64 சிவவடிவங்கள்: 40-வடுக மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று வடுக மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பதாவது மூர்த்தம் வடுக மூர்த்தி. நான்முகனின் வேண்டுகோளிற்கேற்ப சிவபெருமான் முண்டாசுரனை அழிக்க எடுத்த திருக்கோலமே வடுக மூர்த்தி.
தொன்மம்
சிவ அர்ச்சனையால் பலனடைந்தவன் துந்துபி. அவன் மகன் முண்டாசுரன். இவன் இளமையிலேயே சிவபெருமானை நோக்கி, உணவு, உறக்கமின்றி, வெயில், மழை, குளிரெனப் பாராமல், ஐம்புலனையும் அடக்கிச் சிவபெருமானை மட்டுமே சிந்தையில் கொண்டு தவம் செய்தான். அவனது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான் நான்முகன், திருமால் இருபுறம் வரவும், தும்புரு முனிவர் இசைபாடவும், பார்வதியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார் முண்டாசுரன் மகிழ்ந்தான், பின் யாராலும் அழிக்க வொண்ணாத வரம் கேட்டான். கேட்டபடி வரம் கொடுத்து மறைந்தார் சிவபெருமான்.
அவ்வரத்தினால் தேவர்கள், சந்திர, சூரியர், குபேரன் என அனைவரையும் துன்புறுத்தினான் முண்டாசுரன். பின்னர் குபேரனின் சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டுசென்றான். தேவர்கள் அனைவரும் அவனுடன் போர்புரிந்து தோற்றனர். எனவே நான்முகனைச் சரணடைந்தனர். நான்முகன் முண்டாசுரனை அழிக்கப் புறப்பட்டார். இரு படைகளுக்கும் கடும் போர் நடைபெற்றது. நான்முகனால் அசுரனை வெற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் நான்முகன் சிவபெருமானை வணங்கி, “ஐயனே! எனது துயர் தீர உதவ வேண்டும். அசுரனை அழிக்க வேண்டும்” என்று மனமுருக வேண்டினார். அவ்விண்ணப்பத்தைக் கேட்ட சிவபெருமான் தன்னிலிருந்து வடுக மூர்த்தியைத் தோற்றுவித்தார். வடுக மூர்த்தியிடம் முண்டாசுரனை வதம் செய்யும்படி ஆணையிட்டார்.
வடுக மூர்த்தியும் போர் நடக்குமிடம் சென்று முண்டாசுரனை ஒரு நொடியில் வதம் செய்தார். இதனைக் கண்ட நான்முகன் மனம் மகிழ்ந்தார். தேவர்கள் பூமாரிப் பொழிந்து வடுக மூர்த்தியை வாழ்த்தினர். பின்னர் வடுக மூர்த்தி தேவர்கள் அனைவரையும் விடுவித்து அவரவர் இடத்தில் அமர்த்திப் பின் சிவபெருமானிடம் சென்று ஐக்கியமானார்.
நான்முகனின் வேண்டுகோளிற்கேற்ப சிவபெருமான், முண்டாசுரனை அழிக்க எடுத்த திருக்கோலமே வடுக மூர்த்தி
வழிபாடு
பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள வடுகூரில் சிவன் வடுக மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இறைவன் பெயர் வடுகநாதன், வடுகூர் நாதன் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி திரிபுரசுந்தரி. (திருவாண்டார் கோயில் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது) இங்கு வாமதேவ தீர்த்தம் உள்ளது. வன்னி மரம் தலமரமாக உள்ளது. கார்த்திகை அஷ்டமியில் இங்கு பைரவர்க்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
இந்த ஆலயத்தில் ஏழரைச் சனியின் துன்பம் அகல சனி தோறும் வடுக மூர்த்திக்கு முன்பமர்ந்து சகஸ்ரநாமம் சொல்லி வழிபடும் வழக்கம் உண்டு. பூஜையுடன் தேனாபிஷேகம் செய்து 9 முறை அர்ச்சனை செய்தால் வழக்குகளில் வெற்றி ஏற்படும் என்றும், ஞாயிறன்று வடுகருக்கு விபூதி அபிஷேகம் செய்யத் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும், புதனன்று வெண்தாமரை அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:04:53 IST