளதாகத் தெரிவித்தான். முதியவராக இருந்த சிவபெருமானோ சிரித்துக் கொண்டே, ’சிவனை எதிர்த்தால் ஒரு நொடியில் அழிவாய்’ என்றார். சீற்றம் கொண்ட ஜலந்தரன் அவரிடம் தன் ஆற்றலைக் காட்டினான்.
வயதான தோற்றத்தில் இருந்த சிவபெருமான், ஜலந்தரனிடம், ’நான் சிவனுக்கு அடுத்தநிலையில் உள்ளவன். எனவே இந்தச் சக்கரத்தை உன்தலையில் வை பார்ப்போம்’ என்று கூறி, தனது பாதத்தால் தரையைக் கீறி ஒரு சக்கரத்தை உருவாக்கினார். உடனே ஜலந்தரன் அதனை எடுத்துத் தன் தலைமேல் வைக்க அது அவனை இருகூறாக்கியது. பின் சிவனிடம் தஞ்சமடைந்தது.
ஜலந்தரன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார்.
சிவபெருமான் அசுரக்கூட்டத்தை அழித்தார். ஜலந்தரன் அழிந்ததால் தேவர்கள் மகிழ்ந்தனர். அவரவர் பதவியை மீண்டும் அடைந்தனர்.
இவ்வாறு தேவர்களின் துயர்துடைக்க ஜலந்தரனை வதம் செய்த மூர்த்தியே ஜலந்தரவத மூர்த்தி.
வழிபாடு
ஜலந்தரவத மூர்த்தியை திருவாருர் அருகேயுள்ள திருவிற்குடியில் தரிசிக்கலாம். இது அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. இங்குள்ள இறைவன் பெயர், வீரட்டானேஸ்வரர். இறைவி, பரிமளநாயகி. இங்குள்ள ஜலந்தரவத மூர்த்தி பின் இரு கரங்களில் மானும், மழுவும் , முன் வலக்கரத்தில் சக்கரமும் முன் இடக்கரத்தில் கத்திரி முத்திரையும் ஏந்தியிருக்கிறார். இங்குள்ள சங்கு, சக்கர, ஞான தீர்த்தங்களினால் ஜலந்தரவத மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபடுபவர்களின் தீராத துயரம் தீரும் என்பது ஐதீகம். மஞ்சள் நிற மலர் கொண்டு அர்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் அளித்து, செவ்வாயன்று இத்தல இறைவனை வழிபட விஷப்பூச்சிகள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களினால் ஏற்படும் தொல்லை அழியும் என்ற நம்பிக்கை உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 17:59:22 IST