64 சிவவடிவங்கள்: 41-ஷேத்திரபால மூர்த்தி
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ஷேத்திரபால மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி ஒன்றாவது மூர்த்தம் ஷேத்திரபால மூர்த்தி. அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களைக் காத்ததால் சிவபெருமானுக்கு ஷேத்திரபால மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
தொன்மம்
ஊழிக்காலத்தில், இந்த அண்டங்கள் உலகங்கள் அனைத்தும் அழியும்படி பெரு வெள்ளம் தோன்றியது. அந்த வெள்ளத்தில் தேவர்கள் முதற்கொண்டு நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், எட்டு திசைக் காவலர்கள், உலகத்தில் உள்ள பறப்பன, ஊர்வன, தாவரங்கள், மனிதர்கள் என அனைவரும் மூழ்கினர். இறைவன் ஓம் என்னும் பிரணவத்தில் அனைவரையும் ஒடுக்கிக் காப்பாற்றி அருளினார். நீண்ட நாட்கள் ஓம் என்னும் பிரணவத்திலேயே அனைவரும் ஒடுங்கிய நிலையிலேயே இருந்தனர்.
மான், மழு ஏந்தி பாம்பு, புலித்தோலாடை அணிந்து கொன்றை மலர் சூடி, சிவபெருமான் பார்வதியுடன் தம்பதி சமேதராக தன்னுடைய ஓம் என்னும் பிரணவத்தில் ஒன்றிய அனைவரையும் எழுப்பினார். அழிவுக்குக் காரணமான வருணன் அவர்களை வணங்கி தம்பதி சமேதரான இறைவனுக்கும், இறைவிக்கும் முத்து, பவளம் கொண்டு அர்ச்சித்து ஆசிவேண்டினார்.. சிவபெருமான் அருளாசி வழங்கினார். பின்னர் வெள்ளத்தை நிறுத்தினார். தேவர்களை அவரவர் பணியில் அமர்த்தி அனைத்து உயிரினங்களையும் ஈரேழு உலகத்தையும் மீண்டும் சிருஷ்டி செய்தார்.
அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களைக் காத்ததால் அவருக்கு ஷேத்திரபால மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
வழிபாடு
கரூரில் உள்ள பசுபதீசுவரர் கோயிலில் சிவன் ஷேத்திரபாலராக அருள்பாலிக்கிறார். இவரது படத்தை வைத்து வழிபட, தீமைகள் விலகும், எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். நவமுக ருத்திராட்ச அர்ச்சனையும், இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் அளித்து வழிபட தொழில் விருத்தியடையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:04:02 IST